Published:Updated:

லித்தியம் பேட்டரி வணிகத்திலும் தொடரும் சீன ஆதிக்கம்; 2030 இலக்கை அடையுமா இந்தியா?

Electric Cars
Electric Cars ( Image by Gerd Altmann from Pixabay )

லித்தியம்-ஐயான் பேட்டரி வர்த்தகத்தின் மீது உலக அளவில் இதுவரை வேறு எந்த நாடுமே சீனா அளவுக்கு ஆதிக்கம் செலுத்தவில்லை. சமீபத்தில் சீனாவோடு இந்தியாவுக்கு அதிகரிக்கும் முரண்பாடுகள், இந்தியாவின் பேட்டரி சார்பைச் சிக்கலில் தள்ளியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தன்னுடைய மொத்த ஆற்றல் உற்பத்தியில், 40% ஆற்றலை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதோடு, மொத்த வாகனங்களில் 30 - 40% வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவனவாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது. இது நம்மிடையே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. இந்த இலக்கை அடைவதற்கு, இந்தியா தயாராக இருக்கிறதா?

Electric Car
Electric Car
Image by andreas160578 from Pixabay

ஒரு பேட்டரியில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து, விநியோகிக்க ஏதுவாக மூன்று முக்கியமான பாகங்கள் இருக்கும். எந்தத் தொழில்நுட்பத்துக்காக பேட்டரி பயன்படுத்தப்படும் என்பதைப் பொறுத்து, பல்வேறு வகையான கனிமங்கள் அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம், கோபால்ட், நிக்கல், செம்பு, கிராஃபைட் ஆகியவையே, நாம் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் லித்தியம் ஐயான் பேட்டரிகளைத் தயாரிக்கத் தேவைப்படுகின்றன. கைபேசிகளில் தொடங்கி, மின்சார கார்களிலிருந்து பெரிய மின் கட்டமைப்புகள் வரையுமே அது பயன்படுகிறது.

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதி ஆயோக் அறிக்கையில் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் (Energy Storage Mission) தலைவரான அமான் ஹான்ஸ், ``போதுமான அளவுக்கு மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு பேட்டரிகளை விநியோகிக்க முடிந்தால், இந்தியா எண்ணெய்-சார் நாடாக இருப்பதிலிருந்து முழுவதும் பேட்டரி-சார் நாடாக மாறிவிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதில் அதிகபட்சமாக வெளிநாட்டு இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது. 2019-20 நிதியாண்டில் மட்டும் இந்தியா 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான லித்தியம் ஐயான் பேட்டரிகளை இறக்குமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டிலும் அதே கதைதான். 2014-15 நிதியாண்டில் இருந்ததைவிட இது ஆறு மடங்கு அதிகம். இந்தியா ஆற்றல் உற்பத்தியில் மாற்றங்களைச் செய்வதற்குத் தேவைப்படும் இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியையே, குறிப்பாக சீனாவையே சார்ந்துள்ளது.

பேட்டரிக்கான கனிமங்கள் உலகம் முழுக்கப் பரவலாகக் கிடைப்பதில்லை. அவை ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிகளவில் இருக்கின்றன. லித்தியம் என்ற கனிமத்தை எடுத்துக்கொண்டால், அர்ஜென்டினா, பொலிவியா, சிலி ஆகிய நாடுகளில்தான் உலகின் 54% லிதியம் இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் லித்தியம் முக்கோணம் (lithium triangle) என்று அழைக்கப்படுகின்றன.

Electric Vehicle
Electric Vehicle
Image by Nerijus jakimavičius from Pixabay

ஆனால், அதன் உற்பத்தியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாதான் உலகளாவிய லித்தியம் வர்த்தகத்தில் 49 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. அதைத் தொடர்ந்து சிலி மற்றும் சீனா, முறையே 22 மற்றும் 17% பங்கு வகிக்கின்றன. லித்தியம் போன்ற மற்றுமொரு கனிமமான கோபால்ட், மொத்த இருப்பில் 68 சதவிகிதம் காங்கோ குடியரசில்தான் கிடைக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 20 சதவிகிதம் கிடைக்கிறது. இதுபோக, சீனாவில் ஒரு சதவிகிதம் கோபால்ட் கையிருப்பு மட்டுமே இருந்தாலும், காங்கோவிலுள்ள 14 பெரிய கோபால்ட் சுரங்கங்களில் 8 சுரங்கங்கள் சீனாவுக்குச் சொந்தமானது. அதாவது, காங்கோவின் மொத்த கோபால்ட் உற்பத்தியில் பாதிக்கும் அதிகமானவற்றினுடைய கட்டுப்பாட்டை, சீனா தன் வசம் வைத்துள்ளது.

லித்தியம்-ஐயான் பேட்டரி வர்த்தகத்தின் மீது உலக அளவில் இதுவரை வேறு எந்த நாடுமே சீனா அளவுக்கு ஆதிக்கம் செலுத்தவில்லை. சமீபத்தில் சீனாவோடு இந்தியாவுக்கு அதிகரிக்கும் முரண்பாடுகள், இந்தியாவின் பேட்டரி சார்பைச் சிக்கலில் தள்ளியுள்ளது. ஆகவே, சுயசார்பும், உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா தன்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டே மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக FAME (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. தற்போது, பெருந்தொற்றுப் பேரிடரிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாக, உற்பத்தி-சார் ஊக்கத்தொகை (Production Linked Incentive) திட்டத்தின் கீழ், மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் முதலீடு செய்வதற்காக 18,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், உற்பத்தியாளர்களுக்கு ஐந்து ஆண்டுக்காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் பேட்டரி உற்பத்திக்குத் தேவைப்படும் மின்முனைகள் மற்றும் மின் அயனிகள் போன்ற உதிரிபாகங்களை பெருமளவில் இறக்குமதி செய்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும். பேட்டரி உற்பத்தியை எந்தளவுக்குத் திறம்பட ஒரு நிறுவனம் மேற்கொள்கிறது என்பதைப் பொறுத்து மேற்கூறிய நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Transportation (Representational Image)
Transportation (Representational Image)
Image by S. Hermann & F. Richter from Pixabay

இந்தியா 50 ஜிகாவாட் பேட்டரி சேமிப்பு தொழிற்சாலைகளை உருவாக்கும் திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளில் கொண்டுவரப்போவதாக நிதி ஆயோக் போக்குவரத்துத் துறை ஆலோசகர் அனில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். ஆனால், உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபடும்போது, உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்தி பேட்டரி உற்பத்தி செய்து, தயாரிப்பு செலவைக் குறைக்க வேண்டியது அவசியம். அதுவே, மக்களிடையே மின் வாகனங்களைக் கொண்டு செல்லும்போது அவர்களால் எளிதில் வாங்கக்கூடிய விலைக்குக் கொடுக்க முடியும். அதற்குரிய திட்டமிடலும் அவசியம்.

பல்வேறு மாநில அரசுகளும் தற்போது மின் வாகன உற்பத்திக்கான புதிய கொள்கைகளைக் கொண்டு வருகின்றன. குஜராத் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிலான லித்தியம்-ஐயான் பேட்டரி உற்பத்தி முதலீட்டைப் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசம், மின் வாகன உற்பத்திக்கான நிலையான மூலதன முதலீட்டில் மானியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதில் ஈடுபடுவோருக்கு ஊக்கத்தொகையும் நில மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் முதல் ஐந்து பேட்டரி சேமிப்புத் தொழிற்சாலைகளுக்கு மூலதனத்தில் மானியம் கொடுக்கப்படுகிறது.

27 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உட்பட 40 நிறுவனங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்துள்ளன. மக்களும் அதிகமாக மின்சார இரண்டு சக்கர வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். அவற்றிலுள்ள சிறிய பேட்டரி, வீட்டிலேயே ரீசார்ஜ் செய்துகொள்ளும் வசதி ஆகியவை, மிகவும் எளிமையான வசதி வாய்ந்த வாகனமாக மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. பெருநிறுவனங்களைவிட, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தத் துறையில் தற்போது, சிறப்பாக முன்னேறி வருகின்றன.

Tesla Electric Car
Tesla Electric Car
தமிழ்நாட்டில் தயாரான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குத் தயார்... என்ன ஸ்பெஷல், என்ன விலை?

ஏதெர் எனெர்ஜி என்ற நிறுவனம், பேட்டரிகளைத் தவிர மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தானே தயாரித்துக் கொள்கிறது. பேட்டரி மட்டும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோலத்தான், ஓகினாவா ஆட்டோடெக் என்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்திக்கான இந்திய நிறுவனமும் செய்துவருகிறது.

இவையனைத்தையும்விட தற்போது மிகவும் அவசியமான ஒரு முயற்சியாக, சீனாவைப் போலவே உலக அளவிலான பேட்டரி உதிரி பாகங்கள் உற்பத்தியில் இந்தியாவின் முதலீடு அதிகரிக்க வேண்டும். சில கனிம உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் ஆற்றல் உற்பத்தி இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கனிம அளவில் மூன்றில் இரண்டு பங்கு தற்போது இந்தியாவிலேயே கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுபோக, மீதி உற்பத்திக்கு தென் அமெரிக்க நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் பேட்டரி கனிம உற்பத்திக்கான உடன்படிக்கைகளை இந்தியா கையெழுத்திடுகிறது.

இவைபோக, பயன்படுத்தப்பட்ட பழைய பேட்டரிகளில் இருந்தும் இந்தக் கனிமங்களை மறுபயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும். லித்தியம், கோபால்ட், மாங்கனீசு, கிராஃபைட் ஆகிய கனிமங்களை ஏற்கெனவே பயன்படுத்திய மொத்த பேட்டரிகளில் 90 சதவிகிதம் பேட்டரிகளிலிருந்து எடுக்க முடியும். அந்த வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும். அதற்கான மறுசுழற்சி கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

இந்தியா கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்த மின்சார வாகன உற்பத்தியைத் தீவிரப்படுத்தியே ஆக வேண்டும். குறிப்பாக அடுத்த இருபது ஆண்டுகளில் 100 சதவிகித மின்சார வாகனங்கள் என்ற இலக்கை அடையவேண்டுமெனில், அதன் உற்பத்தியிலுள்ள சிக்கல்களை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். அதற்கு முதலில், மக்களிடையே மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் ஒருசேர மேற்கொள்ள வேண்டும்.

Electric car
Electric car
Pixabay
எலெக்ட்ரிக் ஏத்தர் 450X ...  சூப்பர் ரைடிங் பார்ட்னர்!

ஏனெனில், தேவையை உருவாக்கினால்தான் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இன்றுவரை இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவையை உருவாக்குவதில் முழுக்கவனம் செலுத்தப்படவே இல்லை. அது நடக்காமல், உற்பத்தியை மட்டும் ஊக்குவித்தால், பின்னர் விற்பனையில் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். பெட்ரோலிய பொருளாதாரத்திலிருந்து எலக்ட்ரோ பொருளாதாரத்தை நோக்கிய பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதில் இந்தியா தனக்கான வாய்ப்புகளை எந்தளவுக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக இந்தியா இதற்குத் தயாராகிறதோ, அவ்வளவு விரைவாக, அது பசுமை ஆற்றல் பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

அடுத்த கட்டுரைக்கு