Published:Updated:

52 லட்சம் கோடி ரூபாய் சரிவு! இந்தியப் பங்குச்சந்தையின் வீழ்ச்சிப்பாதை... ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

இந்தியப் பங்குச்சந்தை
News
இந்தியப் பங்குச்சந்தை ( vikatan )

கடந்த 2019, டிசம்பர் 31-ம் தேதி, மும்பை பங்குச்சந்தையில் ரூ.155.53 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூலதன மதிப்பு, 2020, மார்ச் 24-ம் தேதி, ரூ.103.69 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.52 லட்சம் கோடி அளவுக்கு மூலதன மதிப்பு சரிவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் செயல்பாடு பெரும்பாலும் உள்நாட்டுப் பொருளாதாரச்சூழல் மற்றும் சர்வதேசப் பிரச்னைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். பங்குச்சந்தை நன்றாக இருந்தால், சீசன் காலத்து வேடந்தாங்கல் பறவைகள்போல பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் குவியத்தொடங்கும். பொருளாதாரம் சரிவடைந்தாலோ, சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னைகள் எழுந்தாலோ வெளிநாட்டு முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்படும்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை
vikatan

வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பார்த்து உள்நாட்டு முதலீட்டாளர்களும் தைரியமாக முதலீடுகளை அதிகரிப்பார்கள். உள்நாட்டில் ஸ்திரமான ஆட்சி அமைந்தாலும், தொழில்துறைக்கு ஆதரவான கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும் முதலீடுகள் குவியும். இப்படி ஒன்றுக்கொன்று பிணைப்பான செயல்பாடாகவே பங்குச்சந்தையின் போக்கு அமைந்திருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நல்ல மெஜாரிட்டியுடன் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றபோது சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்தது. முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நன்முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும், விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் எழுந்தது. எனவே, அவர் வெற்றிபெற்றதுமே சென்செக்ஸ் உற்சாகத்தோடு 40,000 புள்ளியைத் தொட்டுப்பார்த்து கீழிறங்கியது. பின்னர் 2019, ஜூன் மாதத்தில் 40,000 புள்ளிகளை எட்டியது. இந்த நிலையில், அமெரிக்கா, வடகொரியா இடையிலான மோதல் போக்கு, இரான், அமெரிக்கா இடையிலான கச்சா எண்ணெய் பிரச்னை ஆகிய உலகப் பிரச்னைகளோடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையால் வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்ட தேக்க நிலையும் இந்தியப்பங்குச்சந்தையைப் பாதித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கத் தொடங்கியதால் சென்செக்ஸ் 36,000 புள்ளிகளை நோக்கிக் கீழிறங்கியது.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்
vikatan

இந்த இறக்கத்திலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தின் ஆதரவை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தபோதுதான் கார்ப்பரேட் வரிக்குறைப்பு அறிவிப்பு வெளியானது. 2019, செப்டம்பர் 20-ம் தேதி, கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 25.17 சதவிகிதமாகக் குறைப்பதாக அறிவித்தார். இதன்மூலம் அரசுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி நிதியிழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. மேலும், அக்டோபர் 1-ம் தேதிக்குப்பிறகு புதிதாகத் தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அடுத்ததாக, குறைந்தபட்ச மாற்று வரி (MAT), 18.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய வரிக்குறைப்பு நடவடிக்கைகளால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததால் அன்றைய தினமே பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகளும் உள்நாட்டு முதலீடுகளும் குவிந்தன. 36,093 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ், ஒரே நாளில் 1,921 புள்ளிகள் ஏற்றம்பெற்று 38,014 புள்ளிகளை எட்டியது. நிஃப்டியும் 400 புள்ளிகளுக்குமேல் ஏற்றம்பெற்று 10,840 புள்ளிகளிலிருந்து 11,274 புள்ளிகளை எட்டியபின் சுறுசுறுப்பானது. சிறிதுசிறிதாக தனது ஏற்றப்போக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. 2019 நவம்பர் மாதத்தில் பண்டிகைக்கால விற்பனை காரணமாக ஏற்றம்பெற்ற சென்செக்ஸ், நவம்பர் மாதம் 7-ம் தேதி 40,653 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் 40,000 வரம்பை மீண்டும் எட்டியது முதலீட்டாளர்களுக்கு பெருமகிழ்ச்சியளித்தது. நிஃப்டியும் 12,000 வரம்பைத்தாண்டி 12,012 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி
நிஃப்டி
vikatan

அதன்பின்னர் பங்குச்சந்தை நிதானமான ஏற்றத்தில் பயணித்து ஜனவரி 14-ம் தேதியன்று வரலாற்று உச்சமாக 41,953 புள்ளிகளை எட்டியது. அன்றைய வர்த்தகத்தின் இடையே 42,000 புள்ளிகளுக்கு அருகே சென்று 41,994 புள்ளிகளைத் தொட்டு கீழிறங்கியது. அதன்பின்னர் ஒரு வார காலத்துக்கு அதே அளவில் பயணித்த சென்செக்ஸ், ஜனவரி மாத இறுதியில், அடுத்த நாளில் வாசிக்கப்படவுள்ள பட்ஜெட் உரைக்காக 40,723 புள்ளிகளில் காத்திருந்தது. மறுநாள், பிப்ரவரி 1-ம் தேதி வெளியிட்ட பட்ஜெட், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமின்றி, வருமான வரித்தாக்கலில் இருக்கும் வரிக்கழிவுகளை, வரிச்சலுகைகளை நீக்கக்கூடிய முறையையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறையக்கூடும் என்ற அச்சம் நிலவியதால் பட்ஜெட் தாக்கலான அன்று சென்செக்ஸ் 40,723 புள்ளிகளிலிருந்து தடாலடியாக 900 புள்ளிகளுக்குமேல் இறங்கி 39,735 புள்ளிகளை எட்டியது.

பின்னர், பிப்ரவரி 12-ம் தேதி மீண்டெழுந்த சென்செக்ஸ், 41,565 புள்ளிகளைத் தொட்டபின்னர் தனது சரிவுப்பயணத்தைத் தொடங்கியது. பிப்ரவரி 28-ம் தேதி 38,297 புள்ளிகளுக்கு இறங்கிய சந்தை, மார்ச் 9-ம் தேதி 35,634 புள்ளிகளுக்கு இறங்கியது. இடைப்பட்ட காலத்தில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகப் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்திக்கத்தொடங்கின. அதன் பாதிப்பை இந்தியப் பங்குச்சந்தையும் உணரத்தொடங்கியதால் மிகப்பெரிய அளவிலான இறக்கங்கள் ஏற்பட்டன. பல்வேறு நாடுகளில் மக்கள் ஷாப்பிங் செல்வது முடங்கியதால் பெட்ரோல் பயன்பாடு குறைந்தது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
vikatan

எனவே, அதிகப்படியான கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்காக மார்ச் மாதம் 5, 6 தேதிகளில் சவுதி அரேபியா தலைமையிலான ஒபேக் கூட்டமைப்பு நாடுகளிடையே கலந்தாய்வு நடந்தது. அதில் 6-ம் தேதி நிகழ்வில், சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை. ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொள்ளாததால் சவுதி அரேபியா பதிலடியாக, உற்பத்தியை அதிகரிப்பதோடு, அதிரடி சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்தது. இதையடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து எண்ணெய் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் பிரச்னை பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. மார்ச் 5-ம் தேதி 38,470 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கிட்டத்தட்ட 900 புள்ளிகள் இறங்கி மார்ச் 6-ம் தேதி 37,576 புள்ளிகளை எட்டியது.

அதன்பின்னர் சந்தையைச் சரிவடையச்செய்யும் வேலையை முழுக்க முழுக்க கொரோனா வைரஸ் தன்வசம் எடுத்துக்கொண்டது. கொரோனா பாதிப்பால் இந்தியாவிலுள்ள அனைத்துத்துறைகளும் பெரிய அளவிலான வருமான இழப்பைச் சந்திக்கத்தொடங்கின. அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை விலக்கிக்கொண்டதால் உள்நாட்டு முதலீட்டாளர்களும் அச்சத்துடன் விலகத்தொடங்கினார்கள். மார்ச் 12-ம் தேதி 35,697 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம், ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 புள்ளிகளாகக் குறைந்தது. ஒரே நாளில் 34,000 மற்றும் 33,000 ஆகிய இரண்டு வரம்புகளையும் தாண்டியது முதலீட்டாளர்களுக்குப் பீதியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
vikatan

மறுநாள், வெள்ளியன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3,000 புள்ளிகளுக்குமேல் இறங்கியதால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் வர்த்தகம் தொடங்கியதுமே ஏற்றம் பெறத்தொடங்கி, ஆச்சர்யமாக 4,000 புள்ளிகள் வரை மீண்டுவந்து 34,103 புள்ளிகளைத் தொட்டது. அடுத்ததாக மார்ச் 16-ம் தேதி சென்செக்ஸ் மீண்டும் 2,713 புள்ளிகள்வரை இறக்கம்கண்டு 31,390 புள்ளிகளை எட்டியது. அதன்பின்னும் சரிவு தொடர்ந்த நிலையில் கடந்த மார்ச் 23 அன்று, வரலாற்றுச்சரிவாக, சென்செக்ஸ் 3,934 புள்ளிகளும், நிஃப்டி 1,110 புள்ளிகளும் சரிவடைந்தன. அன்றைய தினமும் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. ஆனால், அதன்பின்னும் சந்தை இறக்கத்திலேயே தொடர்ந்தது.

இன்றைய சூழலில் கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள்கள் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் உற்பத்தி, விற்பனை அனைத்துமே நிறுத்தப்பட்டுவிட்டது. இச்சூழலில் பங்குச்சந்தை மேலும் இறங்குவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. கடந்த 2019, டிசம்பர் 31-ம் தேதி, மும்பை பங்குச்சந்தையில் ரூ.155.53 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூலதனம், 2020, மார்ச் 24-ம் தேதி, ரூ.103.69 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. ரூ.52 லட்சம் கோடி அளவுக்கு மூலதன மதிப்பு சரிவடைந்துள்ளது. கடந்த ஜனவரி 17 முதல் மார்ச் 23 வரை மட்டுமே 58 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவடைந்துள்ளது.

சந்தை மூலதன மதிப்பு
சந்தை மூலதன மதிப்பு
vikatan

பங்குச்சந்தை நிபுணர்களைப் பொறுத்தவரை, வர்த்தகத்தில் அனுபவமுள்ளவர்கள், நிதி வசதியுள்ளவர்கள் மட்டும் சில தரமான புளூசிப் ஃபண்டுகளாகத் தேர்ந்தெடுத்து சிறிதுசிறிதாக முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்கள். பங்குச்சந்தையில் அடிமட்டம் எதுவென்று கணிக்கமுடியாததாக இருப்பதால் முழுத்தொகையையும் முதலீடு செய்துவிடாமல் பகிர்ந்து முதலீடு செய்ய வலியுறுத்துகிறார்கள். மற்றவர்கள், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சந்தை வர்த்தகத்திலிருந்து விலகி நிற்பதே நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.