Published:Updated:

ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை விவகாரம்... மாநிலங்கள் மீதே சுமையை ஏற்றுகிறதா மத்திய அரசு?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( Twitter / PIB_India )

``இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும் சரி, கொரோனா பாதிப்பிலும் சரி, தமிழகத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது."

மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜி.எஸ்.டி) தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு வழங்கும் கடன் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தற்போது தேர்ந்தெடுக்கத் தவறினால், ஜி.எஸ்.டி இழப்பீட்டை பெற ஜூன் 2022 வரை காத்திருக்கும் நிலை ஏற்படலாம் என்கிற நிலையே தற்போது நிலவி வருகிறது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு இரண்டு வகையான கடன் திட்டங்களை, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் அறிவித்தது. அதன்படி முதல் வகை திட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடான தொகையை மாநில அரசுகள் சந்தையிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டாம் வகைக் கடன் திட்டத்தின்படி, மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு சரக்கு மற்றும் சேவை வரியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைச் சரிசெய்ய ரூ.2.35 லட்சம் கோடியைக் கடனாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தக் கடன்களுக்கு வட்டி கட்டுவது மாநில அரசின் பொறுப்பாகும்.

ஆனால், மத்திய அரசாங்கம் ஏற்கெனவே வாக்கை காப்பாற்றவில்லை என நினைப்பதால், ஜார்க்கண்ட், கேரளா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த இரண்டு திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த ஜி.எஸ்.டி விவகாரத்தில் பிரதமரின் தலையீட்டை எதிர்நோக்கிக் காத்துள்ளன.

தற்போது வரை ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முதல் வகை கடன் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாகவும், இந்தக் கடன் திட்டத்தின் மூலம் 97,000 கோடி தொகையைக் கடனாகப் பெற ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், புதுச்சேரி அரசாங்கம் இதுவரை மத்திய அரசு அளித்த இரண்டு தேர்வுகளில் எதையும் தேர்வு செய்யவில்லை. மத்திய அரசிடமிருந்து கடன் வாங்க புதுச்சேரி ஒப்புதல் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு தவறான தகவல் தருவாகச் சொல்லியிருக்கிறார் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி.

Narendra Modi
Narendra Modi
Photo: AP
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

மொத்தம் 21 மாநில ஓட்டுகளே ஜி.எஸ்.டி கவுன்சிலில் மசோதாவை அமல்படுத்த போதுமானது. அதனால் மத்திய அரசின் இரண்டு திட்டங்களில், ஏதேனும் ஒன்றை எதிர்வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு தேர்வு செய்யாத மாநிலங்கள், தங்களின் இழப்பீட்டை பெற 2022 ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!

``இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகவும் சரி, கொரோனா பாதிப்பிலும் சரி, தமிழகத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.12,000 கோடி கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாகப் பெருமளவு வருமானம் சரிந்துள்ளது. இதை ஈடுகட்ட வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடன் வாங்கியிருக்கிறது.

கொரோனா நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், அரசாங்கம் மக்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கொரோனா தடுப்பு பணிக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவேதான் தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் அதிக கடன் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தற்போது வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தையும் நீண்டகால கடன்களாக வாங்கியிருக்கிறது தமிழக அரசு. ஒரு கடனை குறுகிய காலத்துக்கு வாங்கும்போதுதான் வட்டி அதிகமாக இருக்கும். நீண்டகால அடிப்படையில் வாங்கும்போது வட்டி குறைவாகக் கட்ட வேண்டி இருக்கும். ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன்களுக்கு தமிழக அரசு சுமார் 37,000 கோடி ரூபாயை வட்டியாகக் கட்டி வருகிறது.

தற்போது வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியையும் சேர்த்தால், அது இன்னும் அதிகமாகும். இந்த நிலையில், மாநில அரசுகளை மேலும் கடன் வாங்கச் சொல்லி அழுத்தம் தருவது நியாயமே இல்லை. மேலும் மேலும் அவர்களின் கடன் சுமையை அதிகரித்துக்கொண்டே போனால், மாநிலத்தின் எதிர்கால திட்டங்களில் பாதிப்புண்டாகும், அது அவர்களின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.

கொரோனா பாதிப்பால் உண்டான செலவுகளுக்கெல்லாம், மாநில அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது. மத்திய அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, கேட்டிருக்கும் நிவாரண நிதியை மத்திய அரசாங்கம் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இதுவரை கொடுத்திருக்கும் நிதியும், வரி நிலுவை தொகைதானே தவிர, கொரோனா பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதியாகக் கொடுக்கவில்லை. மேலும், தாமதப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் சீக்கிரமாகவே கொடுக்க வேண்டும்" என்றார் காட்டமாக.

ஜி.எஸ்.டி விஷயத்தில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்கிற மாதிரியான தீர்வுகளை மத்திய அரசாங்கம் அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த வரி முறையைத் தொடர்ந்து பின்பற்றி நடக்க முடியும் என்பதே உண்மை!

அடுத்த கட்டுரைக்கு