Published:Updated:

தொழில்துறையைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்!

சமாளிக்கும் வழிமுறைகள்

பிரீமியம் ஸ்டோரி
ன்றைக்கு தொழில்துறை நிர்வாகிகள் மட்டுமல்ல, வலுவான நாடுகளின் தலைவர்களும்கூட தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு பயப்படுவது ஆயுதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல... சீனாவிலிருந்து கிளம்பியிருக்கும் கொரோனா வைரஸுக்கு. அதுதான் இப்போது உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது.

`கொரோனா வைரஸால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என்ன... அதிலிருந்து மீண்டுவர என்ன செய்வது...’ என்பது பலருடைய கேள்வி. இதுபோல உலக அளவில் ஏற்பட்ட சவால்களை நாம் எப்படிச் சமாளித்தோம், அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை அறிந்துகொண்டால் அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

தொழில்துறையைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்!

தொழில்துறையில் தாக்கம்!

சுவாசம் சம்பந்தமான இருமல், தும்மல் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் இந்தக் கிருமியால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவை மக்கள் பயணம் செய்யும் துறைகள்தான். ‍ குறிப்பாக நாடுவிட்டு நாடு செல்லும் விமானம், கப்பல் மற்றும் சுற்றுலாத்துறைகள்.

நிபுணர்களின் கணிப்பின்படி, விமானத்துறை இழந்திருக்கும் வருமானம் அமெரிக்க டாலர் கணக்கில் 100 பில்லியனுக்கு மேல்.

விமானங்கள் பல காலியாகப் பறந்துகொண்டிருக்கின்றன. நடக்கவிருக்கும் பல நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் நடுவில் நடக்கவிருந்த ஒலிம்பிக்ஸ் போட்டியை 2020-ம் ஆண்டின் இறுதிக்குத் தள்ளிப்போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறது ஜ‌ப்பான்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டின் சுற்றுலாத்துறை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா வைரஸ். உலக அளவில் பயணம் செய்யும் சீனர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டதால் இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சரிசெய்ய, சில ஆண்டுகள்கூட ஆகலாம்.

உலக நாடுகளுக்கே தொழிற்சாலையாக விளங்கும் சீனாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உற்பத்தித்துறை. குறிப்பாக, வாகனம் மற்றும் எலெக்ட்ரானிக் பாக‌ங்கள் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருள்கள் பற்றாக்குறையால் விலை உயரலாம்; புதிய பொருள்களின் வருகை தாமதமாகலாம்.

‘வாகன நகரம்’ என்று அழைக்கப்படும் சீனாவின் வூஹான், வாகனங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களின் தலைமையகம். வூஹான் அமைந்திருக்கும் மாகாணம், சீனாவில் வண்டிகள் தயாரிப்பில் நான்காம் இடத்தை வகிக்கிறது. சீனாவில் மட்டுமல்லாமல் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் மற்ற நாடுகளிலும் வாகனத் தயாரிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு வரும் நிலை வந்த பிறகுதான் வாகன‌த் தயாரிப்பு முன்பிருந்த நிலையை அடையும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பல மருந்துகளின் மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றின் சப்ளை தடைப்படுவதால் பல நாடுகளில் மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அமெரிக்கா உட்பட, பல நாடுகள் முக்கியமான மருந்துகளை மீண்டும் உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டன. கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்திருப்பதால், அதன் விலை சரிந்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் சந்திப்பதில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தால் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உலகப் பொருளாதாரம் மேலும் தடைகளைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வல்லுநர்களின் கணிப்பின்படி `கிட்டத்தட்ட 2.5% வளரும்’ என்று எதிர்பார்க்கப்பட்ட உலக ஜி.டி.பி ஒரு சதவிகிதம் வரை அடி வாங்கலாம். அனைத்துத் தாக்கங்களையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் உலகப் பொருளாதார‌ம் அமெரிக்க டாலரில் 2-லிருந்து 3 ட்ரில்லியன் வரை இழக்கக்கூடும். இது இந்தியா போன்ற ஒரு நாட்டின் ஜி.டி.பி-க்குச் சமம்.

சரித்திரம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

உலக அளவில் இது போன்ற சவாலை மனித இனம் சந்திப்பது இது முதன்முறை அல்ல. 2003-ம் ஆண்டு `சார்ஸ்’ உலகத்தை உலுக்கியபோது, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) ஆய்வு செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதிலிருந்து சில பாடங்களை நாம் கற்கலாம்.

முதலாவது பாடம்... உலகம் முழுவதும் பரவக்கூடிய ஆப‌த்திருக்கும் நோய்கள் பற்றித் தெரியவரும்போது, அவை குறித்து உடனே தகுந்த நிர்வாகிகளிடம் தெரிவிப்பது.

இரண்டாவது பாடம்... பயணம் தொடர்பானது. குறிப்பாக, விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை செய்வது. இதைச் சரியாகச் செய்தால் உள்நாட்டில் நோய் அதிகம் பரவாமல் தடுக்கலாம்.

மூன்றாவது பாடம்.... விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அதிகாரிகள் இது போன்ற நேரத்தில் ஒரு போட்டியாகப் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் நோய் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது.

நாம் வருத்தப்பட வேண்டியது, `சார்ஸி’லிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளாதது. நோய் பரவாமலிருக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததற்கான உதாரணங்களும் இருக்கின்றன. சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் செல்லத் தடை, உலகத்தரமான சுகாதாரம், பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தல், விதிமுறைகளை மீறுபவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற கறாரான முயற்சிகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்படாமல் நிலைமையைக் கையாண்டது சிங்கப்பூர் அரசு.

நம் நாட்டில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கேரளா. கேரள அரசு வெளிநாடு சென்று திரும்பியவர்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, பூரண‌ குணமடையும் வரை அவர்களைக் கண்காணித்து நோயைக் கட்டுப்படுத்தியது.பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நோய் உருவாகும் ஊரில் கிடைக்கும் முக்கியமான தகவல்களைப் புறக்கணிக்காமல் பயன்படுத்துவது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமுதாயத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள்!

உலக அளவில் நாம் சந்திக்கும் கொரோனா வைரஸ் போன்ற சவால்கள், அவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மீறி சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. சார்ஸின் மிகப்பெரிய தாக்கமாக, சீனாவில் இ-காமர்ஸ் வணிகம் அதிகமானதாகக் கூறப்படுகிறது. `கடைகளில் சென்று பொருள்கள் வாங்கும்போது நோய் தொற்றிக்கொள்ளும்’ என்று பயந்து இணையதளம், மொபைல் மூலம் வாங்க ஆரம்பித்தார்கள் மக்கள். `இது அலிபாபா நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது’ என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஹாங்காங் போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு நகரத்தில் சார்ஸ் வைரஸால் நிகழ்ந்த அனுபவங்கள் மூலம் மருத்துவத்துறை விழித்துக்கொண்டது. நோய்களின் தீவிரத்தை அறிந்து மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவரும் சுகாதாரமாக இருப்பது எப்படி என்பதை உணர்ந்தனர். முகமூடி அணிவது, ஒருவரைச் பரிசோதனை செய்த பிறகு கை கழுவுவது போன்ற பழக்கங்கள் கவனமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இந்தப் பழக்கங்கள் சாதாரண மனிதர்களுக்குச் சென்றடையாமல் போயின. அதன் விளைவை இன்று கண்முன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றம் நாம் வேலை செய்யும் விதத்திலும் நிகழ்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வீட்டிலிருந்து வேலை செய்வது புதிதல்ல. ஆனால், இந்த நோயால் மற்ற துறைகளும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் நிலை உருவாகும். உலகின் எந்த மூலையிலிருந்தும் தங்கள் சக ஊழியர்களிடம் தொடர்புகொண்டு, வேலையை முடிக்கும் பழக்கம் அதிகரிக்கும்.

கொரோனா வைரஸைச் சமாளிக்க நடவடிக்கைகள்!

இந்த நோய் குறித்து, சமூக ஊடகங்கள் மூலம் பயனுள்ள தகவல்களைவிட தவறான செய்திகளும் வதந்திகளும்தான் அதிகம் பரவுகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும். அடிப்படைச் சுகாதாரத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

oil
oil

பெரிய நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம். சீனாவிலும், சில ஆசிய நாடுகளிலும் விலை மலிவாக மூலப்பொருள்கள் வாங்கப்பட்டன. இப்படி ஒரு சில நாடுகளை மட்டும் நம்பி வணிகம் நடத்துவது ஆபத்து. நிறுவனங்கள் தங்களது வணிகம் பாதிக்காத வகையில் மாற்று சப்ளையர்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக ஆசிய நாடுகள் எவையெவற்றால் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க முடியும் என்று பார்க்கத் தொடங்கிவிட்டன.

கொரோனா வைரஸின் மிகப்பெரிய தாக்கம் சீனாவின் ஏகபோக ஆதிக்கத்துக்கு விழுந்த அடி என்றே சொல்லலாம். இனிவரும் நாள்களில் மற்ற நாடுகள் எந்த அளவுக்குத் தங்களது திறனை வளர்த்து, தகுந்த முதலீடுகளைச் செய்து, ஒரு நம்ப‌த்தகுந்த மாற்று சக்தியாக வளரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு