Published:Updated:

ஊரே சேர்ந்து ₹5,000 கோடி டெபாசிட்; இந்தியாவின் பணக்கார குஜராத் கிராமம்! - எப்படி சாத்தியமானது?

மாதாபர் நுழைவுவாயில்
மாதாபர் நுழைவுவாயில்

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் வங்கிகளில் ரூ.5000 கோடி அளவுக்கு டெபாசிட் செய்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும் குடிசைகளும், வேட்டி, துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், குஜராத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வங்கிகளில் ரூ.5,000 கோடி டெபாசிட் செய்து அசத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக, நம் நாட்டில் ஒரு சில கிராமங்களைச் சேர்ந்த அதிகமானோர் வெளிநாடுகளில் தங்கி இருப்பது வழக்கம். வெளிநாடுகளில் தங்கி இருந்தாலும் தங்களது சொந்த பந்தங்களை மறக்காமல் ஆண்டுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்துச் செல்வது வழக்கம். உதாரணமாக, தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அதிகமானோர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அது போன்ற ஒரு கிராமம் குஜராத்திலும் உள்ளது. ஆனால், மற்ற கிராமத்திற்கும் இந்த கிராமத்திற்கும் ஒரு மாறுபட்ட வித்தியாசம் இருக்கிறது.

மாதாபர் நுழைவுவாயில்
மாதாபர் நுழைவுவாயில்
``பெட்டிக்கடையா ஆரம்பிச்சது; இப்போ 7 கிளைகளா விரிஞ்சிருக்கு!" - அறந்தாங்கி சுந்தரம் பேக்கரியின் கதை

இந்தக் கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், தங்களது கிராமத்தில் உள்ள வங்கியைப் பணக்கார வங்கியாக மாற்றி அசத்தியிருக்கின்றனர். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இருக்கும் மாதாபர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அதிகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், தங்களது கிராமத்தில் உள்ள வங்கிகளில் என்.ஆர்.ஐ.வங்கி கணக்கு திறந்து அதில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்த கிராமத்தில் 17 வங்கிகள் தங்களது கிளையைத் திறந்துள்ளன. அதில் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பணக்கார கிராமமாகப் பார்க்கப்படும் மாதாபர் கிராமம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புஜ் நகரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கிராமத்தில் 7,600 குடியிருப்புக்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்கள் ஒவ்வொருவரின் சராசரி வங்கி டெபாசிட் விகிதம் ரூ.15 லட்சமாக இருக்கிறது. வெளிநாடுகளில் தங்கி இருக்கும் இந்தக் கிராம மக்கள், தங்களது சொந்தங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதோடு, தங்களது சேமிப்பையும் தங்களது ஊரில் உள்ள வங்கிக் கணக்குகளில்தான் பராமரிக்கின்றனர்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவராவது வெளிநாடுகளில் இருப்பார்கள். லண்டனில் வசிக்கும் இந்தக் கிராம மக்கள், ஒன்று சேர்ந்து அங்கு தனி அமைப்பை ஏற்படுத்தி கிராமத்திற்கும், லண்டனுக்கும் இடையே உள்ள உறவை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் பட்டேல் இனத்தை சேர்ந்தவர்களில் 62% பேர் வெளிநாடுகளில் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 பணம்
பணம்
பணமிருந்தும் மகிழ்ச்சி இல்லையா? நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதைத்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 1

இந்தக் கிராமத்தில் ரகுவன்ஷி ஸ்டுடியோ என்ற பெயரில் ஸ்டூடியோ வைத்திருக்கும் வினோத் கிராய் என்பவர் இது குறித்து கூறுகையில், ``எங்களது கிராமத்தில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள வங்கிகளில் என்.ஆர்.ஐ. கணக்கு வைத்திருக்கின்றனர். எனது குடும்பத்தில் எனது சகோதரர் உட்பட ஆறு பேர் லண்டனில் வசிக்கின்றனர். நான் வெளிநாடு போக விரும்பாமல் இங்கேயே இருக்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் எங்களது கிராம மக்கள் ஹோலி பண்டிகை மற்றும் ராம்நவமி போன்ற விழாக்களுக்கு சொந்த ஊருக்கு வருவதுண்டு.

கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர். விளை பொருள்களை பெரும்பாலும் மும்பைக்கு அனுப்பி வர்த்தகம் செய்கின்றனர்''என்றார்

இது மாதிரி பணக்கார கிராமம் தமிழகத்தில் எங்கேனும் இருக்கிறதா என்று சொல்லுங்களேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு