டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனத்துக்குப் பிறகு அதிக சந்தை மதிப்பு உடைய நிறுவனம் டைட்டன். இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் வளர்ச்சி அடைந்தது வரை பல திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது. டைட்டன் நிறுவனத்தில் தனிஷ்க் பிராண்ட் மிகவும் காலதாமதமாகத் தொடங்கப்பட்ட ஒன்று. ஆனால், இன்று டைட்டன் வருமானத்தில் 80 சதவிகிதத்துக்கும் மேல் தனிஷ்க் மூலமே வருகிறது. ஆனால், தனிஷ்க்கின் ஆரம்பகாலம் அவ்வளவு இனிப்பாக இல்லை. பல சிக்கல்களைச் சந்தித்தே இந்த உச்சத்தை அடைந்திருக்கிறது.
டைட்டன் முன் கதை
டாடா குழுமத்தில் டாடா பிரஸ் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. அந்த நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்பதற்காக ஜெராக்ஸ் தேசாய் என்பவரை நியமனம் செய்தது டாடா நிறுவனம்.
டாடா பிரஸ் என்னும் நிறுவனத்தைப் புதுப்பிக்க பல புதிய தொழில்களை ஆய்வு செய்தார் அவர். கன்டெயினர், கார்பன் பிளாக் உள்ளிட்ட பல திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அந்த சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஐராவதம் மகாதேவனை தேசாய் சந்திக்கும் வாய்ப்பு உருவானது. அப்போது, வாட்ச் உள்ளிட்ட பல பொருள்கள் தயாரிக்கும் யோசனையை இருவரும் பரிசீலனை செய்திருக்கிறார்கள்.

அப்போது இந்தியாவில் ஹெச்எம்டி மட்டுமே வாட்ச் தயாரிக்கும் நிறுவனம். இதர வாட்ச் நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச பிராண்ட்கள். சிட்டிசன், செய்கோ உள்ளிட்டவை வெளிநாட்டு தயாரிப்புகள். இவை பலவும் மறைமுகமாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதனால், வாட்ச் தயாரிப்பது மூலம் பெரிய சந்தையைப் பிடிக்க முடியும்; தவிர இந்தியாவில் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வந்ததால் வாட்ச் என்பது தவிர்க்க முடியாதது என்றும் தேசாய் கருதினார்.
ஆனால், டாடா இயக்குநர் குழுவுக்கு இந்த ஐடியா பிடிக்கவில்லை. ஏற்கெனவே Tata precession என்னும் நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை. தவிர, இதுவரை ரீடெய்ல் வாடிக்கையாளர்களை டாடா சந்திக்கவில்லை என்பதால் ரிஸ்க் எனக் கருதியது. தவிர, இந்தத் தொழிலில் டாடா நேரடியாக ஈடுபட முடியாது எனும் சட்டமும் இருந்தது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் இருந்ததால் இந்த ஐடியா தள்ளிப்போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஐராவதம் மகாதேவன் அடுத்த சில ஆண்டுகளில் டிட்கோ தலைவராக (Tamilnadu industrial development corporation) தலைவராக (1979) உயர்ந்தார். அதன் பிறகு, இந்தத் திட்டத்துக்கு மீண்டும் உயிர்வந்தது. ஆனால், ராஜீவ் காந்தி பிரதமரான பிறகுதான் தனியார் துறையினர் செயல்படுவதற்கு சாத்தியம் ஏற்பட்டது. 1985-ம் ஆண்டு டாடா குழுமம் மற்றும் டிட்கோ இணைந்த கூட்டு நிறுவனம் உருவானது. டாடா இண்டஸ்ட்ரீஸ் (TI) மற்றும் தமிழ்நாடு (TAN) என்னும் பெயர்களை இணைத்து டைட்டன் (TITAN) உருவானது. ஆரம்பத்தில் புதுக்கோட்டையில் ஆலை அமைக்கத் திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, மறைமலைநகர் (சென்னை), ஊட்டி உள்ளிட்ட ஊர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதி வாய்ப்பாக ஓசூர் இருந்தது. ஆனால், ஓசூர்தான் தேர்வு செய்யப்பட்டது. அப்போது அசோக் லேலாண்ட் மற்றும் சுசூகி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நகரின் மொத்த மக்கள் தொகையே 20,000 என்னும் அளவில்தான் இருந்தது. ஆனால், பெங்களூருவுக்கு அருகில் இருப்பதாலும் மற்றொரு முக்கிய நிறுவனம் பெங்களுரூவில் இருப்பதால் பணியாளர்கள் கிடைப்பார்கள் என்னும் நம்பிக்கையாலும் ஓசூரில் ஆலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

1986-ம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஆலை செயல்படத் தொடங்கியது. 1987-ம் ஆண்டு டிசம்பரில் வாட்ச் விற்பனை தொடங்கியது. முதல் நாளில் 17 வாட்ச் விற்பனையானது. முதல் ஆண்டு முடிவில் 3.44 லட்சம் வாட்ச்கள் விற்பனையாகின.
தனிஷ்க்
டைட்டன் வாட்ச் வெற்றி பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. காரணம் அப்போது இந்தியாவில் வாட்ச்க்கு என எந்த பிராண்டும் இல்லை. டாடா போன்ற பெரிய நிறுவனம் வாட்ச் பிரிவில் இறங்கும்போது தொடங்கும்போதே வெற்றியை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது.
1980-களின் இறுதியில் இந்தியாவில் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருந்தது. டைட்டன் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் மெஷின்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்நிய செலாவணியை நிறுவனங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு கூறியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாட்ச் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற டைட்டன் திட்டமிட்டது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டது. ஆனால், ஸ்விஸ் நிறுவனங்களுடன் போட்டிபோட முடியவில்லை. மேலும், ஸ்விஸ் நிறுவனங்கள் டைட்டன் வாட்ச்களை வினியோகம் செய்யும் நிறுவனங்களை மறைமுகமாகவும் மிரட்டியது. Celeste என்னும் பிராண்டில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்தது. ஆனால், அப்போது ஏற்பட்ட மந்த நிலை, போட்டி உள்ளிட்ட காரணங்களால் வெளிநாட்டில் இந்த பிராண்டால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
அதனால் இந்தியாவில் ஜூவல்லரி தொழிலில் ஈடுபட திட்டமிட்டது. இதற்காக ஓசூரில் 65 கோடி ரூபாய் முதலீட்டில் வேறு ஒரு ஆலை அமைக்கப்பட்டது. ஜூலை 1996-ம் ஆண்டில் சென்னையில் முதல் தனிஷ்க் ஸ்டோர் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் ஜூவல்லரி என்பது அதிகம் விரும்பும் பிரிவாக இருந்தாலும், அதுவரை எந்த ஒரு பெரு நிறுவனமும் சந்தையைப் பிடித்ததில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்ற சிறு நகை கடைகள் அனைத்து ஊர்களிலும் இருந்தன. விண்டோ ஷாப்பிங் மூலம் நகையை யாரும் வாங்குவதில்லை. நகை வாங்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்குத் தேவையான பணத்தை திரட்டிதான் நகையை வாங்குகிறார்கள். அதனால் வழக்கமாக வாங்குபவர்களை தனிஷ்க்கில் வாங்க வைப்பது கடினமாக இருந்தது.
இதைவிட முக்கிய காரணம், வெளிநாடுகளில் 18 காரட் தங்கத்தில் நகைகள் இருக்கும். ஆனால், இந்தியாவில் 22 காரட் நகையை விரும்புகிறார்கள். இந்தியர்கள் நகையை வாங்குவதில்லை, தங்கத்தின் மதிப்புக்காகத்தான் நகையை வாங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே டைட்டன் நிறுவனத்துக்கு சில காலம் எடுத்தது. அடுத்த ஆண்டில் 22 காரட் நகையை அறிமுகம் செய்தாலும் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.150 கோடி அளவுக்குச் சென்றது.
நகை பிரிவு கணிசமான வருமானத்தை ஈட்டினாலும் பெருமளவுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மூலமே கிடைத்தது. இந்தியர்களை தனிஷ்க்கில் வாங்க வைப்பது பெரும் சவாலாக இருந்தது.
இந்தியர்கள் 22 காரட் விரும்புவதாகச் சொன்னாலும் மற்ற நகைக் கடைகளில் விற்கும் நகைகள் 22 காரட் இல்லை. அதைவிடவும் குறைவு. தவிர நகையை உருக்கி விற்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் இந்த நடைமுறையை வெளிப்படையாக்க முடிவு செய்தது. நகையை வாடிக்கையாளர்கள் கண்முன்னே உருக்க முடிவெடுத்தது. மேலும் காரட் மீட்டரை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வசம் உள்ள நகை எவ்வளவு காரட் என்பதைக் கண்டறிய முடியும். அனைத்து ஸ்டோர்களில் இந்த மீட்டரை தனிஷ்க் பொறுத்தியது.
ஆனால், அதுவும் தனிஷ்க்கு வெற்றியைத் தரவில்லை. வாடிக்கையாளர்கள் வந்து தங்கள் நகையின் காரட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து கொள்கிறார்கள். ஆனால் தனிஷ்க்கில் நகை வாங்கவிரும்பவில்லை. தனிஷ்க் பிராண்ட் மூடப்படுகிறது என்னும் பேச்சும் சந்தையில் இருந்தது. இந்த நிலையில் டாடா குழுமம் மெக்கென்ஸி நிறுவனத்தை துணைக்கு அழைக்கிறது.

மெக்கென்ஸி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், இந்தப் பிரிவின் விற்பனையை உயர்த்துவதற்கு முன்பு நாம் ஏன் இந்த பிஸினஸில் இருக்க வேண்டும், இந்தப் பிரிவை ஏன் மூடக்கூடாது என்னும் கேள்வியை முன்வைத்தார். சில வாரங்களுக்குப் பிறகு, இந்த பிராண்ட் வளர்ச்சி அடையும் பிராண்ட். வாட்ச்களை பல வழிகளில் விற்பனை செய்கிறீர்கள் என்பதால் அந்த வெற்றி உத்தி இங்கு உதவாது. நகைகளைப் பொறுத்தவரை நீங்கள் தயாரிப்பு நிறுவனம் என்னும் மனநிலையில் இருந்து ரீடெய்ல் நிறுவனம் என்னும் மனநிலைக்கு வாருங்கள் என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை மெக்கென்ஸி வழங்கியது.
வாடிக்கையாளர்கள் காரட் மீட்டரை தங்களது தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்; தவிர தனிஷ்க் விளம்பரங்களும் மேல்தட்டு மக்களுக்கானது என்னும் தோற்றத்தைக் கொடுத்தது. அதனால் விற்பனை உயரவில்லை.
இந்த நிலையில் ஒரு வாடிக்கையாளர்கள் அவர்களிடம் உள்ள நகையை சோதனை செய்ய தனிஷ்க் ஷோரூமுக்கு வருகிறார்கள். 22 காரட் என்று சொல்லப்பட்ட அந்த நகை 17 காரட் மட்டுமே இருக்கிறது. அதனால் விரக்தியில் அந்த வாடிக்கையாளர்கள் வெளியேறும்போது கடையில் இருக்கும் ஒருவர் ஏன் நகை வாங்கவில்லையா என்று கேட்டதற்கு, `நீங்கள் பிரச்னையை காண்பித்திருக்கிறீர்கள். ஆனால் தீர்வு இங்கில்லை' எனத் தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்து யோசிக்க ஆரம்பித்த தனிஷ்க் Impure to pure என்னும் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை அறிவித்தது. 19 காரட்டுக்கும் மேல் 22 காரட்டுக்கும் கீழ் உள்ள நகைகள் இருக்கும் பட்சத்தில் 22 காரட் நகைகளை மாற்றித் தருகிறோம் என விளம்பரம் செய்தது. 19 = 22 என்பதுதான் விளம்பர வாசகமாக இருந்தது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள தனிஷ்க் ஸ்டோர்களில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு ஸ்டோரில் ஒரு நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை (2003) என்னும் அளவுக்கு இந்தத் திட்டம் பெரிய வெற்றி பெற்றது.
ஒரு காலத்தில் ஜூவல்லரி பிரிவை மூடலாமா என்னும் திட்டத்தில் இருந்த தனிஷ்க், தற்போது 380-க்கும் மேல் கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக எடை குறைந்த நகைகளில் கவனம் செலுத்த இருக்கிறது தனிஷ்க்.