Published:Updated:

சவாலான சூழலில் பிசினஸ்... வளர்த்தெடுக்கும் வழிமுறைகள்!

கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி

“தற்போது ஏற்பட்டிருக்கும் சவால்களைப் பயன்படுத்தி நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்!”

லகப் பொருளாதாரமே மந்தகதியில் இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு மேல் பரவி, மக்களை வீட்டுக்குள் முடக்கியிருக்கிறது.

இதோடு தொழில் வளர்ச்சியின்மை, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் எனப் பல பிரச்னைகள் நம் நாட்டு பிசினஸ் சூழலைச் சிக்கல் மிகுந்ததாக ஆக்கியிருக்கின்றன. இந்த சவால்களையெல்லாம் தாண்டி, நம் பிசினஸ் நிலையாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு கருத்தரங்கை தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி (CII) சமீபத்தில் சென்னையில் நடத்தியது.

கே.ஹரி தியாகராஜன்,  எஸ்.சந்திரகுமார்
கே.ஹரி தியாகராஜன், எஸ்.சந்திரகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கருத்தரங்கில் சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவர் எஸ்.சந்திரமோகன் வரவேற்பு நிகழ்த்த, சி.ஐ.ஐ அமைப்பின் தென்மண்டலப் பிரிவின் தலைவர் சஞ்சய் ஜெயரத்னவேலு முக்கிய உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில்துறையின் முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐ.ஏ.எஸ் தமிழகத் தொழில்துறை சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசினார்.

‘‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் இன்னும் அதிகமான தொழிற்சாலைகள் வர வேண்டும். நிறைய மாணவர்கள் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். தொழிற்சாலைகளுக்கான நிலங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. எனினும், இந்தப் பிரச்னைக்கு வேகமாகத் தீர்வு கண்டுவருகிறோம். கோடைக்காலம் நெருங்குவதால், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரைத் தர அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். காலத்துக்கேற்ப புதுமையான மாற்றங்களை நமது தொழில் துறை கொண்டு வர வேண்டும். இண்டஸ்ட்ரி 4.0 என்பது மிக முக்கியமான ஒன்று. அதை முழுமையாக எடுத்துச் சொல்லும் வகையில் ஸ்ரீபெரும்புதூரில் ‘மாடல் ஃபேக்டரி’ ஒன்றை உருவாக்கிவருகிறோம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலை செய்வது அதிகரித்துவருகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து சி.ஐ.ஐ ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

“தற்போது ஏற்பட்டிருக்கும் சவால்களைப் பயன்படுத்தி நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்!”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடுத்து பேசினார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஐ.ஏ.எஸ். ‘‘டிஜிட்டல்மயமாக்கல் தொழில் வளர்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கிறது. நமது தொழில்கள் டிஜிட்டல்மயமானால் வேலை இழப்பு ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது. இந்த பயம் தேவையில்லை. டிஜிட்டல்மயமாவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்குமே தவிர, குறையாது. நமது தொழில் வளர்ச்சிக்குப் பல உலக நாடுகள் கடும் போட்டியைத் தருகின்றன. ஜவுளி ஏற்றுமதியில் நமக்குக் கடும் போட்டியைத் தருகிறது பங்களாதேஷ். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் அங்கு தொழில் வளர்ச்சி குறைந்திருக்கிறது. இந்த நிலையில், நமக்குக் கிடைக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் உற்பத்தி செய்யும் பொருள்களை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் பல சவால்களைச் சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. என்றாலும், இந்தச் சவால்கள்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக ஆக்குகின்றன’’ என்றவர், ‘‘ஆப்பிள் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அசெம்பிளிங் யூனிட்டைத் தொடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான முதலீட்டை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும்’’ என்றார்.

சவாலான சூழலில் பிசினஸ்... வளர்த்தெடுக்கும் வழிமுறைகள்!

இந்தக் கருத்தரங்கில் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘தொழில் துறையினருக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரத் தயங்க வேண்டாம்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் பகுதியாக தொழில்துறை சார்ந்தவர்கள், தாங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பேசினார்கள். கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், ‘‘சிக்கலான இந்த நேரத்தில் நம் தொழில் எப்படி மாறுகிறது என்பதை ஒவ்வொரு தொழில்முனைவோரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இப்போதுள்ள சவால்களை சமாளிக்கும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நிறுவனமாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறக் கூடாது. `ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ போன்ற நவீன தொழில்நுட்பங்களை எல்லாத் தொழில் நிறுவனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன், ‘‘உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் முன்னேறி வந்தாலும், நமது சராசரி தனிநபர் வருமானம் இன்னும் குறைவாகவே உள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்தால்தான் எல்லாத் துறைகளிலும் நம்மால் வேகமான மாற்றத்தைக் காண முடியும்” என்றார்.

கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி
கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி

டான்ஃபாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் பி.ரவிசந்திரன், ‘‘விவசாய விளைபொருள்களை முன்பு சந்தைக்கே அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நேரடியாகப் பயன்பாட்டாளர்களுக்கே கொண்டுபோய் சேர்க்கும் அளவுக்குத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. விவசாயத்துக்கு உதவுகிற மாதிரி பல பணிகளைச் செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல வந்துவிட்டன. எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

டெய்ம்லர் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யகம் ஆர்யா பேசியபோது, ‘‘கனரக வாகனங்களுக்கு முன்பைவிட அதிகமான சரக்குகளை எடுத்துக்கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், அந்த வகை வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்ததன் மூலம் வாகனங்கள் இன்னும் வேகமாக சரக்குகளைக் கொண்டு செல்ல முடிகின்றன. ஏற்கெனவே தயாரான வாகனங்களை விற்று முடிக்கவே தாமதமாகும் என்பதால், இனி வாகன விற்பனை கொஞ்சம் குறைவாகவே இருக்கும்’’ என்றார்.

கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி
கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி

டி.சி.எஸ் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் சுரேஷ் ராமன், ‘‘நம் நாட்டு நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், ‘‘தற்போது ஏற்பட்டிருக்கும் சவால்களைப் பயன்படுத்தி நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். கொரோனா பிரச்னையால் நமக்கு நிறையவே நன்மைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டாக்டர் அனீஸ் சேகர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுத்துவரும் பல்வேறு பணிகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

கடந்த ஓராண்டுக்காலமாக சி.ஐ.ஐ அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவராக இருந்து, தனது பணியைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார் டாஃபே நிறுவனத்தின் குரூப் பிரெசிடென்ட் எஸ்.சந்திரமோகன். கடந்த ஓராண்டுக்காலமாக சி.ஐ.ஐ அமைப்பின் துணைத் தலைவராக இருந்த தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கே.ஹரி தியாகராஜன், இப்போது தலைவராகியிருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், செயல் தலைவருமான எஸ்.சந்திரகுமார் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சி.ஐ.ஐ-யின் புதிய தலைமைக்கு நாணயம் விகடனின் வாழ்த்துகள்!