Published:Updated:

கோவிட் போட்ட பூட்டை உடைக்க... ரீபூட் இந்தியா! - புத்தாக்கத்துக்குப் புதிய யோசனைகள்!

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தெளிவான ஒரு கொள்கையும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி
ரு கோடு கிழித்து ‘வீட்டைத் தாண்டி வெளியே வராதீர்கள்’ என்று 130 கோடி மக்களை அரசு கோட்டுக்கு உள்ளே வெற்றிகரமாக நிற்கவைத்தது.

இப்போது அதே அரசு, அந்தக் கோட்டைத் தாண்டி வெளியேவர அனுமதித்திருக்கிறது என்றால், வீட்டுக்குள்ளிருக்கும் மற்றவர்கள் அனைவரும் பசியும் பிரச்னைகளும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான். இந்த எண்ணம் ஈடேற, நான் சில யோசனைகளை அரசின் பரிசீலனைக்கு இங்கே முன்வைத்திருக்கிறேன்.

கோவிட் போட்ட பூட்டை உடைக்க... ரீபூட் இந்தியா! - புத்தாக்கத்துக்குப் புதிய யோசனைகள்!

1. தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பலவகையான ஊக்கங்களை அரசு அளிக்க வேண்டும். குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மறுமலர்ச்சி பெற நிதியோட்டத்தை மேம்படுத்த வேண்டும். நொடிந்துகிடக்கும் தொழில்களெல்லாம் விடியலைப் பார்க்க வேண்டுமெனில், குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். இவர்களிடமிருந்து உதிரி பாகங்களை வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய பில் தொகையை சாக்குபோக்குச் சொல்லித் தள்ளிப்போடாமல், தாமதமின்றிச் செலுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தள்ளுபடி மூலம் உடனே பணம் பெறும் ‘Trade Receivables Discounting System (TReDS)’ நடைமுறையை எல்லா நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட பலத் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த நடைமுறையை ஏற்றுக் கொண்டிருந்தாலும், 14 நிறுவனங்களே செயல்படுத்துகின்றன.

2. கச்சா எண்ணெயின் விலை அடிமட்டத்துக்குப் போனால்... பேரம் பேசும் நம் சக்தி மேல்மட்டத்துக்குப் போகும். இந்த நேரத்தில் எண்ணெய்வளம்மிக்க சில நாடுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுடன் நீண்டகால ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், வருங்காலத்தில் அது பொருளாதாரரீதியாக மட்டுமல்ல, சர்வதேச அரசியல்ரீதியாகவும் நமக்கு லாபகரமானதாக இருக்கும். `கச்சா எண்ணெய்க்காக இவ்வளவுதான் செலவு செய்யப்போகிறோம்’ என்பது முன்கூட்டியே நிச்சயமாகத் தெரிந்து விட்டால், நம்மிடமிருக்கும் நிதி ஆதாரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தவும் பேருதவியாக இருக்கும். ஆறு மாத காலத்துக்கு கச்சா எண்ணெயைச் சேமித்துவைக்கும் அளவுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில்கொள்வதும் முக்கியம்.

பூட்டு
பூட்டு

3 பொதுத்துறை நிறுவனங்களில் தனக்கிருக்கும் பங்குகளைப் பயன்படுத்தி அரசு நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். சிங்கப்பூரில் ‘தெமெசேக்’ (Temasek) நிதி நிறுவனம் கையாண்ட வழிமுறைகள் நமக்கும் கைகொடுக்கும் என்பதால், அதேபோன்ற பிரத்யேகமான ஓர் அமைப்பையும் (Special Purpose Vehicle - SPV) அரசு நம் நாட்டில் உருவாக்க வேண்டும். இதன் வாயிலாகத் திரட்டப்படும் நிதியை நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வலிமைப்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.

4. அரசியல் வானிலை இப்போது சீனாவுக்கு உகந்ததாக இல்லை. ஆகையால், அங்கே செயல்பட்டுவரும் பல பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்க்க இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் சரியான நகர்வுகளைச் செய்கிறோமோ இல்லையோ, தவறான நகர்வுகளைச் செய்யவே கூடாது. இதைச் சொல்லக் காரணம், சீனாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் அதீத ஆர்வத்தால், நம்மால் செய்ய முடியாத பொய்யான வாக்குறுதிகள் எதையும் அவர்களுக்கு ஒருபோதும் தரக் கூடாது.

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் நமக்குத் தெளிவான ஒரு கொள்கையும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் வேண்டும்.

2014-ம் ஆண்டு நம் நாட்டில் மொபைல்போன் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இரண்டே இரண்டுதான் இருந்தன. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் பலனாக 2019-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 260-ஆக உயர்ந்தது. நம் தேவையில் 95% அளவுக்கு இங்கேயே மொபைல் போன்களை நாம் அசெம்பிள் செய்தோம். `உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர்’ என்ற வெற்றி பீடத்தை பெருமிதத்துடன் எட்டிப் பிடித்தோம். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது? பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் நாம் செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், வெளிநாட்டிலிருந்து மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது லாபகரமானதாக மாறியது. அதனால் 2018-19-ம் ஆண்டு வியட்நாமிலிருந்து ரூ.6,000 கோடி மதிப்புக்கு உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அரசின் அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதால் நேர்ந்த விபரீதம் இது.

தொழில்துறை
தொழில்துறை

5. சென்னையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. ஜோஹோ கார்ப்பரேஷன் என்ற கொடி கட்டிப் பறக்கும் நிறுவனத்தை நிறுவியவர். பல காலமாக அவர் இந்த யோசனையை முன்வைத்துவருகிறார். தொழில்நுட்பம் உட்பட பல முக்கியமான துறைகளில் செயல்பட்டுவரும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, தரவரிசை கொடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு தேர்தல் கமிஷனைப்போல சர்வ சுதந்திரமும், அதிகாரமும், ஆற்றலும்கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்க வேண்டும். நாம் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்களின் தரம் எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று ஒப்பீடு செய்து உலகத் தரத்துக்கு நம்மை உயர்த்திக்கொள்ள நம் தொழிற்கூடங்களுக்கு இந்தத் தரவரிசை பயனுள்ளதாக இருக்கும்.

எந்தத் தொழிற்கூடத்துக்கு எந்த அளவு ஊக்கமும், ஆக்கமும், நிதி ஆதரவும் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் அரசுக்கு இந்தத் தரவரிசை பயன்படும்.

மாறுதலே ஆறுதல் அளிக்கும். மாற்றமே ஏமாற்றத்தைத் தவிர்க்கும். எனவே, `புதிதாய் பிறந்தோம்’ என்று நினைத்துக் கொண்டு அரசு தன்னைத் தானே மீண்டும் இயங்க (Reboot) இந்த யோசனைகளைப்போல மேலும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டால், கோவிட் வெகு விரைவிலேயே கடந்தகாலமாகிவிடும்.

(`தி மின்ட்’ நாளிதழில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி அன்று வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம் இது. நன்றி: தி மின்ட் நாளிதழ்)

தமிழில்: பி.ஆரோக்கியவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு