Published:Updated:

திருச்சி முதல் சிவகாசி வரை; ஆசையைத் தூண்டி `சதுரங்க வேட்டை', எல்ஃபின் நிறுவனம் ஏமாற்றியது எப்படி?

Representational Image
News
Representational Image

``ஒருத்தனை ஏமாத்தணும்னா, மொதல்ல அவங்கிட்ட ஆசையைத் தூண்டணும்...” சதுரங்க வேட்டை படத்தில் வரும் இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பதை சமீபத்திய சம்பவங்கள் உணர்த்துகின்றன.

திருச்சி முதல் சிவகாசி வரை; ஆசையைத் தூண்டி `சதுரங்க வேட்டை', எல்ஃபின் நிறுவனம் ஏமாற்றியது எப்படி?

``ஒருத்தனை ஏமாத்தணும்னா, மொதல்ல அவங்கிட்ட ஆசையைத் தூண்டணும்...” சதுரங்க வேட்டை படத்தில் வரும் இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பதை சமீபத்திய சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Published:Updated:
Representational Image
News
Representational Image

திருச்சியில் செயல்பட்டுவந்த எல்ஃபின் நிதி நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாக எல்ஃபின் நிதி நிறுவனத்தின் முன்பு சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சியைத் தாண்டி இந்த நிறுவனம் சிவகாசியிலும் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. அந்த ஊரிலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிறுவனத்தில் பணம் போட்டு ஏமார்ந்திருக்கிறார்கள். இந்த இந்த நிறுவனம் எப்படிப்பட்ட மோசடி நிறுவனம், இந்த நிறுவன செய்த தவறு என்ன என்பதை கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் நாணயம் விகடனில் ஒரு கட்டுரையை விரிவாக வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையின் சுருக்கம் இதோ...

Finance - Representational Image
Finance - Representational Image

``ஒருத்தனை ஏமாத்தணும்னா, மொதல்ல அவங்கிட்ட ஆசையைத் தூண்டணும்...” சதுரங்க வேட்டை படத்தில் வரும் இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பதை சமீபத்திய சம்பவங்கள் உணர்த்துகின்றன. எதிர்முனையில் இருப்பவர் பேராசையுடன் இருந்தால், ஏமாற்றுபவர்களின் பணி இன்னும் எளிதாகிவிடும். அதுதான் தற்போது தமிழகத்தில் பல நகரங்களில் நடக்கின்றன.

எல்ஃபின் என்ற நிதி நிறுவனம் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை நடத்திவருபவர் ராஜா, அவரின் தம்பி ரமேஷ். ``ரூ.5,000 கொடுத்தால், 4,000 ரூபாய்க்கு மளிகைப் பொருள்கள் தருவோம். மீதமுள்ள 1,000 ரூபாயை ரூ.40 வீதம் 100 நாள்களுக்குத் திரும்பத் தருவோம்’’ என்று விளம்பரம் செய்ய, பணம் வந்து கொட்டத் தொடங்கியது. மளிகையில் சம்பாதித்த நல்ல பெயரை வைத்து, ரியல் எஸ்டேட்டிலும் இறங்கினார்கள். அதன் பிறகுதான் பிரச்னை வரத் தொடங்கியது.

இந்த நிறுவனத்தில் பணத்தைப் பறிகொடுத்த திருவேங்கடம் யாதவிடம் பேசினோம். ``2018-ம் ஆண்டு என் நண்பர் மூலமாக எல்ஃபின் நிறுவனம் நடத்தும் மளிகைப் பொருள்கள் திட்டத்தில் சேர்ந்தேன். சொன்னபடி பொருள்களையும் பணத்தையும் தந்ததால், அடுத்து அவர்கள் நடத்திய ரியல் எஸ்டேட் பிசினஸில் பணம் போட முடிவு செய்தேன். திருச்சியில் உள்ள ஹோட்டலில் வைத்து ரூ.4.5 லட்சம் பணம் தந்தேன். நான் தந்த பணத்தை நோட்டில் எழுதிக் கொண்டார்கள். வேறு எந்த ரசீதும் தரவில்லை.

திருவேங்கடம் யாதவ், ராஜ்குமார்
திருவேங்கடம் யாதவ், ராஜ்குமார்

அவர்களை நம்பியதால், நானும் அதைப் பெரிதுபடுத்த வில்லை. இப்போது பணத்தைத் திருப்பிக் கேட்டால், `நீ எங்கே பணம் கொடுத்தாய், எப்போது கொடுத்தாய்?’ என்று கேட்கின்றனர். இதுபற்றி மாநகரக் காவல் ஆணையர், பொருளாதாரக் குற்றப்பிரிவு, கலெக்டர் எனப் பலரிடமும் புகார் தந்தும் என் பணம் எனக்குக் கிடைக்கவில்லை’’ என்றார் கவலையுடன்.

இந்த நிறுவனத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த ராஜ்குமார், ``நான் சிங்கப்பூர்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப என்னோட ரெண்டு கால்களிலும் அடிபட்டுருச்சு. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்ல ரூ.48 லட்சம் கிடைச்சுது. ஊருக்குத் திரும்பிய பின், ரூ.45 லட்சம் பணத்தை எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதா சொன்னாங்க. அதற்கான காசோலையும் கொடுத்தார்கள். அந்தக் காசோலையை நாங்கள் சொல்லும் நேரத்தில்தான் வங்கியில் போடணும்னு சொன்னாங்க. ஆனா, அதுக்குப் பின்னாடி முன்னுக்குப் பின் முரணா பேச ஆரம்பிச்சாங்க.

வற்புறுத்திக் கேட்டப்ப மிரட்ட ஆரம்பிச்சாங்க. இனி இவங்களை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்துல புகார் செஞ்சேன். இது தொடர்பா பேச என்னைக் கூப்பிட்டாங்க. அதை நம்பி கடந்த மாசம் 20-ம் தேதி எல்ஃபின் நிறுவனத்துக்குப் போனேன். அந்த நிறுவனத்து ஆளுங்க என்னை வழிமறிச்சு, அடிக்க ஆரம்பிச்சாங்க. நான் உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். இதுக்காக நான் தந்த புகார் பேர்ல, ஒன்பது பேர் மீது வழக்குப் போட்டாங்க. இவங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறதால, எந்தக் கவலையும் இல்லாம இருக்காங்க’’ என்றார்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் சிவகாசி ஜெயலட்சுமி
தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் சிவகாசி ஜெயலட்சுமி

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், `இந்த நிறுவனத்தை நடத்திவந்தவர்களிடம் ரூ.4.63 கோடியைக் கொடுத்ததாக மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க, ரூ.1 கோடியை தந்துவிட்டு, மீதப் பணத்தைப் பிறகு, தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் கோவிந்தராஜ் மீண்டும் புகார் செய்ய, எல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா இப்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நிதி நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் காவல்துறையில் சிக்கிக் கிடக்க, பணம் போட்ட மக்கள் நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் போட்ட பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்ற கேள்விக்கு யாரிடமிருந்தும் தெளிவான பதில் இல்லை. இனியாவது பேராசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் பணத்தைப் போட்டு இழக்காமல் உஷாராக இருப்பது மக்களின் பொறுப்பு!