Published:Updated:

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு `செக்', சமவாய்ப்புக்கு வழி; புதிய விதிமுறைகளால் யாருக்கு லாபம்?

Ecommerce (Representational Image) ( Photo by Karolina Grabowska from Pexels )

காலகாலமாகவே இந்தியா வியாபாரிகள் நாடு. அமெரிக்கா, சீனாவைவிட இங்கு கடைகள் அதிகம். அதை நம்பி வாழும் கடைக்காரர்கள் அதிகம். அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக கலாசார ரீதியாகவும் பராமரித்து பாதுகாக்கும் பெரிய பொறுப்பு அரசாங்கம் முதல் நம் அனைவருக்கும் இருக்கிறது.

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு `செக்', சமவாய்ப்புக்கு வழி; புதிய விதிமுறைகளால் யாருக்கு லாபம்?

காலகாலமாகவே இந்தியா வியாபாரிகள் நாடு. அமெரிக்கா, சீனாவைவிட இங்கு கடைகள் அதிகம். அதை நம்பி வாழும் கடைக்காரர்கள் அதிகம். அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக கலாசார ரீதியாகவும் பராமரித்து பாதுகாக்கும் பெரிய பொறுப்பு அரசாங்கம் முதல் நம் அனைவருக்கும் இருக்கிறது.

Published:Updated:
Ecommerce (Representational Image) ( Photo by Karolina Grabowska from Pexels )

ஆன்லைன் உலகம் சில மாதங்களாகவே திமிலோகப்படுகிறது. சத்தம் லாகின் செய்து, பிரச்னை வைரஸாய் வளர்ந்திருக்கிறது. அரசாங்கம் அறிவித்திருக்கும் புதிய இ-காமர்ஸ் விதிமுறைகள் மீது ஈ மொய்ப்பது போல் அனைவரின் கண்ணும் கருத்தும் கூச்சல்களும் குழுமியிருக்கிறது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

விஷயம் இதுதான். ராஜா என்ற கம்பெனியும் ராணி என்று கம்பெனியும் ஒரே வகை பொருளைத் தயாரிக்கும் கம்பெனிகள் என்று வைத்துக்கொள்வோம். ராணியின் தயாரிப்புகள் ராஜாவை விட சிறந்தவையாம். ராஜாவின் பொருள்கள் ஒரு இ-காமர்ஸ் சைட்டில் விற்கப்பட யாரேனும் ஆர்டர் செய்தால் இ-காமர்ஸ் கம்பெனி ராஜாவிடம் பொருளை பெற்று டெலிவரி செய்து தன் கமிஷனை எடுத்துக்கொள்கிறது.

இ-காமர்ஸ் (மாதிரி படம்)
இ-காமர்ஸ் (மாதிரி படம்)

ஆனால், ராணி கம்பெனி டீலிங் வித்தியாசமானது. இ-காமர்ஸ் கம்பெனியோடு ஒரு பிரத்யேக பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது. இ-காமர்ஸ் கம்பெனி லம்பாக ராணியின் பொருளை காசு கொடுத்து வாங்கி தன் குடோனில் அடுக்கி வைத்து விற்கிறது.

ராஜாவின் பொருளும் ராணியின் பொருளும் ஒரே இ-காமர்ஸ் சைட்டில் விற்கப்பட, யாருக்குத் திறமையோ அவர்கள் விற்றுக்கொள்ளட்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்? அங்குதான் மேட்டரே. இ-காமர்ஸ் கம்பெனி ராணியின் பொருளை அதிகம் புரமோட் செய்யும்படி தன் சாஃப்ட்வேர் அல்காரிதங்களை அமைத்துக்கொள்கிறது. கஸ்டமர் பொருளை சைட்டில் தேடும்போது ராணியின் பொருள் மட்டுமே கண்ணில்படும்படி செய்கிறது. அதன் ரேட்டிங், ரெவ்யூ எல்லாம் அதற்கு சாதகமாக இருக்கும்படி அமைக்கிறது. அத்துடன் அடிமாட்டு விலையிலும் விற்கிறது. அப்படியானால், கஸ்ட்மர்கள் ராணியின் பொருளைத்தானே வாங்குவார்கள். ராஜாவின் பொருள் சைட்டில் இருந்தாலும் அது இருட்டடிப்பு செய்யப்படுவதாகத்தானே அர்த்தம்? அதுதான் நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இப்படியா செய்கிறாய்’ என்று இ-காமர்ஸ் கம்பெனியைக் கேட்டால், `சே சே, நாங்கள் குட் பாய்ஸ், இப்படிச் செய்வதில்லை' என்று கம்ப்யூட்டர் மேல் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கின்றன. சரி, எதற்கும் உன் அல்காரிதங்களைக் காட்டு என்றால் அதெல்லாம் உங்களுக்கு எதற்கு என்று அழிச்சாட்டியம் செய்கின்றன.

எந்தெந்த இ-காமர்ஸ் கம்பெனிகள் இப்படி போங்காட்டம் ஆடுகின்றன? பெயர் சொன்னால் அடிப்பார்கள். கிட்டத்தட்ட எல்லா இந்திய மற்றும் பன்னாட்டு இ-காமர்ஸ் கம்பெனிகளும் இந்தக் கோதாவில் இறங்கி தாதா வேலை செய்கின்றன. இந்தக் கதை ஒரு சாம்பிளுக்குத்தான். இன்னும் பல அழுகுனி ஆட்டங்கள் ஆன்லைனில் ஆடப்படுகின்றன. இந்தத் தகிடுதத்தங்களை நிறுத்தத்தான் புதிய இ-காமர்ஸ் விதிமுறைகள்.

online shopping
online shopping

ஆன்லைனில் நடக்கும் அட்டகாசம் இன்னமும்கூட சைஸ் வாரியாய் உண்டு. உதாரணத்துக்கு, இ-காமர்ஸ் கம்பெனிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்கள் பொருள்களை தங்கள் சைட்டில் விற்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்தால் அதில் ஓட்டை இருக்காதா? அப்படி ஒரு ஓட்டை மூலம் பல காலம் ஏமாற்றி கொள்ளை லாபம் பார்க்கின்றன பெரிய இ-காமர்ஸ் கம்பெனிகள். எப்படி? சில இந்திய கம்பெனிகளில் மறைமுகமாக முதலீடு செய்து அவை மூலம் பொருள்களை விற்கின்றன. இந்த ஃப்ராடுதனத்துக்கும் நோ சொல்கிறது புதிய விதிமுறைகள்.

இமாலய டிஸ்கவுன்ட், ஃப்ளேஷ் சேல் போன்ற மேட்டர் மீதும் பாய்கிறது புதிய சட்டம். தனக்கு வேண்டிய கம்பெனி, உறவுக்கார பிராண்டுகளை மட்டும் புரமோட் செய்யும் வகையில் இவ்வகை விலைக்குறைப்பு வைபவங்கள் விமரிசையாக நடக்கின்றன என்பதால், இதையும் நிறுத்தினால் என்ன என்று கேட்டிருக்கிறது புதிய விதிமுறைகள்.

அதோடு, வெளிநாட்டு பிராண்டுகளை விற்கும் இ-காமர்ஸ் சைட்டுகள் அது எந்த நாட்டு பொருள் என்று விளக்க வேண்டும் என்கிறது புதிய சட்டம். அத்துடன், அந்த வெளிநாட்டு பிராண்ட் போலுள்ள இந்திய பிராண்டுகளை அருகில் காட்ட வேண்டும் என்கிறது. வெளிநாட்டு பொருள்களை வாங்குகிறேன் என்று தெரிந்து வாங்குங்கள், அதே பொருளுக்கு இணையான இந்திய பொருள்களைப் பார்த்துவிட்டு பிறகு, முடிவெடுங்கள் என்று அர்த்தம். இந்தியா வாழ்க என்று வாய் கிழிய பேசும் வீரர்களில் ஒரு சிலராவது தேசப்பற்று பீறிட, இந்திய பொருள்களை வாங்க மாட்டார்களா என்ற நப்பாசை.

பெரிய இ-காமர்ஸ் கம்பெனிகள் இந்தப் புதிய விதிமுறைகளைப் பற்றி இன்னும் நேரடியாக வாய் திறக்கவில்லை. படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்கிறார்கள். ஏதோ தேர்வுக்கு படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கேட்பது போல. அதற்காக அவர்கள் வாய் பொத்தி கை கட்டி ஓகே சொல்வார்கள் என்று நினைக்காதீர்கள். தங்கள் பொதுஜன தொடர்பு ஏஜென்சிகள் மூலம் பத்திரிகைகளில், டீவி சேனல் விவாதங்களில் இந்த விதிமுறைகள் எப்படி இந்திய நாட்டுக்கு ஊறு விளைவிக்கும், ஊறுகாய் விளைவிக்கும் என்று அலறத் தொடங்கிவிட்டார்கள். சும்மாவா, பல லட்சம் கோடிகள் புழங்கும் பிசினஸ் இது. அடி வயிற்றில் கை வைத்தால் சும்மா இருப்பார்களா? ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல் விடமாட்டார்கள்.

Shopping
Shopping
Photo: Pexels

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விதிமுறைகளிலுள்ள பல விஷயங்கள் ஏதோ இப்போதுதான் சட்டமாக்கப்படுகின்றன என்பது போல் பலர் நினைக்கிறார்கள். புதிய விதிமுறைகளில் இருக்கும் பல மேட்டர்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவைதான். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்படி நடக்கவில்லை. அவற்றைத் தூசி தட்டி `இந்த பழைய விஷயங்களையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அரசாங்கம் ஞாபகப்படுத்தியிருக்கிறது. அவ்வளவே.

பெரிய இ-காமர்ஸ் கம்பெனிகளைக் கேட்டால், நாங்கள் நஷ்டப்பட்டுதான் விற்கிறோம் என்று தமிழ் டீவி சீரியல் போல் புலம்புகிறார்கள். அப்படி அவர்கள் உண்மையிலேயே நஷ்டப்படுகிறார்களா?

ஆம், உங்க வீட்டு நஷ்டம், என் வீட்டு நஷ்டமில்லை. ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி நஷ்டத்தை அரவணைத்து ஆலிங்கனம் செய்கிறார்கள். எதற்கு இவர்களுக்கு இந்த நேர்த்திக் கடன்? இந்த நாட்டில் வந்து பணத்தை அழ வேண்டும் என்று எதற்கு இவர்களுக்கு தலையெழுத்து?

அங்குதான் இருக்கிறது அவர்களின் மறைமுக நோக்கம். உலகமெங்கிலிருந்து முதலீடு பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு இங்கு பிசினஸ் செய்கிறார்கள். மேக்சிமம் ரீடெயில் பிரைஸில் மற்றவர்கள் விற்கட்டும். நாங்கள் மினிமம் ரீடெயில் பிரைஸில் விற்கிறோம் என்று கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டு நஷ்டத்தில் விற்கிறார்கள். சராசரியாக ஒரு ரூபாய், அதாவது 100 காசு வருவாய் பெற 143 காசு செலவழிக்கிறார்கள் சிலர். இதை ப்ரிடேடரி பிரைஸிங் என்பார்கள். கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம்!

சோழி சும்மா ஆடுவதில்லை. மூலதனத்தை மொத்தமாகக் கொட்டி மக்களை மயக்கி சின்ன கடைக்காரர்களைப் போட்டி போட முடியாதபடி ஊமையாக்கி மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டால், பிறகு தங்களைக் கேட்க நாதியில்லாது போகும் என்ற வியூகம்தான்.

காலகாலமாகவே இந்தியா வியாபாரிகள் நாடு. அமெரிக்கா, சீனாவைவிட இங்கு கடைகள் அதிகம். அதை நம்பி வாழும் கடைக்காரர்கள் அதிகம். அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக கலாசார ரீதியாகவும் பராமரித்து பாதுகாக்கும் பெரிய பொறுப்பு அரசாங்கம் முதல் நம் அனைவருக்கும் இருக்கிறது.

யார் செய்த புண்ணியமோ மத்திய அரசுக்கு இது புரிந்திருக்கிறது. பேச்சுவார்தை ரேஞ்சுக்காவது விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நாட்டின் நல்ல காலம் தொடர்ந்து விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் சிறப்பு. இந்தியர்கள் இளிச்சவாயர்கள் இல்லை என்பதை உலகம் உணரும்!

- குமார் வேம்பு, CEO and Founder, GOFRUGAL

குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. அவரின் கருத்துகளுக்கு விகடன் பொறுப்பேற்காது.