Published:Updated:

எக்கச்சக்க தள்ளுபடி... ஆன்லைன் நிறுவனங்கள் எப்படித் தருகின்றன? - வியாபார சூட்சுமம்

BUSINESS

பிரீமியம் ஸ்டோரி
ரு டிவியைக் கடையில் போய் வாங்கினால் 20,000 ரூபாய். அதே டிவியை ஆன்லைனில் வாங்கினால் 17,000 ரூபாய்தான். இதே மாதிரி எந்தப் பொருளை எடுத்தாலும் கடைகளில் வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்கும்போது, அநியாயத்துக்கு விலை குறைவாக கிடைக்கிறதே, எப்படி அவர்களால் மட்டும் இவ்வளவு குறைவாக பொருளைத் தரமுடிகிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும் எனில், மேற்கொண்டு படியுங்கள்.

நிஜக் கடை Vs ஆன்லைன்

ஓர் உதாரணத்துடன் விளக்கிச் சொன்னால், உங்களுக்கு எளிதாகப் புரியும். நான் ஒரு கடை வைத்திருக் கிறேன். பிரபல கம்பெனியின் டிவியை 13,000 ரூபாய்க்கு வாங்கி, 15,000 ரூபாய்க்கு விற்கிறேன். என்னுடைய லாபம் 2,000 ரூபாய், அதாவது 15% லாபம்.

இதே டிவியை ஆன்லைன் கம்பெனி மூலமாக விற்க வேண்டும் என நினைக்கிறேன். நான், நிறைய டிவிகளை விற்க வேண்டும் என்பதற்காக 7.5% லாபம் வைத்து கொண்டு, 14,000 ரூபாய்க்கு விற்கிறேன். இதில் 300 ரூபாய் கமிஷன் அந்த ஆன்லைன் கம்பெனி பிடித்துக்கொண்டு எனக்கு 13,700 ரூபாய் கொடுக்கிறது. அப்படியானால் எனக்குக் கிடைக்கும் லாபம் வெறும் 700 ரூபாய் மட்டுமே.

முத்து 
சோலையப்பன்
முத்து சோலையப்பன்

இதில் எனக்குக் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. ஏனென்றால், நான் இதற்காக என் நேரத்தை செலவழிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இதன்மூலம் குறைந்த உழைப்பில் கூடுதல் லாபம்தான்.

இப்படி எல்லாம் ஆன்லைன் கம்பெனிகளும் நடந்துகொண்டால் எல்லோருக்கும் லாபமே. இங்கு எல்லோரும் என்று யாரைக் குறிப்பிடுகிறோம் எனில், ஆன்லைன் கம்பெனி வியாபாரிகள், வாடிக்கை யாளர்கள்.

ஆன்லைன் நிறுவனங்கள் தரும் கூடுதல் தள்ளுபடி..!

ஆனால், நிஜமாகவே இப்படித்தான் நடக்கிறதா? இல்லை. இந்த ஆன்லைன் நிறுவனங்கள் இந்த பிரபல நிறுவனத்தின் டி.வியை 14,000 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்க வேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் இன்னும் 2,000 ரூபாயைத் தள்ளுபடி செய்து அந்த டிவியை 12,000 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பேரானந்தம். ஏனென்றால், கடைக்குப் போய் வாங்கினால், 15,000 ரூபாய். ஆன்லைன் நிறுவனத்தில் வாங்கினால் வெறும் 12,000 ரூபாய் மட்டுமே.

‘‘இனிமேல் நாம் வாங்கும் எல்லா பொருளையும் ஆன்லைனில் வாங்கினால் நமக்கு மிகப்பெரிய சேமிப்பு’’ என்ற எண்ணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

அப்படியானால் ஆன்லைனில் விற்கும் வியாபாரிகளுக்கு நஷ்டமா என்று நீங்கள் கேட்கலாம். இல்லவே இல்லை. அவர்களுக்குச் சேர வேண்டிய 13,700 ரூபாயை ஆன்லைன் நிறுவனங்கள் தந்து விடுகின்றன. அப்படியானால் எதற்காக இவர்கள் ஒவ்வொரு டிவியையும் 1,700 ரூபாய் நஷ்டத்துக்கு விற்கிறார்கள்? சிறிதளவு விலை குறைத்து விற்றாலே வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடையும்போது ஏன் இவ்வளவு குறைத்துக் கொடுக்க வேண்டும், இதனால் யாருக்கு லாபம் என்று நீங்கள் கேட்கலாம்.

எக்கச்சக்க தள்ளுபடி... ஆன்லைன் நிறுவனங்கள்  எப்படித் தருகின்றன? - வியாபார சூட்சுமம்

வாடிக்கையாளர்கள்தான் முக்கியம்..!

‘Burn the cash’ என்ற ஒரு பிரபலமான வாசகத்தை ஆன்லைன் நிறுவனங்களில் பெருமையாகப் பேசுவார்கள். பணத்தை எரிப்பதல்ல, பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவழிப்பது என்று இதற்கு அர்த்தம். இதில் என்ன ஆனந்தம் என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உதாரணத்தைச் சொன்னால், உங்களுக்கு சட்டென்று விஷயம் புரியும்.

ஓர் ஊரில் 1,000 பேர் இருக்கிறார்கள். அந்த ஊரில் மொத்தம் நாலு துணிக்கடைகள் தான் இருக்கின்றன. தலா 250 பேர் ஒரு கடையில் வாங்குகிறார்கள். அந்த நான்கு துணிக்கடையிலும் ஒரு சட்டையின் எம்.ஆர்.பி 1,000 ரூபாய் என நான்கு பேரும் ஒரே மாதிரி சொல்லி வைத்ததுபோல் விற்கிறார்கள். இப்போது ஒரு புதுக்கடை வாடிக்கையாளர்களை வர வைப்பதற்காக 1,000 ரூபாய்க்கு விற்க வேண்டிய சட்டையை வெறும் 800 ரூபாய்க்கு விற்று ஒரு சலசலப்பு ஏற்படுத்துகிறது. இதனால் அந்தக் கடையின் பக்கம் 200 வாடிக்கையாளர்கள் போய்விடுகிறார்கள். இப்போது ஐந்து கடைக்கு தலா 200 வாடிக் கையாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், வேறொரு ஊரிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனம் அந்த ஊருக்கு வருகிறது. இவர்களுக்குப் பணபலம் மிக அதிகம். பல கோடி ரூபாய் முதலீடு வைத்துக் கொண்டு, ‘இந்த ஊரில் இருக்கும் முக்கால்வாசி வாடிக் கையாளர்களை நம்மிடத்தில் வாங்க வைக்க வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பிரச்னை இல்லை’ என்று நினைக்கிறது. அதன் அடிப் படையில் அந்த ஆன்லைன் நிறுவனமும் 1,000 ரூபாய்க்கு விற்ற சட்டையை 500 ரூபாய்க்கு விற்கிறது. ஒவ்வொரு சட்டை யையும் 300 ரூபாய்க்கு நஷ்டத்தில் விற்கிறது. ஊரிலுள்ள 1,000 வாடிக்கையாளர்களில் 800 பேர் இவர்களிடம் போய் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்போது அந்த நாலு கடைக் காரர்களும் தலா ஐம்பது வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு புதிய வாடிக்கையாளர் எப்போது வருவார் என்று காத்திருக்கத் தொடங்கு கிறார்கள்.

‘Burn the cash’ என்ற பிரபலமான வாசகத்தை ஆன்லைன் நிறுவனங்கள் பெருமையாகப் பேசுவார்கள். பணத்தை எரிப்பதல்ல, பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவழிப்பது என்று இதற்கு அர்த்தம்.

முதலில் நஷ்டம், பிறகு லாபம்..!

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இப்படி செய்தால்தான் வாடிக்கையாளர்கள் அனை வரையும் தங்கள் பக்கம் திரும்ப வைக்க முடியும் என ஆன்லைன் நிறுவனங்கள் நினைக்கின்றன. ஐந்து வருடங்களில் முக்கால்வாசி வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் திருப்பி, தங்கள் நிறுவனத் தில் மட்டுமே வாங்குவது என்று பழக்கப்படுத்திய பிறகு, சட்டை விலையைக் கொஞ்சம் கொஞ்ச மாக ஏற்றி விற்க ஆரம்பிப்பார்கள். வாடிக்கையாளர்களும் சொகு சாக கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பொருளை வாங்கி சோம்பேறியான பிறகு, அவர்களுக்குக் கடைக்குப் போகும் எண்ணமே வராது. இதுதான் இவர்களது வியாபார உத்தி.

ஆன்லைன் நிறுவனங்கள் ஏன் இப்படிச் செய்கின்றன என்று கேட்டால், சந்தையைப் பிடிப்பதற்காக ஒரு ஆன்லைன் நிறுவனம் ஐந்து வருடங்களில் சுமார் 50,000 கோடி பணத்தைச் செலவு செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஐந்து வருடம் கழித்து, ‘100 கோடி மக்கள் எங்களிடத்தில் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டி, அந்த நிறுவனத்தை 60,000 கோடி ரூபாய்க்கு வேறு ஒரு பெரிய நிறுவனத்திடம் விற்றுவிடுவார்கள். இதன்மூலம் அவர்கள் விட்ட பணத்தை எல்லாம்விட அதிக லாபம் சம்பாதித்து, அதாவது 10,000 கோடி ரூபாயை லாபமாக சம்பாதித்து, அதை முதலீட்டாளர்கள் பிரித்துக் கொள்வார்கள்.

அந்த ஆன்லைன் நிறுவனத்தை வாங்கும் புதிய நிறுவனத்துக்குப் பல நன்மைகள் கிடைக்கும். காரணம், புதிதாக ஒரு நிறுவனம் ஆரம்பித்தால், வாடிக்கையாளர்களை உருவாக்குவது கடினம். அதேபோல், நிறைய நேரம் செலவழித்து ஆட்கள் சேர்ப்பது, அவர்களுக்கு வேலையைச் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளைப் புதிய நிறுவனம் செய்யத் தேவையில்லை.

‘100 கோடி மக்கள் எங்களிடத்தில் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டி, வேறொரு நிறுவனத்திடம் கொள்ளை லாபத்துக்கு விற்றுவிட நினைப்பதுதான் ஆன்லைன் நிறுவனங்களின் நோக்கம்!

அபார வளர்ச்சியில் ஆன்லைன் துறை..!

இந்தக் கண்ணோட்டத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் நடப்பதால்தான், அந்தத் துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சி இனிவரும் காலங்களில் இன்னும் பெரிதாகும். எல்லாவிதமான பொருள்களும் சேவைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கிடைக்கும்போது, அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கமானது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பது சந்தேகமில்லை!

எக்ஸ்பிரஸ் வளர்ச்சியில் மிந்த்ரா!

கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு ஆன்லைன் நிறுவனங்களின் வளர்ச்சி எக்ஸ்பிரஸ் வேகமெடுத்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மிந்த்ரா நிறுவனம் கடந்த மூன்று மாத காலத்தில் பாண்டலூன், மேக்ஸ் ஃபேஷன், ஃபேப் இந்தியா, பாட்டா எனப் பல முன்னணி நிறுவனங்களின் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. தீபாவளி பண்டிகைக் காலத்தில் புதிய வாடிக்கையாளர்களை வரவழைப்பதில் 80% வளர்ச்சி கண்டிருப்பதாகவும், இந்த நிறுவனத்தை நோக்கி வரும் வாடிக்கையாளர்களின் டிராஃபிக் 85 சதவிகிதமாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வான அமர் நாகராம். விளையாட்டு தொடர்பான ஆடை அணிகலன்களை விற்கும் ஜெர்மன் நாட்டு நிறுவனமான பூமா (Puma), மிந்த்ரா மூலம் செய்யும் விற்பனை இந்த பண்டிகை காலத்தில் மட்டும் 250% மேல் வளர்ச்சி கண்டுள்ளது!

-ஆகாஷ்

பிட்ஸ்

கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகைகள் வருவதால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா வுக்கு அதிக பொருள்கள் ஏற்றுமதி ஆவதாக இபே சொல்லி இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு