Published:Updated:

பேனர் இல்லை... விளம்பரம் இல்லை... நிரம்பும் கூட்டம்... பிசினஸ் சீக்ரெட்..!

சுயதொழில்

பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் பார்த்திருக்கலாம்... சில கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். சில கடைகளில் ஒன்றிரண்டு பேர்தான் பொருள் வாங்குவார்கள். ஏன் இப்படி என நீங்கள் யோசித்திருக்கலாம். பிசினஸைப் பொறுத்தவரை சின்னச் சின்ன நுட்பங்களை நேர்த்தியாகச் செய்தாலே மக்களை வசீகரிக்க முடியும். அத்தகைய டெக்னிக்குகளை சிலர்தான் செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு தொழில் வளர்ச்சியைத் தருகிறது.

சென்னை - பெரம்பூர் மேம்பாலத்தின் அருகே பாலாஜி ஐஸ்க்ரீம் என்ற கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கடையில் அப்படி என்ன ஸ்பெஷல் என பாலாஜி ஐஸ்க்ரீம் கடையின் உரிமையாளர் சசிக்குமாரிடம் கேட்டோம்.

“இந்த ஐஸ்க்ரீம் கடை எங்க அப்பாவும், அவங்க நண்பரும் சேர்ந்து ஆரம்பிச்சு 40 வருஷம் ஆகுது. எங்க அப்பாவோட நண்பர் அவங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட இருந்து ஐஸ்க்ரீம் செய்யக் கத்துக்கிட்டாங்க. எங்க குடும்பம் அப்ப பூந்தமல்லியில் இருந்தது. ஆனா, பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும்னு இந்தக் கடையை இங்கே ஆரம்பிச்சாங்க.

சசிக்குமார்
சசிக்குமார்

வாங்கும் காசுக்குத் தரமான பொருளை கொடுக்கணும்னு என் அப்பா சொல்வார். அதனால் ஐஸ்க்ரீம் சுவையை ஒரே தரத்தில் கொடுப்பதுதான் எங்களோட நோக்கம். அதனாலதான் 40 வருஷமாகக் கடையில் எந்த மாற்றமும் ஆடம்பர செலவும் நாங்க பண்ணல.

நான் பி.எஸ்ஸி படிச்சுருக்கேன். அப்பாவுக்கு அடுத்து இப்போ நான் பிசினஸைப் பார்த்துக்குறேன். நம்ளோட பிசினஸ் பெருசா இருக்கணும்னு அவசியம் இல்ல, ஐடியா தனித்துவமாக இருந்து தரத்தில் கவனம் செலுத்தினா நிச்சயம் சக்சஸ்தான். ஐஸ்க்ரீமில் குச்சி, கோன், குல்ஃபினு நிறைய வகைகள் இருக்கு. எங்களோட கடையில் கோன்தான் பிரதானம். பால், எசன்ஸ், சர்க்கரை, தவிர வேறு எதுவும் பயன்படுத்துவது கிடையாது. ஒரு நாளைக்கு 80 லிட்டர் பால் வரை தேவைப்படும். வெண்ணிலா ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் எப்போதும் இருக்கும். அது தவிர்த்து, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி என வெவ்வேறு சுவை ஐஸ்க்ரீம் தினம் ஒரு ஃப்ளேவர் என விற்பனை பண்றோம். ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 கோன் விற்பனை ஆகும்.

எங்களோட கடைக்கு நாங்க தனிப்பட்ட முறையில் எந்த விளம்பரமும் பண்ணியதில்ல. வாடிக்கையாளர்கள் செய்யும் வாய்வழி விளம்பரம்தான் நிறைய வாடிக்கையாளர் களை எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. ஆரம்பத்தில் ஒரு ஐஸ்க்ரீம் 60 காசுனு வித்துகிட்டு இருந்தோம். இப்ப ஒரு ஐஸ்க்ரீம் 20 ரூபாய். கோன் ஐஸ்க்ரீம் சாப்பிடுறவங்க நிறைய பேர் அதை வீட்டுக்கும் வாங்கிட்டுப் போகணும்னு கேட்பாங்க. அதனால் எங்க ஐஸ்க்ரீமை கோன் போன்று நாங்களே பேக் பண்ணி விற்பனை பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.

என் அப்பாவுக்கும் அவங்க நண்பருக்கும் இப்போ 76 வயசு. ஆனாலும், தினமும் கடைக்கு வந்து வாடிக்கையாளர்களிடம். நிறைகுறை கேட்பாங்க. நாம் செய்யும் பிசினஸ் எதுவாக இருந்தாலும், நம்முடைய லாபத்துக் காக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் மனநிறைவையும் யோசித்துச் செயல்பட்டால் சக்சஸ் சாத்தியம்தான்” என்று விடை பெறுகிறார் சசிக்குமார்.

வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் சூட்சுமத்தை அறிந்தவர்கள் தொழிலில் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு