Published:Updated:

`இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்!'- சவுதியில் நரேந்திர மோடி அழைப்பு

``இந்தியா அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவில் சவுதி அரேபியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது" - மோடி.

உலகத் தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு!
உலகத் தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு!

``தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இதை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என சவுதி அரேபியாவில் நடக்கும் ‘எதிர்கால முதலீட்டுக்கான முயற்சி’ என்ற உயர்மட்டப் பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

Vikatan

பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தையொட்டி, அவர் சவுதியின் முக்கியத் துறை அமைச்சர்கள், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசினார். இதில் எரிசக்தி, வேளாண், தொழிலாளர் நலன் மற்றும் நீர்த் தொழில்நுட்பங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``வரும் 2024 -ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட இலக்கு கொண்டுள்ள இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யவும் முதலீடு செய்வதற்குமான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’’ என அழைப்பு விடுத்தார்.

சவுதி அரேபியா இளவரசருடன் மோடி
சவுதி அரேபியா இளவரசருடன் மோடி

மேலும் அவர், ``உலக அளவில் பலதரப்பட்ட வர்த்தக அமைப்புகளில் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா, சவுதி அரேபியா போன்ற வளரும் நாடுகளின் பாதையையே உலகப் பொருளாதாரம் வலுவாகச் சார்ந்துள்ளது. G20 அமைப்பிலும், இந்தியாவும் சவுதியும் இணைந்து செயலாற்றி சம அளவிலான, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துகின்றன" என்றார்.

இந்தியா அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் உறவில் சவுதி அரேபியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியா - சவுதி அரேபியா இடையே வர்த்தக உறவு வளர்ச்சியடைந்துள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டில் இரு நாடுகளிடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 27.48 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளி என்ற பெயரையும் சவுதி அரேபியா பெற்றுள்ளது.
நரேந்திர மோடி

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவிகிதத்தை இறக்குமதி செய்து வருகிறது. இதில் இராக்குக்குப் பிறகு அதிக கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. மேலும், இந்தியா- சவுதி இடையேயான வர்த்தக உறவு சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது.

``நீங்கள் கமர்சியல் விமானத்தில் செல்ல வேண்டாம்!''- இம்ரானுக்கு தன் விமானத்தைக் கொடுத்த சவுதி இளவரசர்

சவுதி அரேபியாவும் இந்தியாவில் ஆற்றல், எண்ணெய் சுத்திகரிப்பு, பார்மா, உட்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்திருக்கிறது.

100 பில்லியன் டாலர் முதலீடு
100 பில்லியன் டாலர் முதலீடு

மோடி பயணத்தின் முக்கிய நிகழ்வாக, சவுதி மன்னர் சல்மான் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பு உறவுகள், எண்ணெய் விநியோகம், முதலீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, இரு தரப்பு உறவு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்த மூலோபய கூட்டு கவுன்சில் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.