Published:Updated:

`வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி!' - அரசின் நடவடிக்கையால் வெங்காய விலை குறையுமா?

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வெங்காயம்
வெங்காயம்

வெங்காய சாகுபடி அதிகமுள்ள மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவ மழை தவறியதால், வெங்காய உற்பத்தி பாதிப்புக்குள்ளானது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 க்கும் மேல் சென்றது. தற்போதும் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.140 க்கும், பெரிய வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வெங்காய விலை உயர்வு
வெங்காய விலை உயர்வு
முதல் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை, வியாபாரிகள், வெங்காயத்தை இருப்பு வைக்க உச்சவரம்பு, விலையைக் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு எனப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., மாநிலங்களுக்கு விநியோகம் செய்வதற்காக, வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எகிப்த் நாட்டிலிருந்து ஏற்கெனவே 6,900 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்தது. இதையடுத்து, மேலும் 11,000 டன் வெங்காயத்தைத் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்ய எம்.எம்.டி.சி. `ஆர்டர்’ கொடுத்துள்ளது. இது, அடுத்த மாதம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்காய விலை உயர்வுக்குக் காரணம் என்ன? எப்போது விலை குறையும்?

இதன்மூலம், உள்நாட்டில் வெங்காய வரத்து அதிகரிக்கும் என்றும், அதன் விலை குறையும் என்றும் கருதப்படுகிறது. கடந்த நவம்பர் 20-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு 1.20 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்திருப்பது  குறிப்பிடத்தக்து.

வெங்காய விலை ஏற்றம் உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது? கீழே கமென்ட் செய்யுங்கள்!