Published:Updated:

`மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள்; ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!’ - வேதனையில் சில்லறை வர்த்தகர்கள்

சில்லறை வர்த்தகக்கடைகள் அடைப்பு
சில்லறை வர்த்தகக்கடைகள் அடைப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் கார்ப்பரேட் அல்லாத சிறுவணிகர்களின் துறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிவரக் கையாளவில்லை.

இந்தியா முழுவதும் ஊரடங்கு தொடங்கி 40 நாள்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது, இந்த ஊரடங்கில் மருந்துக்கடைகள், பால் விநியோகம், காய்கறி, பலசரக்குக்கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளும்கூட கொரோனா பரவல் சூழ்நிலைக்கேற்ப குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டன.

சில்லறை வர்த்தகக்கடை
சில்லறை வர்த்தகக்கடை

இந்த ஊரடங்குக் கட்டுப்பாடு முழுமையாக விலக்கிக்கொள்வதற்கு மேலும் சில மாதங்கள் ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சில்லறை வர்த்தகர்களுக்கு, இந்த ஊரடங்கு தொடரும் சூழலில் மிகப்பெரிய அளவிலான பொருள் இழப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடந்த 40 நாள்களில் மட்டும் சுமார் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக, போதுமான அளவு நிதி ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிடும்படி பிரதமர் மோடியையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பில் மொத்தம் 40,000 சில்லறை வர்த்தக சங்கங்கள் இணைந்துள்ளன. இந்த அமைப்பில், இந்தியா முழுவதும் 7 கோடி வர்த்தகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் கார்ப்பரேட் அல்லாத சிறுவணிகர்களின் துறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிவரக் கையாளவில்லை என்று இந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``எங்கள் துறையில்தான் நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வேலை பார்க்கிறார்கள். ஆனால், எங்களது நிதிச்சிக்கல் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கொள்ளவே இல்லை. 'தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும், வங்கிகளுக்கு முழுமையாக வட்டியைச் செலுத்த வேண்டும், நிறுவனங்களுக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்' என்றெல்லாம் உத்தரவிடுகிறது. தற்போது இந்தியா முழுவதும் மதுபானக்கடைகளைத் திறக்கவுள்ளார்கள். இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கக்கூடும். இத்தகைய தவறான முடிவைக் கைவிட வேண்டும்’’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு