Published:Updated:

`மதராஸி என்று சொன்னார்'- அமெரிக்காவுக்குப் பறந்த புகாரால் ஆடிப்போன இன்ஃபோஸிஸ்!

`மதராஸி' என்று தலைமைச் செயல் அதிகாரி அழைத்த காரணத்தால் இன்போஸிஸ் நிறுவனத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்போஸிஸ்
இன்போஸிஸ்

பொதுவாக வட இந்தியாவில் தமிழர்களை மட்டுமல்லாமல் தென்னிந்தியர்களை மதராஸிகள் என்றே அழைப்பார்கள். வட இந்தியர்களுக்குத் தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. தென்னிந்தியர்கள் என்றாலே அவர்கள் மதராஸிகள்தான். வட இந்தியாவுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் கோலோச்சினர். மும்பையில் தாராவி, சயான், மட்டுங்கா போன்ற பகுதிகளில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகம். அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய திட்டமிட்ட உழைப்பு தமிழர்களை எங்கே சென்றாலும் பிழைக்கவைத்தது.

நந்தன் நீலகேணி
நந்தன் நீலகேணி

மும்பையில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களே அதிகளவில் பணிபுரிந்தனர். எனினும், சாதாரண பணியிடங்களிலிருந்து பாலிவுட் வரை, இனப் பாகுபாடு இருந்தது. நடிகர் மாதவன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மும்பையில் 'மதராஸி' என்று தன்னை ஒதுக்கி வைத்திருந்ததாக ஒருமுறை கூறியுள்ளார். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர் அதிகாரிகள் வரை தமிழர்கள் இருந்தாலும், அவர்களை மதராஸிகள் என்று அழைப்பதே வட இந்தியர்களின் வாடிக்கை.

Vikatan

அதேபோல, தமிழர்களை 'மதராஸி' என்று அழைத்துவந்த இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பாரெக் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் போர்டு மீட்டிங் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் டி.சுந்தரம் மற்றும் பிரகலாத் ஆகியோர் குறித்து, 'அந்த மதராஸிகள் தேவையில்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். எனவே, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம் மறந்துவிடுங்கள்' என்று சலீல் பாரெக் கூறியதாகப் புகார் எழுந்துள்ளது. மற்றோர் இயக்குநரான கிரண் மஜூம்தார் ஷாவைப் பார்த்து 'திவா' என்ற கேலி பொருள்படும்படியாக சலீல் பேசியுள்ளார். இதே குற்றச்சாட்டு இன்ஃபோஸிஸ் தலைமை நிதியதிகாரி நிலஞ்சன் ராய் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் நீண்டகாலமாகவே சலீல் பாரெக் மற்றவர்களை இதுபோன்ற வார்த்தைகளால் அவமதித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்ஃபோஸிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பாரெக்
இன்ஃபோஸிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பாரெக்

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சேர்ந்து செப்டம்பர் 22-ம் தேதி இன்ஃபோஸிஸ் நிறுவனத்துக்கு இ-மெயில் வழியாகப் புகார் அளித்துள்ளனர். 'எதிக்கல் எம்ப்ளாயீஸ்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் குழு, அமெரிக்காவின் Securities and Exchange Commission (SEC) அமைப்புக்கும் தங்கள் புகாரை இ-மெயில் வழியாக அனுப்பியுள்ளது. மதராஸிகள் என்று சலீம் பாரெக் இழிவாகப் பேசும் வாய்ஸ் ரெக்கார்டுகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகாரால், இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 16 சதவிகிதம் குறைந்தது. இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலகேணி, ``வாஷிங்டனில் உள்ள பணியாளர்கள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், பணியாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, எங்கள் நிறுவனம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறைரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.