தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான இனஃபோசிஸ் மீது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் சங்கமான என்ஐடிஈஎஸ் (NITES) புனேவில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது. அதன்படி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்திலிருந்து பணி ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதன் போட்டி நிறுவனங்களில் ஆறுமாதங்களுக்கு குறைந்தபட்சம் சேரக்கூடாது என்று அந்த மின்னஞ்சலில் கூறியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக பிரபல நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், அக்சன்சர் போன்றவை உள்ளன.
தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் தாமே முன் வந்து பணி ராஜினாமா செய்வது மிக அதிக அளவில் உள்ளது. தகுதி வாய்ந்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தற்போது அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் தமது நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணி ராஜினாமா செய்வதை தடுக்கும் பொருட்டு இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த மின்னஞ்சலை அனுப்பி உள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள் வேலை செய்யும் புராஜெக்ட் சார்ந்த நிறுவனங்களில் 12 மாதம் வரை வேலைக்கு சேரக்கூடாது என்றும் கூறியுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொழிலாளர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் வழக்கம் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக அளவு இருந்தது. ஆனால், அந்தச் சூழ்நிலை தற்போது அடியோடு மாறியுள்ளது. அதிக அளவு ஊழியர்கள் பணி ராஜினாமா செய்வது நிறுவனங்களின் லாபத்தை வெகுவாக பாதித்துள்ளது.

தற்போது பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட முடிவுகளில் அதிக அளவு ஊழியர்கள் பணி ராஜினாமா செய்வது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செலவீனம் சற்று அதிகரித்துள்ளதாகவும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, இன்ஃபோ
சிஸ் நிறுவனத்தைச் சார்ந்த பங்குகள் அதன் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 15% வரை குறைந்து வர்த்தகமாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்டம் என்ன சொல்கிறது?
தகவல் தொழிலாளர் நல சட்டங்களைப் பொறுத்தவரை நிறுவனங்களால் இவ்வாறு ஊழியர்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களில் சேரக்கடாது என்று கட்டாயப்படுத்த முடியாது. ஓர் ஊழியர் அவருக்கு விருப்பப்பட்ட எந்த நிறுவனத்திலும் சேர்ந்து பணிபுரிய அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதனால் ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் சேர்ந்தாலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் சட்டபூர்வமாக அந்த ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்தக் காலகட்டத்தை அவர்களின் வருங்கால ஏற்றத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வது ஒவ்வொருவரின் சாமர்த்தியம் ஆகும்.
மேலும் பல ஊழியர்கள் குறைந்த கால இடைவெளியில் வேறு நிறுவனங்களுக்கு வேலை மாறுகின்றனர். இது அவர்களுக்கு உடனடி பண பலன்களைக் கொடுத்தாலும் நீண்டகால நோக்கில் அவர்களுக்கு பாதகமாக மாறலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களுக்கான டிமாண்ட் குறையும் பொழுது ஊழியர்களை நினைத்த மாத்திரத்தில் வேலையை விட்டு நீக்கும் வழக்கமும் உள்ளது.

அதனால் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் உடனடி அதிக ஊதியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நீண்ட கால நோக்கில் முடிவுகளை மேற்கொள்வது அவர்களை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்.
இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவு சார்ந்த திறன் மற்றும் புதிய டெக்னாலஜிகளில் அனுபவம் ஆகியவை அடிப்படை ஆகும். அந்தத் திறனை வளர்த்துக்கொண்டு நல்ல நிறுவனங்களில் சேர்வதற்கு இந்தத் தேவை அதிகமுள்ள காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு பலனளிக்கும்.