Published:Updated:

ஸ்டார்ட்அப்களுக்குக் கைகொடுக்கும் பிரமிக்க வைக்கும் இன்குபேஷன் சென்டர்!

இன்குபேஷன் சென்டர்
பிரீமியம் ஸ்டோரி
இன்குபேஷன் சென்டர்

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்களுக்குக் கைகொடுக்கும் பிரமிக்க வைக்கும் இன்குபேஷன் சென்டர்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
இன்குபேஷன் சென்டர்
பிரீமியம் ஸ்டோரி
இன்குபேஷன் சென்டர்

ஆ.பி.அர்ஜுன்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான காலம் இது. இன்றைய இளைஞர்களில் பலர் படித்து முடித்தவுடன் சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கு கிறார்கள். இவர்களின் தொழில் ஐடியாக்களை ஒரு பிசினஸாக வளர்த்தெடுப்பதில் இன்கு பேஷன் சென்டர்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. சென்னைக்கு அருகே வண்டலூரில் இருக்கும் கிரசன்ட் இன்னோ வேஷன் & இன்குபேஷன் சென்டர் (CIIC) ஸ்டார்ட்அப்களுக்கான ‘ஒன் ஸ்டாப் ஷாப்’பாகத் திகழ்கிறது என்பதைக் கேள்விப் பட்டு அங்கு சென்றோம்.

சுமார் 40,000 சதுர அடியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த இன்குபேஷன் சென்டர், தற்போது, 113 ஸ்டார்ட்அப்கள் மற்றும் 15 பிரத்யேக பணியாளர்களைக் கொண்டுள்ளன. இந்த இன்குபேஷன் சென்டரின் நோக்கம் என்ன என்று இதன் தலைமை நிர்வாக அதிகாரி பர்வேஸ் ஆலம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள், தொழில்முனைவோர் எனப் பலரும் சொந்த மாகத் தொழில் தொடங்க நினைக்கிறார்கள். இவர்களை ‘ஸ்டார்ட்அப்’பாக மாற்றுவது எங்கள் முதல் நோக்கம். ஏற்கெனவே தொழில் தொடங்கியவர்களை லாபகரமாகச் செய்ய வைப்பது இரண்டாவது நோக்கம். எல்லாத் தொழில்களிலும் புதுமை படைப்பது எங்கள் மூன்றாவது நோக்கம். இத்துடன், கல்வித் துறை, தொழில்துறை மற்றும் அரசாங்கத்துக்கு இடையிலான கூட்டு நெட்வொர்க்குகளை பார்ட்னர்ஷிப் மூலம் உருவாக்குவது எங்கள் நான்காவது நோக்கம்’’ என்று அடுக்கிக் கொண்டே போனவர், இந்த இன்குபேஷன் சென்டரில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பான பல புள்ளிவிவரங்களைத் தரத் தொடங்கினார்.

ஸ்டார்ட்அப்களுக்குக் கைகொடுக்கும்  பிரமிக்க வைக்கும் இன்குபேஷன் சென்டர்!

‘‘இப்போதைக்கு எங்கள் இன்குபேஷன் சென்டரில் 113 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 59% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் லைஃப் சயின்ஸ் எனப்படும் மருத்துவத்துறை சார்ந்தவையாக உள்ளன. 35% நிறுவனங்கள் அதிநவீன தொழில்துறை சார்ந்தவையாக உள்ளன. 6% நிறுவனங்கள் இடம்பெயர்தல் மற்றும் வாகனப் போக்கு வரத்து சார்ந்தவையாக உள்ளன. இந்த ஸ்டார்ட்அப்களில் 63 ஸ்டார்ட் அப்கள் ஐடியா என்கிற நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளாக உள்ளன. 21 ஸ்டார்ட் அப்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் உள்ளன. 21 ஸ்டார்ட்அப்கள் ஓரளவுக்கு வளர்ந்து, வருமானம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளன. 8 ஸ்டார்ட்அப்கள் நன்கு வளர்ந்து, நிறைய சம்பாதிக்கும் நிலையில் உள்ளன’’ என்றார்.

இந்த இன்குபேஷன் சென்டரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வசதிகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு ரவுண்ட் சென்றோம். ஸ்டார்ட்அப்களுக்கான பிரத்யேக கோ வொர்க்கிங் இடத்தை அருமையாக அமைத்திருக்கிறார்கள். இங்கு அனைத்து ஸ்டார்ட்அப்களும் ‘ப்ரைன் ஸ்டாமிங்’ என்று சொல்லப்படும் புதிய ஐடியாக்களை பேசி உருவாக்கும் கூட்டத்தை நடத்தலாம். அதையொட்டி, ஸ்மார்ட் உற்பத்தி இடம் உள்ளது. ஸ்டார்ட்அப்களுக்குத் தேவையான அதிநவீன சாஃப்ட்வேர்ஸ், 3டி பிரின்ட்டர்ஸ் போன்றவை அங்கு இருப்பது ஸ்பெஷல்.

இந்த இன்குபேஷன் சென்டரில் அதிகமான நிறுவனங்கள் மருத்துவத்துறை சார்ந்ததாக இருப்பதால், அதிக செறிவூட்டப்பட்ட மருந்துகள், ஸ்டெம் செல்ஸ் போன்ற மருந்து களை கவனமாகப் பராமரிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் சரியானவை தானா என்று சோதிக்க பயோ இன்ஃபர் மேட்டிக்ஸ், ட்ரக் டிஸ்கவரி போன்ற வற்றுக்கான உரிமம் பெற்ற சாஃப்ட்வேர்கள் இந்த சென்டரில் இருக்கிறது.

டெல்லியில் இருக்கும் BIRAC என்னும் அரசு நிதி நிறுவனத்திடமிருந்து நிதி பெற்று லைஃப் சயின்ஸ் ஆய்வகம் உருவாக்கியுள்ளனர். பெயர் தெரியாத பாசியில் இருந்து பயோடீசல், உயிரி எரிபொருள் மற்றும் தாவரங்களுக்கு உரம் போன்றவற்றை இயற்கையான முறையில் உருவாக்குகிறார்கள். டி.என்.ஏ டெஸ்டிங்கும் இங்கு நடக்கிறது.

பலவிதமான ஸ்டார்ட்அப் நிறுவனங் களைப் பார்த்துவிட்டு, வெளியே வரும் போது நம் கண்ணில் வித்தியாசமான ஒன்று தட்டுப்பட்டது. எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோவைப் போல் ஒரு பெண் ரோபோ இருந்தது. அதன் பெயர் சபிரா. நியூ புரபெல்லர் டெக்னாலஜி என்னும் ஸ்டார்ட்அப் கொரோனா சமயத்தில், வாடிக்கையாளர்களின் உடல்வெப்ப நிலையை ஸ்கேன் செய்யவும், அவர்களுக்குக் கை சுத்திகரிப்பு மற்றும் பிற உதவிகள் வழங்கவும் இந்த ரோபோவை உருவாக்கியிருந்தார்கள். அடுத்து, துல்லியமான வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஆராய்ச்சிக்காக காளான், தக்காளி, கத்திரி போன்றவற்றைப் பயிரிட்டு வருவதைப் பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது.

பர்வேஸ் ஆலம்
பர்வேஸ் ஆலம்

மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பர்வேஸ் ஆலம் மீண்டும் பேசினார். “பொதுவாக, சைல்டு இன்குபேட்டர், எக் (egg) இன்குபேட்டர் என்கிற மாதிரி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், நாங்கள் நடத்துவது பிசினஸ் இன்கு பேட்டர். அதாவது, பிசினஸை மேம்படுத்தத் தேவையான மூன்று முக்கியமான விஷயங்களைச் செய்கிறோம். சுருக்கமாக, MMM என்று சொல்வோம். மென்டார் (Mentor), மணி (Money), மார்க்கெட் (Market) என்பவைதான் அவை.

முதலில், தொழில்முனைவோர் எங்களிடம் கொண்டுவரும் யோசனைகளை செயலாக்க அவர்களுக்கு தொழில்நுட்ப வசதி மற்றும் நிதி வசதியை அளிப்போம். அவர்களின் யோசனைகளுக்கு உகந்த, அனுபவமிக்க வழிகாட்டிகளை இணைத்துவிடுவோம். அடுத்து, நிதியைப் (money) பொறுத்தவரை, 2 விதம். கவர்ன்மென்ட் கிராண்டிலிருந்து 6 கோடி வரை, பின்பு, தனியார் முதலீடு மூலம் கிட்டத்தட்ட 45 கோடி வரை என மொத்தமாக 50 கோடி வரை இந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட்அப்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. மூன்றாவது மார்க்கெட் சப்போர்ட். ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான பல்வேறு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். டொமஸ்டிக், இன்டர்நேஷனல் இரண்டும் இதில் அடங்கும்.

சமீபத்தில், துபாய் எக்ஸ்போவுக்கு ஸ்டார்ட்அப்களை கூட்டிச் சென்றோம். ஸ்டார்ட்அப்களுக்கு மிக முக்கியமானது புதுமையும் கிரியேட்டி விட்டியும்தான். சுமார் 6 - 7 வருடங்களுக்குள் ரூ.7,500 கோடிக்கு மேல் மதிப்பீடு செய்த ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் இருந்தது அந்த புதுமைகள்தான். அதனால்தான், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலியோர் ஸ்டார்ட்அப்கள், நாட்டின் ஜி.டி.பி-க்கு அதிக பங்கு வகிக்கின்றன என்கிறார்கள்.

மேலும், ஜனவரி 16-ம் தேதி “ஸ்டார்ட் அப் டே” என்று அறிவித்துள்ளனர். மாநில அளவில் 1 டிரில்லியன் டாலர் அடைய ஸ்டார்ட்அப்கள் பங்கு அதிகம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

அரசு மற்றும் தனியாரிட மிருந்து எங்களுக்கு கிடைக்கும் நிதி மூலம் தரமான வசதிகளை உருவாக்கியுள்ளோம். இங்கே உருவாக்கியுள்ள வசதிகளானது ஸ்டார்ட்அப்களின் மூலதன முதலீட்டை வெகுவாகக் குறைக்கிறது. நாங்கள், மற்ற இன்குபேஷன் சென்டருடனும் இணைத்து கோ-இன்குபேஷன் சென்டர் போலவும் ஸ்டார்ட் அப்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து வருகிறோம்” என்றார்.

இதுபோன்ற மையங்கள்தான் வருங்காலத்தில் புதிய புதிய ஸ்டாடர்ட் அப்களை உருவாக்கும் எனலாம்.