Published:Updated:

சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் பைக்..! கவனம் ஈர்த்த கோவை இளைஞர்!

I N N O V A T I O N

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவுல ஒரு நாள் வாழ்ந்தா, உலகத்துல இரண்டு நாள் வாழலாம்னு சொல்வாங்க. அந்தளவுக்கு இங்க காற்று மாசு அதிகம். முன்னாடி நின்னுட்டு இருக்கற பைக் புகைய சுவாசிக்கிறதைத் தவிர நமக்கு இங்க வேற வழியில்ல. அதுக்கு மாற்றா யோசிச்சப்பதான் ப்ரானா பைக் ஐடியா வந்துச்சு...” ஒவ்வொரு வார்த்தையிலும் மாற்றத்தையும், தொழில்நுட்பத்தையும் தூவிச் செல்கிறார் கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் என்றால், பெரும் நிறுவனங்களின் தயாரிப்புகள்கூட அதிகளவில் விற்பனை ஆகவில்லை. மார்க்கெட்டில், ஸ்டைலிஷான பைக்குகளுக்கான டிமாண்ட் எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் பைக்குகளில் அந்த அம்சங்களைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி என்ற பொறியாளரின் ஸ்ரீவாரு மோட் டார்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, ‘ப்ரானா’ ரிலீஸாகி விட்டது. 123 கி.மீ வரை வேகம், பக்கா ரேஸிங் ஸ்டைலிஷ் லுக்குடன், பெட்ரோல் இன்ஜின் பைக்குகளுக்கு சவால்விடும் வகையில் இருப்பதாக சொல்கிறார் மோகன்ராஜ். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள எஸ்.வி.எம் வளாகத்தில் அவரது நிறுவனத்தில் நாம் மோகன்ராஜைச் சந்தித்தோம்.

பொள்ளாச்சி டு நாக்பூர்...

“நான் படிச்சு வளர்ந்தது எல்லாமே பொள்ளாச்சி. எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ரொம்பப் பிடிக்கும். ஆனா, நான் படிச்சது எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங். படிச்சு முடிச்சுட்டு நாக்பூர்ல வேலை பார்க்கத் தொடங்கினேன். அதுக்குப் பிறகு, அமெரிக்காவுக்குப் போயிட்டேன். 2012-ல டெஸ்லா கம்பெனில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க நான் ஐ.டி ஆபரேஷன்ஸ்ல இருந்தேன். அப்ப எல்லா இன்ஜினீயரிங் டீம் கூட சேர்ந்து வேலை செய்யுற வாய்ப்பு கிடைச்சுது. எலான் மஸ்க்கின் ஒருங்கிணைந்த பார்வை என்னை ரொம்பவே ஈர்த்துச்சு.

 மோகன்ராஜ் ராமசாமி
மோகன்ராஜ் ராமசாமி

மாறும் தொழில்நுட்பம்...

உலகத்துல ஒவ்வொரு 20 வருஷத்துக்கு ஒருமுறையும், ஒரு புதிய தொழில்துறை உருவாகும். நான்கு சக்கர வாகனம், ஐ.டி துறை எல்லாம் இப்படித்தான் ஆரம்பிச்சுது. அப்படித்தான் அடுத்து எலெக்ட்ரிக் பைக் பெரிய வளர்ச்சி அடையப்போகுதுன்னு நான் நினைச்சேன். அதனால அதுமேல எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துச்சு. இந்தியாவுல அதிக காற்றுமாசு இருக்கு. அதுல இருந்து தப்பிக்கணும்னா, இ-பைக்கைத் தயாரிக்கிறதுதான் ஒரே வழின்னு நினைச்சேன். இதுக்காக கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல முயற்சி பண்ணிட்டே இருந்தோம்.

எனக்குத் தெரிஞ்சு, பல நிறுவனங்கள் இந்த மாதிரி, ஹைஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த பிளான் பண்ணாங்க. ஆனா, யாராலயும் அதை மார்க்கெட்டுக்குக் கொண்டு வரமுடியல. காரணம், இதுல நிறைய சவால்கள் இருக்கு.

எதிர்கொண்ட சவால்கள்...

எலெக்ட்ரிக் பைக்ல சார்ஜ் போடுறது பெரிய சவால். அதுக்கு நாங்க இன்டகிரேட்டட் சார்ஜிங் முறையை அறிமுகப்படுத்தி யிருக்கோம். சமூகத்துல எளிதா கிடைக்கற பிளக் பாய்ன்ட்ல சார்ஜ் போடுற மாதிரி பிளான் பண்ணினோம். எங்க பைக்குக்கு, எந்த இடமா இருந்தாலும், அது பெட்டிக் கடையா இருந்தாக்கூட, சார்ஜ் போட ஒரு 15 ஆம்ஸ் பிளக் போதும். இதுல ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கு. பிரேக் பிடிச்சா இன்ஜின் நின்னுடும். பைக் ஸ்கிட் ஆகாது. பாது காப்புக்கும் அதிக முக்கியத்துவம் தந்திருக்கோம். இளைய தலைமுறைக்கும், இளமையா இருக்க நினைக்கிற தலை முறைக்கும் எங்க பைக் நல்ல தேர்வா இருக்கும்” என்றவர். இதை மார்க்கெட்டிங் செய்வதில் உள்ள அம்சங்கள் குறித்தும் விளக்கினார்.

‘‘இந்தியா முழுவதும் நிறைய மெக்கானிக்குகளை வைச்சுருக்கோம். எங்க எந்தப் பிரச்னையா இருந்தாலும், வீடியோகால்ல எங்க இன்ஜினீயர்ஸ் அவங்களுக்கு உதவி பண்ணுவாங்க. எலெக்ட்ரிக் பைக்னு யோசிச்சப்பவே, ஸ்பீடு நல்லா இருக்கணும், பேட்டரி பத்தி யோசிக்கவே கூடாதுன்னு தான் யோசிச்சோம். இந்த பேட்டரிய 3 லட்சம் கி.மீ வரை பயன்படுத்தலாம். 0-60 கி.மீ ஸ்பீடு 4 செகண்ட்ல ரீச் ஆகிடும். மத்த பைக்ல இந்த ஸ்பீடுல போறப்ப, ஒரு அசௌகரியம் இருக்கும். ஸ்ட்ரெய்ன் பண்ணி ஓட்ற மாதிரி இருக்கும். ஆனா, ப்ரானால வைப்ரேஷன், சத்தம் இல்லாம அதை ஜஸ்ட் லைக் தட் தாண்டிருவோம்’’ என்றார் உற்சாகமாக.

விலை அதிகமா இருக்கே...

“எல்லாம் ஓ.கே... ஆனா, விலை அதிகமா இருக்கே..?” என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த மோகன்ராஜ், “இதை நிறைய பேரு சொல்றாங்க. பைக் விலை 2.25 லட்சம் சொல்றீங்களேன்னு கேட்பாங்க. நம்ம எந்தப் பொருளை வாங்கினாலும், அதோட மொத்த செலவையும் கணக்கிடணும். பெட்ரோல் பைக் வாங்கினா, இனிஷியல் தொகை, அதுக்கு இ.எம்.ஐ, பெட்ரோல் எல்லாத்தையும் கணக்கிடணும். இன்னிக்கு பெட்ரோல் விக்கிற விலைக்கு அந்த பைக்கையும் எங்க பைக்கையும் ஒப்பிட்டா, அதோட மொத்த காசைவிட, ப்ரானாவுக்குக் கொடுக்குற காசு குறைவுதான். நம்ம பாதுகாப்பு, ஆரோக்கியத்தையும் கொஞ்சம் யோசிக்கணும்.

கொரோனா உணர்த்திய காற்றின் அருமை...

ப்ரானா
ப்ரானா

நாங்க போன வருஷமே பைக் லான்ச் பண்ணலாம்னு திட்ட மிட்டிருந்தோம். ஆனா, கொரோனா வைரஸ் எங்களையும் பாதிச்சுது. அதே நேரத்துல, இந்தக் காலகட்டத்துல காற்று மாசு குறைஞ்சு, சுத்தமான காற்றோட அருமை குறித்து எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அது எங்களுக்கு சாதகமான சூழ்நிலையாவும் மாறிடுச்சு. இப்ப நாங்க எதிர்பார்த்ததைவிட நல்லாவே ரீச் ஆகிருக்கு. முக்கியமா, நிறைய பெண்கள் எங்க பைக்கை புக் பண்ணியிருக்காங்க.

எங்கள் பைக்கை கோவையிலதான் உற்பத்தி செய்றோம். ஆனா, கர்நாடகா, கேரளா, ஆந்திரால டீலர்ஷிப் போட்ருக்கோம். தொடர்ந்து நிறைய பேர் எங்களோட பேசிட்டு இருக்காங்க. அடுத்தகட்டமா, உற்பத்திய அதிகரிக்க, இன்னும் கொஞ்சம் பெரிய இடத்தைப் பார்த்துட்டு இருக்கோம். இந்தியா முழுவதும் நான்கு இடத்துல உற்பத்தி பண்ணப் போறோம். ப்ரானாவுக்கு அடுத்ததா ஸ்கூட்டரும் அறிகமுகப்படுத்த திட்டமிட்டிருக்கோம்’’ என்றார் உறுதியான குரலில்.

மோகன்ராஜ் தயாரித்திருக்கும் பைக்குக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு