Published:Updated:

`இவர் கதை `ஸ்லம்டாக் மில்லியனர்’க்கும் மேல!' - தடைகள் தகர்த்து சாதித்த கல்பனா சரோஜ் #BusinessMasters

Kalpana Saroj
Kalpana Saroj ( Photo: Facebook / Kalpana Saroj )

`ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் வரும் நாயகன் மாதிரிதான் நாம் இந்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கும் கல்பனா சரோஜ்.

ஆஸ்கார் அவார்டு பெற்ற இந்தித் திரைப்படமான `ஸ்லம்டாக் மில்லியனர்’ பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. மும்பை ஸ்லம் ஏரியாவில் பிறந்த ஒரு இளைஞன், எப்படி வாழ்க்கையில் மிகப் பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லும் படம்தான் இந்த `ஸ்லம்டாக் மில்லியனர்’. இந்தப் படத்தின் வரும் நாயகன் மாதிரிதான் நாம் இந்த அத்தியாயத்தில் பார்க்க இருக்கும் கல்பனா சரோஜ். பட்டியல் சமூகத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலிருந்தே பல இன்னல்களை எதிர்கொண்டவர் கல்பனா, இன்றைக்குப் பலரும் பார்த்து வியக்கும் ஒரு தொழிலதிபர். ஊடகங்களும், தொழில் துறை விற்பன்னர்களும் அவருக்கு வைத்திருக்கும் பெயர் `ஒரிஜினல் ஸ்லம்டாக் மில்லியனர்.’

Kalpana
Kalpana
Photo: Facebook / Kalpana Saroj

கல்பனா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். அப்பா, போலீஸ் கான்ஸ்டபிள். மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் எனப் பெரிய குடும்பம். காவலர்களுக்கான குடியிருப்பில், அப்பாவின் சொற்ப வருமானத்தில்தான் குடும்பத்தின் ஜீவாதாரம். வறுமை பீடித்த குடும்பம், பட்டியல் சமூகத்துக் குழந்தை என்பதால், குடியிருப்பிலுள்ள மற்ற குழந்தைகளுடன் கல்பனா விளையாட முடியாது. அவர்களின் வீட்டுக்கு இவரோ, இவர் வீட்டுக்கு அவர்களோ வர முடியாது. பிற குழந்தைகளுடன் பேசக்கூட முடியாது. பள்ளியிலும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்காரவிடாமல், தனியாக உட்காரச் சொல்வார்கள். விளையாட்டு, பேச்சு, பாட்டு, நடனம்... என எதிலும் அவரை சேர்க்க மாட்டார்கள்.

ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருநாள் அவர் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். அவருக்குத் திருமணம் என்றார்கள். கல்பனாவின் அப்பாவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால், உறவினர்களும் சொந்தபந்தமும் சொல்வதை மீறவும் அவரால் முடியவில்லை.

திருமண வாழ்க்கை மேலும் துன்பத்தைத்தான் கல்பனாவுக்குக் கொண்டுவந்து சேர்த்தது. 12 வயது பெண். குடிபுகுந்த வீட்டில் கிட்டத்தட்ட 10 பேர். மொத்த வீட்டுவேலையும் கல்பனாவின் தலையில்... அதையும் தாண்டி, சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி விழுந்தது. ஆறு மாதங்கள் கழித்து கல்பனாவைப் பார்க்க வந்த அவருடைய தந்தை இடிந்துபோனார். `என் பொண்ணை இப்படி நடைப்பிணமா ஆக்கிட்டீங்களேய்யா...’ என்று திட்டித் தீர்த்துவிட்டு, கையோடு கல்பனாவை ஊருக்கு அழைத்துப்போனார்.

670 ரூபாய் சம்பளம் டு கம்பெனிக்கே CEO... L&T நாயக்கின் வெற்றிக்கதை! #BusinessMasters - 4

சுயதொழில் தொடங்கு!

வாழ்க்கையில் அடிபட அடிபட கல்பனாவின் இதயம் கல்லாகியது. எதையும் தாங்கும் பக்குவத்தை அவருக்குக் கொடுத்திருந்தது. வீட்டுக்கும் அப்பாவுக்கும் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்தார் கல்பனா. கண்ணில்படுகிற எல்லா வேலைகளுக்கும் விண்ணப்பம் போட்டார். உள்ளூர் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை, நர்ஸ், ராணுவம்... எல்லா இடங்களிலும் அவருக்கு வேலை இல்லை என்று கைவிரித்தார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று, அவருடைய வயது. இரண்டு, கல்வித்தகுதி இல்லாதது. இனி, கல்பனாவுக்கு இருப்பது ஒரே ஒரு வாய்ப்பு. அதுதான், சுயமாக தொழில் செய்வது.

யாரோ ஒருவரிடம் தையல் கற்றுக்கொண்டார். அங்கே இங்கே பணம் புரட்டி, ஒரு தையல் மெஷினை வாங்கினார். ஆரம்பத்தில் ஒரு ஜாக்கெட் தைத்துக் கொடுக்க கல்பனா வாங்கிய கூலி பத்து ரூபாய். சுயமாகக் கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்தாலும், ஊராரின் பேச்சு கல்பனாவின் மனதை நோகடிக்கவே, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் கல்பனா. உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் கல்பனா இறந்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்க, பிழைத்துக்கொண்டார். அது அவருக்கு இரண்டாம் பிறவி. `இவ்வளவு இன்னல்களுக்குப் பிறகும் நான் ஏன் பிழைத்திருக்க வேண்டும். அப்படியானால், நாம் வாழ ஏதோ வழியிருக்க வேண்டும். வாழ்ந்து பார்த்துவிடுவது’ என்ற முடிவுக்கு வந்தார்.

மும்பைக்குப் போ...

இனி வாழ்வதற்கு இந்த ஊர் லாயக்கில்லை என்கிற முடிவுக்கு வந்தார். பெற்றோரிடம் பேசி, சம்மதம் பெற்று மும்பைக்குப் போனார். அங்கே ஓர் உறவினர் வீட்டில் தங்கினார். ஒரு கார்மென்ட் ஃபேக்டரியில் வேலை கிடைத்தது. `டெய்லருக்கு உதவியாள்’ என்று ஒரு வேலை. பொறுமையாக, வெகு கவனமாகத் தையல் கலையைக் கற்றுக்கொண்டார் கல்பனா. தொழிலில் காட்டிய அக்கறையும் சிரத்தையும் அவரை மெல்ல மெல்ல உயர்த்த ஆரம்பித்தன. தலைமை டெய்லர். ஊதியமும் சற்று உயர்ந்தது.

எல்லாம் கொஞ்ச நாள்கள்தான். மறுபடியும் கஷ்டம். ஏதோ ஒரு பிரச்னை... அப்பாவுக்கு வேலை போய்விட்டது. மொத்தக் குடும்பமும் கல்பனா இருக்கும் இடம் தேடிவந்தது. அத்தனை பேரையும் தாங்கும் பெரும் சுமை. கையிலிருந்த சேமிப்பை எல்லாம் கொடுத்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார். சின்னஞ்சிறு வீட்டில், நெருக்கியடித்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் தஞ்சமடைந்தது. பிரச்னைகள் துரத்தத் துரத்த அவற்றின் கைகளில் சிக்கிவிடாமல் தப்பித்து ஓடிக்கொண்டே இருந்தார் கல்பனா. அவையும் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன.

Kalpana Saroj
Kalpana Saroj
Photo: Facebook / Kalpana Saroj

தேடிவந்த நிலம்

கல்பனாவின் தங்கைக்கு ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. அவரைக் காப்பாற்ற, தரமான சிகிச்சை கொடுக்கக் கையில் பணமில்லை. அந்த நோய் கல்பனாவின் தங்கையை பலிகொண்டது. நொறுங்கிப்போனார் கல்பனா. தங்கை இறந்துபோனதும்தான் அவருக்கு பணத்தின் அருமை அழுத்தமாக உறைக்க ஆரம்பித்தது. இப்படிச் சின்ன வேலை பார்த்தால் பிரயோசனமில்லை. என்ன செய்யலாம்... தீவிரமான அவருடைய தேடலுக்கு ஒரு விடிவும் பிறந்தது. ஒருநாள் ரேடியோவில் ஓர் அறிவிப்பைக் கேட்டார். தலித்துகள் தொழில் தொடங்க அரசாங்க உதவி. `மகாத்மா ஜோதிராவ் பூலே’ என்கிற அந்தத் திட்டத்தில் 50,000 ரூபாய் கடனுக்கு விண்ணப்பித்தார். கிடைத்தது. சில தையல் மெஷின்களை வாங்கினார். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்தார். வாழ்க்கையில் கொஞ்சம் நிமிர முடிந்தது. அதில் கிடைத்த லாபத்தைக்கொண்டு ஒரு ஃபர்னிச்சர் கடையை ஆரம்பித்தார்.

உழைக்க உழைக்க வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தன. ஒருவர் கல்பனாவைத் தேடி வந்தார். `எங்கிட்ட ஒரு நிலம் இருக்கு. எனக்கு அவசரமாகப் பணம் தேவை. ரெண்டரை லட்ச ரூபா கொடுத்தா போதும்’ என்றார். நல்ல இடம். குறைந்த விலை. ஆனால், ஒரு பிரச்னை. அதை விற்பதில் சட்டச் சிக்கல் இருந்தது. துணிந்து அந்த இடத்தை வாங்கினார் கல்பனா. அட்வான்ஸாக அந்த நபருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். மீதத் தொகையை சில மாதங்களிலேயே அடைத்தார். இரண்டு வருடம் நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து அந்த நிலத்தின் மேலிருந்த சட்டச் சிக்கல்களைச் சரிசெய்தார். அதைத் தனக்கு உடைமையாக்கிக் கொண்டார். அதோடு அவர், அந்த நிலத்தை அப்படியே போட்டுவிடவில்லை. ஒரு ரியல் எஸ்டேட் நபரை பார்ட்னராகச் சேர்த்துக்கொண்டார். அந்த இடத்தில் ஒரு கட்டடம் எழுந்தது. அதில் 35% லாபம் கல்பனாவுக்குக் கிடைத்தது. ரியல் எஸ்டேட்டிலும் கால்பதித்தார் கல்பனா.

₹2000 கோடி டேர்ன் ஓவர்; விதை போட்ட மேப்... VKC சாம்ராஜ்யம் வளர்ந்தது எப்படி? #BusinessMasters - 6

தேடிவந்த தலைமைப் பதவி

அப்போது பெரும் தொழில் நிறுவனமான கமானி டியூப்ஸ் (Kamani Tubes) மிகப் பெரிய சிக்கலில் இருந்தது. தொடர் நஷ்டம். நிறுவனத்தின் மீது பல வழக்குகள். அதன் நிறுவனர் ராம்ஜி கமானி, மகாத்மா காந்தி, நேரு இருவருக்கும் சீடர். கமானி மெட்டல், கமானி இன்ஜினீயரிங் என்று வேறு சில நிறுவனங்களையும் நடத்தி வந்தார். தொழில் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்; தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என அவருக்குள் ஏகப்பட்ட லட்சியங்கள் இருந்தன. ஆனால், அவர் மறைவுக்குப் பின் நிறுவனத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள். மகன்களுக்குள் மனஸ்தாபம். நிறுவனம் கடனில் தத்தளித்தது. தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாட, அவர்களையே நிறுவனத்தை நடத்தச் சொன்னது நீதிமன்றம். மொத்தம் 3,500 தொழிலாளர்கள். ஆனாலும் 1987-1997-க்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் மேற்கொண்டு இயங்க முடியாமல் தடுமாறிது. தொழிலாளர்களில் முக்கியமானவர்களில் சிலர், கல்பனாவின் திறமையைக் கேள்விப்பட்டு அவரைத் தேடிவந்து உதவி கேட்டார்கள். கல்பனா களத்தில் இறங்கினார்.

நிலைமையைச் சரிசெய்ய ஒரு குழுவை அமைத்தார். அந்தத் துறையில் ஆழ்ந்த அனுபவமுள்ள நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டார். அதன்படி ஒவ்வொன்றையும் செயல்படுத்தினார். எல்லாவற்றையும் மறுசீரமைத்து நிறுவனத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவந்தார். 2000-ம் ஆண்டு கமானி டியூப்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு, நிறுவனம் வாங்கியிருந்த கடன்களைத் திருப்பிக் கட்ட கால அவகாசம் கேட்டு வங்கிகளின் உதவியை நாடினார். நிறுவனம் இழுத்து மூடப்படாமல் இருக்க அரசிடம் உதவி கோரினார். நிறுவனத்தை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனத்தின் கடனைப் பாதியாகக் குறைத்தார். ஏழே வருடங்கள்... கமானி டியூப்ஸ் நிறுவனத்தின் மேலிருந்த அத்தனை கடன்களையும் அடைத்தார். மூன்று வருடங்களாக நிலுவையில் இருந்த தொழிலாளர்களின் சம்பளத்தைக் கொடுத்தார்.

Kalpana Saroj
Kalpana Saroj
Photo: Facebook / Kalpana Saroj
₹8000 வேலை டு `வேலைவாய்ப்பு சாம்ராஜ்யம்' - நாக்ரி நிறுவன சஞ்சீவின் சாதனை கதை! #BusinessMasters - 10

தேடிவந்த பத்மஶ்ரீ விருது

பிறகு முழுக் கவனத்தையும் நிறுவனத்தில் பதித்தார். பழைய இயந்திரங்கள், தளவாடங்கள் எல்லாவற்றையும் மாற்றினார். தொழிற்சாலையை வாதா (Wada) என்கிற இடத்துக்கு மாற்றினார். இப்போது அவர் தலைமையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது கமானி டியூப்ஸ். தொழில் துறையில் சிறப்பான அவருடைய பங்களிப்புக்காக 2013-ம் ஆண்டு கல்பனாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இந்திய அரசு, பாரதிய மகிளா வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக அவரை நியமித்து கௌரவித்தது. எப்பேர்ப்பட்ட இடர் வந்தாலும், நம்பிக்கையும் திறமையும் இருந்தால், அதை நம்மால் அடித்து துவம்சம் செய்து தனி முத்திரை பதிக்க முடியும் என்பது கல்பனா சரோஜின் வாழ்க்கை உணர்த்தும் உண்மை!

அடுத்த கட்டுரைக்கு