Published:Updated:

`கரடியின் பிடியில் பங்குச்சந்தை; ஒரே நாளில் ரூ.14.22 லட்சம் கோடி இழப்பு' -இதே நிலை தொடருமா?

14.22 லட்சம் கோடி இழப்பு
14.22 லட்சம் கோடி இழப்பு

தொடங்கிய வர்த்தகத்தில் முதல் ஒரு மணி நேரத்திலேயே முக்கிய குறியீடுகளுக்கு பத்து சதவிகிதம் இழப்பு ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் மதிப்பு 28 சதவிகிதம் சரிந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, தற்போது இந்தியா வரை வந்துள்ளது. இதனால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் மாறி மாறிக் காணப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை அன்று 14.22 லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் முதலீட்டாளர்களிடையே நாடு தழுவிய அடைப்பால் ஏற்பட்ட அச்சமே ஆகும்.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீடு 3,934.72 புள்ளிகள் அல்லது 13.15 சதவிகிதம் சரிந்து 25,981.24 யைத் தொட்டது. இது வர்த்தக முடிவின்போது 25,880.83 புள்ளியைத் தொட்டது. கடந்த ஒரு வருடத்தில் இதுவே மிகக் குறைந்த மதிப்பீடு அளவாகும். இதோடு பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பும் 14,22,207.1 கோடி ரூபாயிலிருந்து 1,01,86,936.28 கோடி ரூபாயாக சரிந்தது.

`கறுப்பு வெள்ளி; வரலாறு காணாத வீழ்ச்சி’ - பங்குச்சந்தை வர்த்தகத்தை வீழ்த்திய 5 விஷயங்கள்

அன்றைய தினத்தில் கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமோ என்ற அச்சத்தில், பங்குச்சந்தையில் முதல் 45 நிமிடங்கள் எந்த வர்த்தகமும் செய்யப்படவில்லை. இதன் பிறகு தொடங்கிய வர்த்தகத்தில் முதல் ஒரு மணி நேரத்திலேயே முக்கியக் குறியீடுகள் பத்து சதவிகிதம் சரிந்தது. இதில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் மதிப்பு 28 சதவிகிதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி மற்றும் எல் அண்ட் டி ஆகிய பங்குகளும் சரிந்தன.

இழப்பு
இழப்பு

இதுபற்றி டிரேடிங்க் பெல்ஸின் மூத்த ஆய்வாளர் சந்தோஷ் மீனா கூறுகையில் ``இந்திய பங்குச்சந்தைக்கு இது மற்றொரு கறுப்பு தினங்களாக அமைந்தது. இதற்கு முக்கியக் காரணம் நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா தொற்று பற்றிய அச்சமே. இந்த நிலையற்ற தன்மையைச் சமாளிக்க செபி எடுத்த நடவடிக்கைகள் சந்தைக்குச் சரிவரவில்லை. ஏனெனில் விதிகள் அனைத்தும் சிறிய நிலை பங்கு முதல் பெரியநிலை பங்குவரை பொருந்தும். இதில் சிறிய நிலையில் இருக்கும் பங்குகளில் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இதனால் புதிய பெரிய நிலை பங்குகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது" என்றார்.

`வர்த்தக வாரத்தின் முதல்நாள்; பங்குச் சந்தையில் கடும் சரிவு!’ -45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட வர்த்தகம்

மேலும், இதுபற்றி ரெலிகார் ப்ரோகிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா கூறுகையில் ``வெள்ளிக்கிழமை அன்று நல்ல முறையிலேயே பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடைந்தது. ஆனால், கொரோனா வைரஸால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மிகப்பெரிய சரிவை, திங்கள்கிழமை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் முதலீட்டாளர்கள் அச்சம் காரணமாக, பங்குகளை உடனடியாக விற்க முயன்றதே ஆகும். இனிவரும் காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கும். இதனால், அரசின் மூலமாக ஏதேனும் ஊக்கம் கிடைத்தால் பங்குதாரர்களின் நிலைமை சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்" என்றார்.

உலகச் சந்தைகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக வீழ்ச்சியடைந்தே காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் 2,037 நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன. மேலும் 232 நிறுவனங்கள் சிறு வளர்ச்சியோடும்,132 நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து மக்களிடையே இந்த அச்சம் நீடித்தால் பங்குச்சந்தைகளின் நிலைமை கேள்விக்குறியானதே. சிறிது காலத்துக்கு பங்குதாரர்கள் தங்களது பங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதே இந்த வீழ்ச்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.

அடுத்த கட்டுரைக்கு