Published:Updated:

‘‘சிறு நகரங்கள்தான் எங்கள் இலக்கு!” சென்னை `இப்போ பே’-யின் சக்சஸ் ரகசியம்!

மோகன்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்

டெக்னாலஜி

‘‘சிறு நகரங்கள்தான் எங்கள் இலக்கு!” சென்னை `இப்போ பே’-யின் சக்சஸ் ரகசியம்!

டெக்னாலஜி

Published:Updated:
மோகன்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்

ராமேஸ்வரத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்து இன்று ஃபின்டெக் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ‘இப்போ பே’ நிறுவனத்தின் சி.இ.ஓ மோகன். இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘இப்போ பே’ நிறுவனம், இப்போதுவரை ரூ.8,000 கோடி வரையிலான பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. சில மாதங்களுக்கு காயின்பேஸ் வென்சர்ஸ், பெட்டர் கேப்பிடல் மற்றும் வேறு சில முதலீட்டாளர்களிடம் இருந்து 2.1 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றது. தற்போது அடுத்தகட்ட நிதித் திரட்டலுக்குத் தயாராகி வரும் சூழலில், இந்த நிறுவனத்தின் நிறுவனர் மோகனை சந்தித்துப் பேசினோம். அவர் தனது பிசினஸ் பயணத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ராமேஸ்வரம் To சென்னை...

‘‘ராமேஸ்வரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்னும் சிறிய ஊரில் பிறந்தேன். அப்பா மீனவர். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். டிப்ளோமா முடித்து இன்ஜினீயரிங் படித்தேன். சராசரி மாணவன் நான். ஒரு சமயத்தில் 24 அரியர் இருந்தது. ஆனால், கோர்ஸ் முடிக்கும்போது எந்தவிதமான அரியரும் இல்லாமல் வெளியே வந்தேன்.

ஊரில் இருந்தால் எதுவும் செய்ய முடியாது என சென்னைக்கு வந்தேன். அங்கு ஒரு வெப் டிசைன் நிறுவனத்தில் பணியாற்றினேன். மாதம் ரூ.4,000 சம்பளம் என்றார்கள். ஆனால், 750 ரூபாய்தான் கொடுத்தார்கள். வேலை முக்கியம் என்று நினைத்து அந்த வேலையைத் தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்தில் சம்பளத்தை உயர்த்தித் தந்தார்கள். மூன்று ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். அங்கிருந்து வெளியேறும்போது ரூ.8,000 சம்பளம் வாங்கினேன்.

மோகன்
மோகன்

15-வது நாளில் வேலை போச்சு...

அடுத்து இன்னொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ரூ.12,000 சம்பளம். ஆனால், அந்த வேலை எனக்குத் தெரியவில்லை. அதனால் 15-வது நாளில் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ‘‘12,000 வேண்டாம்; 8,000 கொடுங்கள்’’ என்று கேட்டேன். முடியாது என்றார்கள். ‘‘6,000 ரூபாயாவது கொடுங்கள்’’ என்றேன். தரவில்லை. ‘‘சம்பளமே வேண்டாம், வேலை கற்றுக்கொள்கிறேன்’’ என்று சொன்னேன். அதற்கும் அனுமதிக்கவில்லை.

15 நாள் வேலைக்கான செக்கை வாங்கிக்கொண்டு நடந்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்து, ஒரு முடிவை எடுத்தேன். ‘இனி நாம் வேலைக்குப் போகக் கூடாது..!’ உடனே roamsoft என்னும் பெயரில் 500 விசிட்டிங் கார்டுகள் அடித்தேன். வெப் டிசைனிங் உள்ளிட்ட சேவைகளைத் தருவதுதான் திட்டம். 500 கார்டுகளும் தீர்ந்தன. எந்த ஆர்டரும் வரவில்லை. மீண்டும் 500 கார்டுகள் அடித்தேன். அதன் பிறகுதான் சின்னச் சின்ன வேலைகள் வரத் தொடங்கின. 2009-ம் ஆண்டு சேவைப் பிரிவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மெள்ள வளரத் தொடங்கியது.

பல தோல்விகள்

ரோம்சாப்ட் மூலம் சேவைகள் வழங்குவதுடன் புராடக்ட்டுகளில் ஏதாவது செய்ய பல முயற்சி செய்தேன். ஆனால், எல்லா முயற்சி யும் தோல்வி. இ-காமர்ஸ், புட் டெலிவரி எனத் தற்போது சந்தையில் இருக்கும் டெக்னாலஜி நிறுவனங் களைப்போல செயல்பட வேண்டும் எனத் திட்டமிட்டேன். எதுவும் நடக்கவில்லை. எட்டு ஆண்டுகளில் ரூ.80 லட்சம் இழந்ததுதான் மிச்சம். இந்தச் சமயத்தில், துபையில் உள்ள ஃபின்டெக் நிகழ்வுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்க்கும் நபர்களுக்கு எல்லாம் என்னுடைய கார்டைக் கொடுத்தேன். அப்போது ஒமர் பின் ப்ரேக் (omer bin brek) என்ப வருக்கும் கார்டு கொடுத்தேன். அவர், ‘நாளை சந்திக்கலாம்’ என்றார்.

அடுத்த நாள் காலை அவரைச் சந்தித்தேன். துபையில் இருந்து திரும்பும்போது 10,000 டாலருக்கு ஒரு ஆர்டருடன் திரும்ப வேண்டும் என்பதே என் இலக்கு. டெக்னாலஜி சம்பந்தமாக அவருடைய தேவையை என்னிடம் சொன்னார். நான் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொன்னேன். நாங்கள் பேசி முடித்தபோது 10,000 டாலர் அல்ல; 50,000 டாலர் பில் போட முடியும் என்று தெரிந்தது. தவிர, யு.ஏ.இ-யில் செயல்படும் பேமென்ட் செயலிக்கான டெக்னாலஜி பார்ட்னராகவும் இணைந்தேன். அந்தத் திட்டம் பெரிய வெற்றியைக் கண்டது.

இந்தியாவில் இப்போ பே...

இந்த நிலையில், இந்தியாவில் ஏன் பேமென்ட் பிரிவில் இறங்கக் கூடாது எனத் திட்டமிட்டேன். ஏற்கெனவே பல நிறுவனங்கள் களம் இறங்கியிருப்பதால் பெரிய போட்டி இருக்கும். எனவே, எப்படி வெற்றி அடைய முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இருந்தாலும் பேமென்ட் பிரிவில் ஒரு இடைவெளி இருப்பதாகவே நினைத்தேன். அதனால் நண்பர் ஜெய்யுடன் இணைந்து ‘இப்போ பே’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினேன். (ரோம்சாஃப்ட் தனிப்பிரிவாகச் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தை மோகனின் மனைவி கவனித்துக்கொள்கிறார்)

மற்ற பேமென்ட் நிறுவனங்கள் எல்லாம் பெருநகரங்களில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் முதல் கட்டமாக இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய செயலி செயல்பாட்டுக்கு வந்து 20 மாதங்கள் ஆகின்றன. இதுவரை 60,000 வியாபாரிகள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். சுமார் ரூ.8,000 கோடி எங்கள் மூலம் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் நாங்கள் லாபத்தில்தான் செயல்படுகிறோம்.

சிலிகன்வேலியில் இருந்து வந்த முதலீடு...

ஆனால், எங்களுக்கு நிதித் திரட்டுவது பெரும் சவாலாக இருந்தது. பல முதலீட்டாளர்களிடம் பேசினேன். யாரும் எங்கள் ஐடியாவைக் கேட்டு முதலீடு செய்யத் தயாரில்லை. முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒரு நாள் முழுக்க 10 முதலீட்டாளர்களிடம் பேசினேன், பிரயோஜனம் இல்லை. அப்போது சிலிகன்வேலியில் உள்ள காயின்பேஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு லிங்க்ட் இன் மூலம் தொடர்பு கொண்டு எங்களுடைய பிசினஸ் மாடல் குறித்து தெரிவித்தேன். ஒரு மாதத்துக்கு எந்தப் பதிலும் வரவில்லை. அதன் பிறகு, தொடர்பு கொண்டனர். எங்கள் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. எங்கள் பிசினஸில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டனர். இந்த முறை பிற முதலீட்டாளர்களும் இணைந்தனர். சுமார் 5 மாதங் களுக்கு முன்பு 2.1 மில்லியன் டாலர் முதலீடு பெற்றோம்.

இப்போதுவரை அந்த முதலீடு அப்படியே இருக்கிறது. சில வாரங்களுக்குப் பிறகுதான் விரிவாக்கப் பணிகளுக்கு கவனம் செலுத்த இருக்கிறோம். வெளி மாநிலங்கள், புதிய சேவைகள் எனப் பலவற்றுக்காக முதலீடு செய்ய இருக்கிறோம். அதனால் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. பணியாளர்களுக்கும் 12% பங்குகளை ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இப்போது அடுத்தகட்ட முதலீட்டுக்கு பல நிறுவனங்கள் தயாராக உள்ளன. விரைவில் அடுத்த நிதித் திரட்டல் குறித்து அறிவிப்பு வரும். விரை வில் முக்கியமான பேமென்ட் நிறுவனமாக மாறுவோம்’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் மோகன்.

பணம், படிப்பு எல்லாம் இரண்டாம்பட்சம்தான். தொடர் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு அருமையாக சொல்லித் தருகிறார் மோகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism