நிறுவனங்களுக்கான சைபர் காப்பீடு... முதல்முறையாக அறிமுகப்படுத்தவிருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.ஐ

சாதாரண பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் சைபர் தாக்குதலால் ஏற்படும் இழப்பீடு இடம்பெறாது. ஆனால், சைபர் காப்பீட்டுத் திட்டங்கள் பிரத்யேக வாடிக்கையாளர்களுக்கென உருவாக்கப்படுபவை.
கொரோனா காரணமாக நமது அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே செய்வதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் நாம் இணையத்தையே அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்.
இந்த நிலையில், இணையத்தில் சைபர் கிரைம் குற்றச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொரோனா காலத்தில் மட்டுமே பல்வேறு இணைய நிறுவனங்களின் தகவல்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்கூட பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் இரண்டு கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தகவல்கள் திருடப்படுவதால் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் வகையில் சைபர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தெரிவித்துள்ளது.
இதைப் பற்றி ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு கூறுகையில், ``கொரோனா தொற்றுக் காலத்தில் சைபர் தாக்குதலானது அதிகரித்துள்ளது. மிக முக்கிய நிறுவனங்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. சில நேரம், முக்கிய நபர்களின் கணக்குகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதனால் இன்றைய காலகட்டத்தில் சைபர் பாதுகாப்பு என்பது அனைத்துத் துறைகளுக்கும் அவசியமானதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

சாதாரண பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில் சைபர் தாக்குதலால் ஏற்படும் இழப்பீடு இடம்பெறாது. ஆனால், சைபர் காப்பீட்டுத் திட்டங்கள் பிரத்யேக வாடிக்கையாளர்களுக்கென உருவாக்கப்படுபவை. இவற்றின் விலையும் சற்றே கூடுதலாக இருக்கும். இதனால் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் அடிப்படை சைபர் காப்பீட்டுத் திட்டத்தை ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு கொண்டுவரவுள்ளது.
இதை உருவாக்குவதற்கு பொறுப்பு காப்பீட்டு ஆலோசகர் பி.உமேஷ் (Liability Insurance Consultant) தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சைபர் பாதுகாப்பில் உள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும். மேலும், இணையப் பரிவர்த்தனைகளில் உள்ள சட்ட அம்சங்கள் பற்றியும் மதிப்பீடு செய்யவுள்ளது.

இதோடு, கடந்த காலத்தில் ஏற்பட்ட சைபர் தாக்குதல்கள் பற்றியும், தற்போது வரை உள்ள சைபர் காப்பீடுகள் பற்றியும் ஆராயவுள்ளது. இவற்றோடு சைபர் காப்பீட்டின் எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் பரிந்துரைக்க உள்ளது. இதே போல், மேலும் சில முக்கிய தகவல்களை ஆராய்ந்து, வருகின்ற டிசம்பர் 22-ம் தேதிக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆணையத்தின் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இனி எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களும் சைபர் காப்பீடு திட்டத்தை நிச்சயம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்!