Published:Updated:

வங்கிகளை இணைப்பதால் என்ன லாபம்... என்ன இழப்பு! ஓர் அலசல்

வங்கிகள் இணைப்பு
வங்கிகள் இணைப்பு ( vikatan )

எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளையெல்லாம் ஒன்றாக இணைத்த பின், சுமார் 1,100 கிளைகள் குறைக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நிர்வாகச்செலவு அதிகரிப்பதாக மத்திய அரசு கருதுகிறது. அதனால் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துவருகிறார். மூன்றாண்டுகளுக்கு முன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை வங்கிகள் அனைத்தும் தலைமை வங்கியுடன் ஏப்ரல் ஒன்றாம் தேதியில்தான் இணைக்கப்பட்டன. தற்போது, மீண்டும் அதே தேதியில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளது.

Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.
Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.

நேற்றைய தினம், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுவரும் நேரத்தில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

வங்கிகள் இணைப்பு என்பது அவ்வளவு எளிதில் செயல்பாட்டுக்கு வரக்கூடியதல்ல. அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் அடங்கிய தேசத்தில், வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வங்கிகளை இணைப்பது மிகவும் கடினமான பணி. வங்கிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை ஒருங்கிணைப்பது, வாடிக்கையாளர்களின் கணக்குகளைச் சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கே சில மாதம் செலவிடப்படும். அதுவரை வங்கிக்கடன் வழங்குவது போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்படும்.

வங்கிகள் இணைப்பு
வங்கிகள் இணைப்பு
vikatan

குறிப்பாக, வங்கிகள் இணைப்பில் பங்கெடுக்கும் சிறிய வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டிவிகிதம் போன்றவற்றில் மாற்றம் வரக்கூடும். வங்கிக் கிளைகளில் சில மூடப்படலாம். வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம். இவற்றால்தான் வங்கிகள் இணைப்பை வங்கிப்பணியாளர்களின் சங்கங்கள் எதிர்க்கின்றன. வங்கிகளின் மேலாளர் பொறுப்புக்கு மொழி தெரியாத அதிகாரிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் ஆங்கில மொழியறிவு குறைந்த பொதுமக்கள் வங்கி மேலாளர்களை அணுகுவது கடினமாகலாம்.

இப்படியாகப் பல எதிர்மறையான செய்திகள் இருந்தாலும், வங்கிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், நிர்வாகம் நன்முறையில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைபெற்றுள்ள இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்துள்ளது. இதனால் வங்கி விதிமுறைகளை மீறுவோரை எளிதில் கண்காணிக்க இயலும். வங்கிகளின் மூலதனம் அதிகரிக்கும். அதனால் வங்கிக்கடன்கள் பெரிய அளவில் வழங்க இயலும். வங்கிகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவது எளிது. இத்தகைய நன்மைகளும் வங்கிகள் இணைப்பில் உள்ளன.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ
vikatan

வங்கிகள் இணைப்பால் பலன்கள் அதிகமா என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோவிடம் கேட்டபோது, "வங்கிகளை ஒன்றோடொன்று இணைத்து எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் பெரிய வங்கியாக உருவெடுக்கச் செய்யலாம் என்று எண்ணுகிறார்கள். இதன்மூலம் வங்கிகளுக்கிடையிலான போட்டி குறையும் என்றும், உலகிலுள்ள பெரிய வங்கிகளுக்கு இணையாக நன்கு செயல்படும் என்றும் கருதுகிறார்கள். ஆனால், அந்தக் கருத்தில் உண்மை இல்லை. ஏற்கெனவே எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளையெல்லாம் ஒன்றாக இணைத்தபின், சுமார் 1,100 கிளைகள் குறைக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

“இதற்குப் பெயர் வங்கி இணைப்பு அல்ல... வங்கிகளை மூடுதல்!”- வங்கி ஊழியர்கள் சங்கம்

உலகிலுள்ள பெரிய வங்கிகளின் வரிசையில் 55-வது இடத்தில்தான் எஸ்பிஐ வங்கி தற்போது இருக்கிறது. வங்கிகள் பெரிதாகும்போது, அங்கே எளிய மக்கள் வாடிக்கையாளர்களாக மாறுவதற்குத் தயங்குவார்கள். பெரிய நிறுவனங்களுக்கு, பெரிய அளவிலான கடன்களை அளிப்பதற்கே பயனளிக்கும். இந்த 10 வங்கிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு வங்கியும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் வலிமையாகச் செயல்பட்டுவருகிறது. அவற்றை இணைப்பதன்மூலம் அந்தந்தப் பகுதிகள் மீதான தனிப்பட்ட கவனம் குறையக்கூடும். வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்கும்போது அவற்றின் கணக்குவழக்குகள் அனைத்தும் முறையாக சரிசெய்யப்பட்டு, வங்கி சீராக இயங்குவதற்கு இரண்டு ஆண்டுகள்வரை ஆகலாம். தற்போதுள்ள பொருளாதார வீழ்ச்சி காலகட்டத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுப்பது சரியான தீர்வாக இருக்காது" என்றார்.

வங்கிகள் இணைப்பு
வங்கிகள் இணைப்பு
vikatan

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும். தனியார் வங்கியான யெஸ் பேங்க் வீழ்ச்சியடைந்தபோது அதைத் தூக்கி நிறுத்துவதற்காக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் எதிர்கால இலக்கான 5 டிரில்லியன் பொருளாதாரம் என்பதை எட்டுவதற்கு, பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கும், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கடனுதவி வழங்க பொதுத்துறை வங்கிகள் பயன்படுகின்றன. ஆனால் அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்ற கடன் திட்டங்களைத் தனியார் வங்கிகளே அதிகமாக வழங்கிவருகின்றன. இதில் பொதுத்துறை வங்கிகள் பின்தங்குகின்றன. இந்த நிலை மாறி, பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளோடு போட்டியிட்டு எளிய, நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கும், அதன்மூலம் தேசத்தின் வளர்ச்சியிலும் பங்கெடுப்பதே வங்கிகள் இணைப்பின் உண்மையான பலனாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு