Published:Updated:

`ஜன் தன் கணக்குகளில் 1.46 லட்சம் கோடி ரூபாய்!' - மோடி பெருமைகொள்வது சரிதானா?

PM Narendra Modi
PM Narendra Modi

வெறும் வங்கிக் கணக்கு என்பது முதல்படி மட்டும்தான். மக்களை அடுத்த படிநிலைக்குக் கொண்டு செல்லாமல் வெறும் முதல்படியையே பெரும் சாதனையாக மத்திய அரசு சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்பங்களில் 14.5 குடும்பங்கள் மட்டுமே வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரியவந்தது. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 52 கோடி பேருக்கு 2014-ம் ஆண்டு வரை வங்கிக் கணக்கு என்றால் என்னவென்று தெரியாத சூழலே நடைமுறையில் உள்ளது எனவும், விவசாய நாடாக அறியப்படும் இந்தியாவில் 2014-ம் ஆண்டு வரையில் 73% விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வசதி முறையாகக் கிடைக்கப் பெறல்லை என்றும் அரசின் பிற புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
மோடி
மோடி

இதைக் கருத்தில் கொண்டு நாட்டின் நிதிச் சிக்கலைத் தீர்க்கவும் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்து, பொதுத்துறை வங்கிகள் மூலமாக, `எல்லோருக்கும் வங்கிக் கணக்கு' என்ற நோக்கத்தில் `ஜன் தன் திட்டமானது' 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

மற்ற வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிப்பது அவசியம். ஆனால், ஜன் தன் திட்டம் மூலமாகத் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை.

மேலும், இந்த வங்கிக் கணக்குகள் வைத்திருப்போருக்கு 30,000 ரூபாய் இறப்புக் காப்பீடும் 1 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீடும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவை இல்லை என்ற இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்தான்.

என்றாலும், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தப்படுத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இந்தக் கணக்குகள் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏழு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், சமீபத்தில் திரிபுராவில் உள்ள கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாட்டு அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 43 கோடி பேருக்கு ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும். அவ்வாறு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலமாக சுமார் ரூ.1.46 லட்சம் கோடி சேமிப்பு முதலீடுகளாக வங்கிகள் நிதி மூலதனம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 20 கோடி ஏழைப் பெண்களின் வங்கி கணக்குகளில் மூன்று கட்டமாக தலா 500 ரூபாய் என மொத்தமாக 30,075 கோடி ரூபாய் மத்திய அரசு செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2014 தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த, ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தால், 60% ஏழைகள் கொண்ட மக்கள் தொகையில் 43.04 கோடி வங்கிக் கணக்குகள் என்பது வெறும் 29% ஆகும்.

ஏற்கெனவே அரசுத் துறைகள் அனைத்தும் தனியார்மயம் மற்றும் தாராளமயமாகி உலகமயக் கொள்கையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய அரசு, பெட்ரோல் டீசல் சுத்திகரிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அப்பாவி பொதுமக்களைth தினம் தினம் வாட்டி வதைக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

Representational Image
Representational Image

இதுமட்டுமன்றி, உள்நாட்டு உற்பத்தித் திறன் கீழே செல்கிறது எனவும், ஒருகாலத்தில் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியா தற்போது நேபாளத்தைவிட பின்னால் இருப்பது காலத்தின் சாபக்கேடு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நிலைமை இப்படி இருக்க, ஜன் தன் வங்கிக் கணக்கு தொடங்கியவர்கள் வாழ்க்கை உடனடியாக முன்னேறியது போல ஒரு விளம்பரத்தை மோடி ஏற்படுத்த முயல்கிறார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மக்களின் அன்றாட பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிவிட்ட இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அவர்களால் சிறுக சிறுக சேமித்து வைக்கப்பட்ட ரூ.1.46 லட்சம் கோடி பணத்துக்கு மத்திய அரசு பெருமை கொள்வது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்ததாகவே பார்க்கப்படுகிறது.

பேங்க்
பேங்க்

ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலமாக மத்திய அரசு எவ்வளவு கோடி ரூபாய் மக்களுக்கு மானியமாக வழங்கியுள்ளது என்பதை இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்காத நிலையில், அந்த வங்கிக் கணக்குகள் மூலமாகத் திரட்டப்பட்ட மூலதனத்துக்கு மட்டும் உரிமை கோருவது அரசின் செயல்பாடுகளைத் திசை திருப்பும் நிகழ்வு என்கிறார்கள் விமர்சகர்கள்.

Vikatan

மேலும், பா.ஜ.க அரசு பொறுப்பேற்று இந்த‌ 7 ஆண்டுகளில் இதுவரையிலும் 56% மக்கள் மட்டுமே வங்கி சார்ந்த வணிகப் பரிமாற்றங்களை உபயோகித்து வருவதாகவும். 44% மக்கள் இன்னும் தங்களது அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்வதாகவும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, அதாவது 2014-ம் ஆண்டைவிட தற்போது பொதுமக்களிடம் அதிகப்படியான வங்கிக் கணக்குகள் நடைமுறையில் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், வெறும் வங்கிக் கணக்கு என்பது முதல்படி மட்டும்தான். மக்களை அடுத்த படிநிலைக்குக் கொண்டு செல்லாமல் வெறும் முதல்படியையே பெரும் சாதனையாக மத்திய அரசு சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை!

- மணியன் கலியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு