Published:Updated:

பார்மா ஃபண்டுகள்... முதலீட்டுக்கு கவனிக்கலாமா? - ‘யூ.டி.ஐ ஃபண்ட்’ ஸ்ரீவத்ஸா சிறப்புப் பேட்டி

யூ.டி.ஐ ஃபண்ட் ஸ்ரீவத்ஸா
பிரீமியம் ஸ்டோரி
News
யூ.டி.ஐ ஃபண்ட் ஸ்ரீவத்ஸா

பணப்புழக்கம், முக்கிய மருந்துச் சந்தைகளில் முன்னேற்றம் போன்றவற்றால் நடுத்தர காலத்தில் பார்மா துறை மேலும் மேம்படும்!

நிதித்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம்கொண்ட யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மற்றும் ஃபண்ட் மேனேஜர் (ஈக்விட்டி) வி.ஸ்ரீவத்ஸா (V.Srivatsa) இ-மெயில் மூலம் நமக்களித்த சிறப்புப் பேட்டி...

ஊரடங்கு நடைமுறைகள் ஓரளவுக்குத் தளர்த்தப்பட்டிருப்பதால், எந்தெந்தத் துறைகள் வளர்ச்சி காணும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

“துறைகளைப் பொறுத்தவரை அவசியமான மற்றும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய நுகர்வோர் பொருள்கள் சார்ந்த எஃப்.எம்.சி.ஜி துறை முதலில் இயல்புநிலைக்குத் திரும்பும். இரண்டாவது, வீட்டு உபயோக உபகரணங்கள் போன்ற சற்றே அதிக விலை உயர்ந்த டி.வி., வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்றவை வளர்ச்சிக்குத் திரும்பும். பின்னர் வாகனத்துறை மீண்டுவரும் என்று எதிர்பார்க்கிறோம். நெருக்கடியிலிருந்து மீண்டுவர அதிக காலம் எடுக்கும் துறைகளாக விருந்தோம்பல், விமானப் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதற்கேற்ப பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டு உத்தியை வகுத்துக்கொள்வது நல்லது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பார்மா ஃபண்டுகள்... முதலீட்டுக்கு கவனிக்கலாமா? - ‘யூ.டி.ஐ ஃபண்ட்’ ஸ்ரீவத்ஸா சிறப்புப் பேட்டி

இந்தியப் பங்குச் சந்தையை ஏற்றத்தின் போக்குக்குத் தூண்டும் முக்கிய விஷயங்கள் என்னென்ன.. முதலீட்டாளர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

“நாடு முழுக்க ஊரடங்கை முழுவதுமாக விலக்கிக்கொள்வதுதான் பங்குச் சந்தையை ஏற்றத்தின் போக்கில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமையும். பொதுமக்கள் நடமாட விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டால், வர்த்தகம் இயல்புநிலைக்குத் திரும்பும்.

கடன் சந்தை வளர்ச்சி, வாகன விற்பனை வளர்ச்சி மற்றும் சில்லறை வர்த்தக வளர்ச்சி போன்ற குறுகியகால இண்டிகேட்டர்களின் செயல்திறன், பொருளாதார மீட்சியின் வேகத்தைத் தீர்மானிக்க உதவும். கோவிட்-19 வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு, அடுத்த மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கும்.

ஊரடங்கு எப்போது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும், கோவிட்-19 வைரஸ் பரவலுக்குப் பிறகு நுகர்வோர்கள் செலவு செய்வது எப்படியிருக்கும், தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும், வைரஸ் பாதிப்புக்கான சரியான மாத்திரை உருவாக்கம் எப்படியிருக்கும் போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது கடினம். எனவே, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்டகால மதிப்பீடுகளை மனதில்கொண்டு முதலீடு செய்வதே சிறந்த உத்தியாக இருக்கும். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் ரிஸ்க்கைக் குறைக்க சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானைத் (எஸ்.ஐ.பி) தேர்வு செய்வது நல்லது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பார்மா பங்குகளில் முன்பைவிட அதிகமாக முதலீடு செய்துவருகின்றன. எனவே, முதலீட்டாளர்கள் இப்போது பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

“நல்ல வருமானம், நியாயமான பங்கு மதிப்பீடு மற்றும் கொரோனா பரவலில் குறைந்த தாக்கத்தைச் சந்திக்கும் துறைகளில் பார்மா துறை சிறப்பாக இருக்கிறது. மேலும், இந்தத் துறைக்கான வருவாய் மற்றும் பணப்புழக்கம், முக்கிய மருந்துச் சந்தைகளில் முன்னேற்றம் போன்றவற்றால் நடுத்தர காலத்தில் பார்மா துறை மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அமெரிக்கச் சந்தை மற்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இந்தியாவின் அதிக லாபகரமான சந்தைகள் மற்றும் வளர்ந்துவரும் சந்தைகளில் கவனம் செலுத்துகின்றன. இதனால், பார்மா துறை சார்ந்த பங்குகள் மற்றும் ஃபண்டுகள் நடுத்தர காலத்தில் நன்கு செயல்படும் என எதிர்பார்க்கலாம்.

யூ.டி.ஐ ஃபண்ட் ஸ்ரீவத்ஸா
யூ.டி.ஐ ஃபண்ட் ஸ்ரீவத்ஸா

பார்மா ஃபண்ட் என்பது செக்டார் ஃபண்ட் என்பதால், அதிக ரிஸ்க் இருக்கிறது. அந்த வகையில், உங்கள் போர்ட்ஃபோலி யோவில் சுமார் 10-15% வரை வைத்துக் கொள்ளலாம்.”

நீங்கள் நிர்வகிக்கும் யூ.டி.ஐ ஹெல்த்கேர் ஃபண்டின் முதலீட்டுத் தத்துவம் (Investment Philosophy) என்ன? எவற்றின் அடிப்படையில் முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

“யூ.டி.ஐ ஹெல்த்கேர் ஃபண்டில் மருந்துத் தயாரிப்பு மற்றும் ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. நல்ல வருவாய் விகிதங்கள், சிறப்பான பணவரத்து மற்றும் நியாயமான பங்கு மதிப்பீடு உள்ள, எதிர்காலத்தில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பார்மா மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய முயல்கிறோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஊரடங்கு முடிந்ததும், அதிக தேவைகள் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும்’ என்று பல முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இந்த எண்ணம் எந்த அளவுக்கு யதார்த்தமானது?

“கடந்த காலங்களில் இதுபோன்ற முன்மாதிரி நம்மிடம் இல்லை. எனவே, ஊரடங்கு நீக்கப்பட்டவுடன், எந்த அளவுக்குத் தேவை அதிகரிக்கும் என்பதை அளவிடுவது கடினமான பணி. எனவே, முதலீட்டாளர்களின் எண்ணம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

பார்மா ஃபண்டுகள்
பார்மா ஃபண்டுகள்

இந்தியப் பங்குச் சந்தையில் நிலையற்றதன்மை அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

“கடந்த சில மாதங்களாக இந்தியச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்திருக்கிறது. காரணம், தற்போதைய தொற்றுநோயின் வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறோம். இதற்கு, கடந்த காலங்களில் எந்த முன்னுதாரணமும் இல்லை. மேலும், இது உலக பங்குச் சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பங்குச் சந்தைகள் எப்போதும் ஏற்ற இறக்கம் கொண்டவைதான். முதலீட்டாளர்கள் இந்த நிலையற்ற காலகட்டத்தில், முடியும்பட்சத்தில் தங்கள் முதலீடுகளைச் சராசரி செய்ய வேண்டும். 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் கடுமையான சந்தை இறக்கத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து செய்தவர்கள், பின்னர் நல்ல வருமானத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கடந்தகால பகுப்பாய்வு காட்டுகிறது.”

தற்போதைய சூழ்நிலையில் நாணயம் விகடன் வாசகர்களுக்கு உங்களின் சிறப்பு ஆலோசனை என்ன?

“தற்போதைய கோவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியையும், 2009-ம் ஆண்டில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியையும் எடுத்துக்கொண்டால், இயல்புநிலை திரும்புமா என்று தெரியாத மற்றும் நிச்சயமற்றதன்மை குறித்த அதிக பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது. உலகளாவிய நிதி நெருக்கடிமுதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்பதை ஏராளமான முதலீட்டாளர்கள் நிலைமை சரியான பிறகுதான் உணர்ந்தார்கள்.

முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை குறித்த பல்வேறு கணிப்புகளைத் தவிர்த்துவிட்டு, தற்போதைய சூழ்நிலையில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கண்டிப்பாக எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர வேண்டும்.

முடியும்பட்சத்தில் கூடுதல் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். நம் உடல்நலத்தையும் நிதி நலத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டும்.”