நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மாருதி நிறுவனத்தை நிலைபெறச் செய்த ஜகதீஷ் கட்டார்! 65 வயதில் சொந்தத் தொழில் தொடங்கியவர்...

ஜகதீஷ் கட்டார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜகதீஷ் கட்டார்

J A G D I S H K H A T T A R

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் இந்த அளவுக்கு வளரக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜகதீஷ் கட்டார். கடந்த வாரம் திங்களன்று இவர் காலமான செய்தி, பலரும் பேசும் விஷயமாக இருந்தது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜகதீஷ், வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற விரும்பவில்லை. எனவே, ஐ.ஏ.எஸ் வேலையை விட்டுவிட்டு, 1993-ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் இயக்குநராகப் பொறுப் பேற்றார். இதைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இவரது காலத்தில்தான் மாருதியின் ஐ.பி.ஓ வெளியானது. அப்போது பங்குச் சந்தை பல எதிர்மறைச் செய்திகளால் சென்செக்ஸ் 30% வரை சரிந்திருந்தது. அதேபோல, மாருதியின் முந்தைய நிதிஆண்டு நிதிநிலை முடிவுகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஜகதீஷ் கட்டார்
ஜகதீஷ் கட்டார்

இருந்தாலும் இந்த ஐ.பி.ஓ வெற்றி அடைய பல முயற்சிகள் எடுத்தார். பங்குச் சந்தை வல்லுநர்களுடன் தொடர்ந்து உரையாடினார். இந்த ஐ.பி.ஓ தோல்வியடைந்தால் இந்தியாவின் வளர்ச்சியே கேள்விக்கு உள்ளாகும் என வல்லுநர்களிடம் உரையாற்றினார். தவிர, இந்தியா முழுவதும் சென்று ஐ.பி.ஓ குறித்து உரையாற்றினார். ‘ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஸ்கூட்டரில் செல் கிறார்கள். இவர்கள் விரைவில் காரில் செல்வார்கள்’ என்பதுதான் ஜகதீஷின் தீர்க்கமான நம்பிக்கை.

இவரது முயற்சியால் மாருதி ஐ.பி.ஓ பெரு வெற்றி பெற்றது. ஒரு பங்கின் விலை 125 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் வர்த்தக தினத்தில் 32% உயர்ந்து, 164 ரூபாயில் இந்தப் பங்கின் வர்த்தகம் முடிந்தது.

65 வயதில் 2007-ம் ஆண்டு மாருதி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜக்தீஷ். 35 வயதில் சொந்தமாகத் தொழில் தொடங்க முடியாத நிலையில், 65 வயதில் கார்நேஷன் ஆட்டோ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு நிறுவனத்துக்கு ஒரு ஷோரும் இருக்கிறது. ஏன் பல பிராண்ட் புதிய கார்கள் ஒரே ஷோரூமில் இருக்கக் கூடாது என யோசித்தார். இதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல, பல பிராண்ட் கார்களுக்கு ஒரே சர்வீஸ் ஸ்டேஷன் என்னும் அவரது ஐடியாவையும் கார் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கவில்லை. காரணம், உதிரிபாகங்களை பகிர்ந்துகொள்ள முடியாது என கார் நிறுவனங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனை மற்றும் சேவை மையத்தைத் தொடங்கினார் ஜகதீஷ்.

ஆன்லைன் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாமல், நேரடியான ஷோரூம்கள் மற்றும் ஃப்ரான்சைஸி அடிப்படையில் அவரது தொழிலை விரிவுபடுத்தினார். அந்த முயற்சி பெரிய வெற்றியைத் தரவில்லை. வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் தவித்தார் ஜகதீஷ்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு கார்நேஷன் ஆட்டோ நிறுவனத்தை மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. பிராண்ட், சாஃப்ட்வேர், சேவை மையங்களை மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி கார்நேஷன் நிறுவனம் மற்றும் ஜகதீஷ் மீது வழக்கு தொடுத்தது. வாங்கிய கடனை முறைகேடாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதாக சி.பி.ஐ வழக்குப் போட்டது.

‘‘என் மொத்த சேமிப்பையும் முதலீடு செய்து தொழில் தொடங் கினேன். நாங்கள் செய்த பிசினஸ் தோல்வியடைந்தது. ஆனால், நாங்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை’’ என்று விளக்கம் தந்தார் ஜகதீஷ்.

மாருதி நிறுவனத்தைப் பெரிய வெற்றி அடையச் செய்ததுபோல, அவரது நிறுவனத்தை ஆக்காமலே தனது 78-வது வயதில் மாரடைப்பில் மறைந்திருக்கிறார் ஜகதீஷ்!