Published:Updated:

‘கொங்கு ஸ்பெஷல்’ ஜே.பி மசாலா... வெற்றியின் ரகசியம்..!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

நேட்டிவ் பிராண்ட் - 9

‘கொங்கு ஸ்பெஷல்’ ஜே.பி மசாலா... வெற்றியின் ரகசியம்..!

நேட்டிவ் பிராண்ட் - 9

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

“உணவின் ருசிக்கு முக்கியமானது மசாலா. காரசாரமாக மசாலா கலந்து செய்யும் உணவுகளைப் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் அசைவ உணவையும், மசாலாவையும் பிரிக்கவே முடியாது.

கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் சில்லி சிக்கன், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ஜே.பி மசாலாவைத்தான் (JP Masala). கொங்கு மக்களின் அசைவ உணவில் அந்த மசாலாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் கொங்கு மக்களின் விருப்பப் பட்டியலில் ஜே.பி மசாலா இடம் பெற்றிருக்கிறது. ஜே.பி மசாலாவின் வளர்ச்சி, வெற்றி ரகசியம் குறித்து அதன் உரிமையாளர் சண்முகசுந்தரம் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘கொங்கு ஸ்பெஷல்’ ஜே.பி மசாலா... வெற்றியின் ரகசியம்..!

“கோவை சாய்பாபா காலனியில்தான் பிறந்தேன். அப்பா, ஒரு மில்லில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். அம்மா, ஒரு தங்கை உள்ளனர். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது, என் அப்பா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்பா இறந்ததால், அந்தப் பணி அம்மாவுக்குக் கொடுத்தார்கள். மில் வேலைக்கு சென்றுதான் அம்மா எங்களைக் காப்பாற்றினார். வீட்டில் எந்த வசதியும் இருக்காது. குடும்பச் சூழ்நிலை, படிப்பில் ஆர்வம் இல்லாதது போன்றவற்றால் 9-ம் வகுப்புடன் நான் நின்றுவிட்டேன். ஒரு நாள் கடுகு டப்பாவில் அம்மா வைத்திருந்த ரூ.100 மற்றும் சில துணிமணி களுடன் சென்னை சென்றுவிட்டேன். மயிலாப்பூரில் ஒரு டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலை பிடிக்காததால், ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்துவிட்டு, மீண்டும் கோவைக்கு வந்துவிட்டேன்.

அம்மா தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் லட்சுமி மில்ஸ் நிறுவனத் தில் வேலைக்கான ஆர்டர் வாங்கி வந்தார். அப்போது லட்சுமி மில்ஸ் வேலை, அரசுப் பணிக்கு சமம். சமூகத்தில் அதற்கு அவ்வளவு மரியாதை இருந்தது. இருப்பினும் நான் ரஜினி ரசிகன் என்பதால், அரசுப் பேருந்தில் டிரைவராக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. கொஞ்ச காலத்துக்கு கார் டிரைவராக வேலை பார்த்திருக்கிறேன். ஒரு சிட் ஃபண்ட் நிறுவனத்தில் டிரைவர் வேலைக்குச் சேர்ந்தேன். நான் சுறுசுறுப்பாகப் பணியாற்றியதைப் பார்த்து, அதன் உரிமையாளருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. படிப்படியாக வளர்ந்து அங்கு உயர்பொறுப்புகளை அடைந்தேன்.

திருமணத்துக்குப்பிறகு அங்கிருந்து வெளியேறி, நான் சிறிது காலம் ஃபைனான்ஸ் செய்துவந்தேன். அப்போது என் வாடிக்கையாளர் ஒருவர், சில்லி சிக்கன் உள்ளிட்ட மசாலா பொருள்களை கறிக் கடைகளுக்கு விற்றுவந்தார். ஒருகட்டத்தில் அவரால் அந்தத் தொழிலை நடத்த முடியவில்லை. அவருடன் இணைந்து சிறிது காலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டேன். 2001-ம் ஆண்டு முதல் நான் தனியாக ஜே.பி மசாலா என்கிற பெயரில் தொழிலைத் தொடங்கினேன்.

சிறிய அலுவலகம், அதிலேயே ஃபேக்டரியும் இருந்தது. மசாலா அரைப்பது தொடங்கி மார்க்கெட்டிங் வரை எல்லாவற்றிலும் கடின உழைப்பை செலுத்தினேன். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னைக்கு மசாலா வாங்கிச் செல்பவர்களும் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.

அதன் காரணமாக சென்னையிலும் தொழிலைத் தொடங்க நினைத்தேன். சென்னையில் உள்ள பல டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்குச் சென்று ஃப்ரீ சாம்பிள் கொடுத்தேன். சரியான வரவேற்பு இல்லை. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கும், சென்னையில் வியாபாரம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. குப்பம் குப்பமாகச் சென்று மளிகைக் கடைகளுக்கு முன்பு ஃப்ரீ சாம்பிள் கொடுத் தோம். அங்கிருந்த மக்களும் அதை வாங்குவதற்குமுன்பு, ‘நீங்கள் யார்... எப்படி செய் கிறீர்கள்... தரமானதா?’ என்று ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள்.

சண்முகசுந்தரம்
சண்முகசுந்தரம்

நான் விளக்கமான பதிலைத் தந்தபிறகு சிலர் வாங்கினர்கள். அதில் ஒருவர் எங்கள் மசாலாவை சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடம், ‘‘இது சூப்பரா இருக்குப்பா. கடையில வாங்கி வை’’ என்று சொல்ல, அதுதான் சென்னையில எங்களுக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. தொடர்ந்து முயற்சி செய்த பிறகு, சென்னையிலும் எங்கள் மசாலாவுக்கு டிமாண்ட் உருவானது.

இப்ப கேரளாவில சில மாவட்டங்கள், பெங்களூரு என்று பல பகுதிகளில் விற்பனை செய்கிறோம். மேற்கு மண்டலம் தான் எங்களின் தொழிலின் மையப் பகுதி. இங்கு நாங்கள் ஃபேக்டரி அமைத்து, நேரடியாக விற்பனை செய்கிறோம். மற்ற இடங்களில் ஏஜென்சி மூலம் விற்பனை செய்கிறோம். அடித்தட்டு மக்களிடம் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், எந்தத் தொழிலிலும் வெற்றி பெற்றுவிடலாம். அதுதான் எங்களின் தாரக மந்திரம்.

இப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் உறவினர்களிடம், ‘மறக்காம ஜே.பி மசாலா கொண்டு வந்துருங்க’ எனச் சொல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகம். சமீபத்தில் கூட, அமெரிக்காவில் உள்ள ஒருவர் தங்கள் உறவினர்கள் மூலம் எங்கள் மசாலாவை சுவைத்துவிட்டு இன்ஸ்டா கிராமில் நெகிழ்ந்து பதிவிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தனர். 800 சதுர அடியில்தான் எங்கள் அலுவலகமே இருந்தது. கொரோனாவுக்கு முன்பு 380 ஊழியர்கள் இருந்தனர். இப்போது 180 ஊழியர்கள் வரை உள்ளனர். ஆண்டுக்கு ரூ.30 கோடி டேர்ன்ஓவர் ஆகிறது.

சில்லி சிக்கன், சில்லி கோபி, மீன் வறுவல் ஆகிய மசாலாக்கள்தான் ஆரம்பத்தில் தொடங்கினோம். இந்த மூன்று மசாலாக்களுக்கு தனி சுவை உண்டு. முக்கியமாக, எங்கள் மசாலா போட்ட சில்லி சிக்கன், மீன் வறுவல் குழந்தை களுக்கு அதிகம் பிடிக்கும் என வாடிக்கையாளர்கள் சொல்வார்கள்.

இப்போது 54 வகை மசாலாக்கள் உற்பத்தி செய்கிறோம். கான்ஃப்ளவர் மாவு, சோயா சாஸ், மிளகாய் என நாங்கள் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் அனைத்தும் தரமானவை. ஒரு நாளில் 15 டன் மசாலாக்கள் உற்பத்தி செய்கிறோம்.

என் அனுபவத்தில் எந்தத் தொழிலாக இருந்தாலும் முதல் ஐந்து ஆண்டுகள் முக்கியமான ஒன்று. அந்தக் காலகட்டத்தில் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்தக் கால கட்டத்தைக் கடந்தால் மட்டுமே, அந்தத் தொழிலில் ஜெயிக்க முடியும்.

‘கொங்கு ஸ்பெஷல்’ ஜே.பி மசாலா... வெற்றியின் ரகசியம்..!

என் வாழ்நாளில் நான் ஒரு நிமிடம்கூட வீணடித்ததில்லை. இப்போதும் குறித்த நேரத்தில் மசாலாக்களை டெலிவரி செய்வது உட்பட, எல்லாவற்றிலும் நேரத்தை சரியாகக் கடைப்பிடிப்பேன். அதுதான் எங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நேரத்தை சரியாக கடைப்பிடிக்கா விட்டால், தொழிலில் வெற்றி பெற முடியாது. உணவுத் தொழிலில் கலப்படம் செய்பவர்கள், நீண்ட நாள்களுக்கு நிலைத்திருக்க முடியாது. எங்கள் தரத்தில் எப்போதும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.

மசாலாக்களைப் பொறுத்தவரை, லோக்கல் மார்க்கெட்டை விட வெளிநாட்டு மார்க்கெட்தான் பெரியது. அங்கு தினமும் அசைவு உணவு சமைப்பார்கள். எங்களுக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இப்போது நாங்கள் தொழிலில் போதுமான வளர்ச்சியை அடைந்துவிட்டோம். அதை அப்படியே தக்கவைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

அடுத்த தலைமுறைக்கு என்னால் முடிந்த சில தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டேன். முதல்கட்டமாக ஐந்து இளைஞர்களுக்கு மார்க்கெட்டிங் தொடங்கி அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். இந்தத் தொழில் எனக்கு கற்றுக் கொடுத்ததை, நான் சிலருக்கு கற்றுக் கொடுப்பதில்தான் எனக்கு திருப்தி” என்று பேசி முடித்தார் சண்முக சுந்தரம்.

அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பு நிச்சயம் வெற்றி தரும்!