Published:Updated:

இந்தியாவில் ஜியோவுடன் `வாட்ஸ்அப் பே’ - கலக்கும் கூட்டணி..!

இந்தியாவில் 
ஜியோவுடன்
வாட்ஸ்அப் பே
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் ஜியோவுடன் வாட்ஸ்அப் பே

ஜியோவில் செய்யப்பட்டுள்ள முதலீடு மூலம் மிகப்பெரிய அளவில் ஃபேஸ்புக் இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவரும்.

இந்தியாவில் ஜியோவுடன் `வாட்ஸ்அப் பே’ - கலக்கும் கூட்டணி..!

ஜியோவில் செய்யப்பட்டுள்ள முதலீடு மூலம் மிகப்பெரிய அளவில் ஃபேஸ்புக் இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவரும்.

Published:Updated:
இந்தியாவில் 
ஜியோவுடன்
வாட்ஸ்அப் பே
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவில் ஜியோவுடன் வாட்ஸ்அப் பே
முழு முடக்க காலத்தில் நாடு முழுவதும் கொரோனா தவிர்த்து அதிகம் பேசப்பட்ட ஒன்று, ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஜியோ முதலீடுதான். ஜியோவின் 9.99% பங்குகளை சுமார் 43,574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருந்தது ஃபேஸ்புக்.

2014-ல் வாட்ஸ்அப்பை வாங்கியதற்குப் பிறகு ஃபேஸ்புக் செய்திருக்கும் மிக முக்கிய முதலீடு இதுதான். ஆம், 2014-ல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.2 லட்சம் கோடிக்கு வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. விளம்பர வருமானமே இல்லாத வாட்ஸ்அப்பை அன்று ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதற்கான காரணத்தை தற்போது தனது செயலின் மூலம் சொல்ல வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். அதாவது, தனது வாட்ஸ்அப் செயலியை சூப்பர் ஆப்பாக நிறுவ முயல்கிறது ஃபேஸ்புக்.

வாட்ஸ்அப் பே
வாட்ஸ்அப் பே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப்பர் ஆப்’ ஒரு சிறு விளக்கம்!

ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி பயனாளருக்குத் தேவையான எல்லாச் சேவைகளையும் ஒரே இடத்தில் தரும் ஆப்பை ‘சூப்பர் ஆப்’ என்கிறார்கள். சீனாவில் ‘We Chat’ என்ற ஒரு சேவைதான் வழங்கப்பட்டுவருகிறது. அதற்கு மிக முக்கியம் அந்தச் செயலியில் பேமன்ட் வசதி இருப்பது. வாஸ்ட்அப் செயலியில் பேமன்ட் வசதியை அறிமுகம் செய்வதுதான் `சூப்பர்ஆப்’ திட்டத்துக்கான முதல் ஸ்டெப்.

பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் செயலி மூலமாகப் பணம் அனுப்பும் பேமன்ட் வசதியையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகவே இது பீட்டா வெர்ஷனிலேயே பரிசோதனை கட்டத்தில் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் பிரேசில் நாட்டில், வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவையை முழுமையாகத் தொடங்கியது. இந்தியாவுக்கு அடுத்தபடி வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாக பிரேசில் இருப்பதுதான், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தச் சேவையை அங்கு அறிமுகம் செய்யக் காரணம். அங்கு சுமார் 12 கோடி மக்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், ஒரே வாரத்தில், நாட்டில் பேமன்ட் மார்க்கெட்டில் போட்டிச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு. வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்குத் தடை விதித்தது பிரேசிலின் மத்திய வங்கி. இது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கடும் அதிர்ச்சியை அளித்தது.

வாட்ஸ்அப் பே
வாட்ஸ்அப் பே

இந்த நிலையில்தான், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. விரைவில் இந்தியாவில் வாட்ஸ்அப் வைத்திருக்கும் அனைவரும் அதன் மூலம் பணத்தை அனுப்பலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ``இந்தியாவில் பேமன்ட் வசதியை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டிருக்கிறோம். யூ.பி.ஐ (UPI) மூலம் பணம் செலுத்துவது என்பது ஒரு முன்மாதிரியானது. இது அனைவருக்கும் நிதிச் சேவைகளை வழங்க வல்லதாக இருக்கிறது” என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

2018-ம் ஆண்டிலேயே ``வாட்ஸ்அப் பே’ வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் இந்தச் சேவையை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை இந்நிறுவனம் சந்தித்துவருகிறது. டேட்டா பாதுகாப்பில் குழப்பங்கள் இருந்ததால் பல காலமாக NPCI (National Payments Corporation of India) அதற்கு ஒப்புதல் வழங்காமலேயே இருந்தது. இறுதியாக, குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஜியோவில் செய்யப்பட்டுள்ள முதலீடு மூலம் மிகப்பெரிய அளவில் ஃபேஸ்புக் இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவரும். முதலில், `இதுவரை அதிகம் பிரபலமடையாத ஜியோ மார்ட் சேவை, வாட்ஸ்அப் பே வசதி அறிமுகம் செய்யப்பட்டால், அது இ-காமர்ஸ் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ எனக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், வாட்ஸ்அப்பின் எளிமை. ஜியோ மார்ட் மூலம் இந்தச் சேவையை வழங்கத் தொடங்கிவிட்டால், வாட்ஸ்அப் தொடர்ச்சியாகப் பல்வேறு சேவைகளை வழங்கும் தளமாக மாறும் நடவடிக்கைகளில் இறங்கும்.

வாட்ஸ்அப் பே
வாட்ஸ்அப் பே

உணவு ஆர்டரில் தொடங்கி சினிமா புக்கிங், கடைகளில் பணம் செலுத்துதல் என சூப்பர் ஆப்பாக மாறும் வாட்ஸ்அப். என்றாலும், `பர்சனல் டேட்டா பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகும்’ என்கிறார்கள் சிலர். `இதுபோன்ற ஆப்கள் ஒருவரைப் பற்றி அளவுக்கு அதிகமான தகவல்களைச் சேமிக்கும். ஹேக் செய்யப்பட்டால், அனைத்துத் தகவல்களும் கசிய வாய்ப்புகள் இருக்கின்றன’ போன்ற எச்சரிக்கை மணிகளும் அடிக்கப்படுகின்றன. பிரைவசி சார்ந்த சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிவரும் ஃபேஸ்புக், `இந்தத் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்’ என்ற நம்பிக்கையைச் சந்தையில் விதைத்துவிட்டால், `சூப்பர் ஆப்களின் ராஜா’வாக வலம் வரலாம்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் இந்த நிறுவனம், `வங்கிகளை ஒழுங்குபடுத்தும் ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாட்டின் தரவு மற்றும் உள்ளூர்மயமாக்கல் தேவைகளுக்கு முழுமையாக இணங்குகிறோம்’ எனத் தெரிவித்தது. இதனால் இந்தியாவில் விரைவில் அனைவருக்கும் பேமன்ட் வசதியை இது அறிமுகம் செய்யும் என நம்பலாம். இந்தியாவில் வாட்ஸ்அப் அனைத்துப் பயனாளர்களுக்கும் பேமன்ட் சேவையை வழங்கும்பட்சத்தில், இந்தியாவில் நிதிச் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அது பெரும் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது மார்க்கெட்டிலிருக்கும் பேமன்ட் சேவை செயலிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. முன்னணியில் இருக்கும் கூகுள் பே ஆப் மூலம் தற்போது மாதம் 75 மில்லியன் பயனாளர்கள் பணப் பரிவர்த்தனைகளைச் செய்திருக்கிறார்கள். அதாவது 7.5 கோடி பயனாளர்கள். அதே நேரத்தில் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 40 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான், `வாட்ஸ்அப் போன்ற ஆப் மற்ற சேவைகளை வழங்கும்பட்சத்தில் அது போட்டி ஆப்களை துவம்சம் செய்துவிடும்’ என்கிறார்கள். பிரேசிலைப் போன்று இந்தியாவிலும் போட்டிச் சூழலைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism