Published:Updated:

‘‘வேலை வேணுமா? மிஸ்டுகால் கொடுங்க..!’’ பரமத்திவேலூர் ஸ்டார்ட்அப் ஆச்சர்யம்!

பாலமுருகன் சுந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன் சுந்தரராஜன்

ஸ்டார்ட்அப்

‘‘வேலை வேணுமா? மிஸ்டுகால் கொடுங்க..!’’ பரமத்திவேலூர் ஸ்டார்ட்அப் ஆச்சர்யம்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
பாலமுருகன் சுந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன் சுந்தரராஜன்

வேலை தேடுபவர்கள் ஒரு மிஸ்டுகால் தந்தால், அவர்களைத் தகுந்த ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தும் பணியைக் கச்சிதமாகச் செய்து வருகிறது, கைகள் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் என்கிற சிறு நகரத்தில் கைகள் நிறுவனம் தொடங்கப் பட்டு, மூன்றே வருடங்களில் வருடத்துக்கு ரூ.50 லட்சம் வரை டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பாலமுருகன் சுந்தரராஜனை சந்தித்துப் பேசினோம்.

“எனக்கு சொந்த ஊர், நாமக்கல் மாவட்டத் தில் உள்ள பொத்தனூர். என் அப்பா, போக்கு வரத்துத் துறையில் எம்.டியாக இருந்து ஓய்வு பெற்றார். நான் 2005-ம் ஆண்டு மாஸ்டர் இன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். உடனே, பெங்களூர்ல இன்டெல் கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. அங்க, 12 வருஷம் வேலை செஞ்சேன். கடைசியா, வருஷத்துக்கு ரூ.36 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன்.

பாலமுருகன் சுந்தரராஜன்
பாலமுருகன் சுந்தரராஜன்

இந்த நிலையில, 2017-ம் வருஷம், உலகம் முழுக்க வெற்றியடைஞ்ச ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்தியாவிலும் கால் பதிச்சுச்சு. அதனால ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றும் அனுபவத்தைப் பெற விரும்பி, 2017-ம் வருஷம் இன்டெல் கம்பெனி வேலையை ராஜினாமா செஞ்சேன். அப்படி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துல பெங்களூரில் இன்ஜினீயர் டிவிஷன் வொர்க் ஹெட் மற்றும் இயக்குநராக ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். இந்த நிலையில, 2018-ம் ஆண்டு கடைசியில, தமிழகம் முழுக்க கோவை பழமுதிர் நிலையம்ங்கிற பெயர்ல என் கல்லூரி நண்பர் செந்தில் நடராஜன் திறந்தார். அவர், தன் நிறுவனத்துக்குத் தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை என்றும், புரோக்கர் மூலமாக ஆட்களைப் பிடிக்க நிறைய கமிஷன் தர வேண்டியிருப்பதையும், அப்படி சேருபவர்களும் நீண்ட நாள் வேலையில் இருப்பதில்லை என்றும் சொன்னார்.

அப்பதான், வேலை ஆட்களைக் கண்டறிந்து, கம்பெனி களுக்கு அனுப்பும் யோசனை உதிச்சது. உடனே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பம்ப் கம்பெனிகள்,சி.என்.சி மெஷின் தயாரிக்கும் கம்பெனிகள், நூற்பாலைகள்னு பல கம்பெனி முதலாளிகளைச் சந்திச்சு பேசினப்ப, இந்த வேலை ஆள் பிரச்னை தங்கள் கம்பெனிகளிலும் இருப்ப தாகச் சொன்னார்கள். அதே நேரம், கைத்தொழில் தெரிஞ்ச வங்க, பி.ஏ, பி.எஸ்ஸி, டிப்ளோமானு டிகிரி படிச்சவங்க தகுந்த வேலை கிடைக்காம சிரமப்பட்டதையும் பார்க்க முடிஞ்சது. இரண்டு தரப்புக்கும் பாலமாக நாம இருப்போம்னு, ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க முடிவு பண்ணினேன்.

செந்தில் நடராஜன்
செந்தில் நடராஜன்

நிறுவனத்தைத் தொடங்க நண்பர் செந்தில் நடராஜன் ஆரம்ப முதலீட்டை செய்தார். நானும் பணம் போட்டேன். நண்பர் ரவின் சோமி, டெக்னிக்கல் சப்போர்ட் பண்ண முன்வந்தார். கோ ஃபவுண்டராக இருக்கும் அவர், தற்போது எங்க கம்பெனியில சீஃப் டெக்னாலஜி ஆபீஸராக இருக்கிறார். 2019 ஏப்ரல்ல, ரூ.35 லட்சம் முதலீட்டில் நாலு ஊழியர்களோடு கம்பெனியைத் தொடங்கினோம். கோவை, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சிறுகுறு நிறுவனங் களை நடத்துபவர்களை அணுகி, எங்க கம்பெனி பற்றி விளக்கினோம். பலரும், ‘இன்னொரு புரோக்கர் மாதிரி போல’னு எங்க கம்பெனியை நினைச்சாங்க. அவர்களிடம் பொறுமையாக எங்களைப் பற்றி எடுத்துச் சொன்னோம். நாங்க சந்திச்ச தொழில் நிறுவனங்களில் 30% பேர், எங்க மேல நம்பிக்கை வச்சு, எங்க முயற்சிக்கு ஒத்துழைச்சாங்க. ஆரம்பத்துல, கம்பெனிகளுக்கு ஒரு நபரை வேலைக்கு அனுப்ப ரூ.500 மட்டும் பீஸாக வாங்கினோம்.

தேவையான வேலை ஆட்களைக் கண்டறிய, மிஸ்டுகால் கேம்பைனை நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவைனு அஞ்சு மாவட்டங்கள்ல நடத்தினோம். நாங்க கொடுக்கும் நம்பருக்கு மிஸ்டுகால் தந்தால், அவர்களின் நம்பர் பதிவாகி விடும். அந்த நம்பருக்கு எங்க கம்பெனி ஊழியர் போன் செய்து, அவர்களைப் பற்றிய முழுத் தகவலையும் வாங்கி பதிவு செய்வார். அவர்கள் விரும்பும் ஊரில், அவர்கள் தேடும் வேலையைப் பெற்றுத் தந்தோம். முதல் மாதம் 1,000 பேர் வரை பதிவு பண்ணினாங்க. அடுத்து, 25 கம்பெனிகளிடம் பேசினோம். அதில் முதல் மாசம், 25 ஊழியர்களை 11 கம்பெனி களுக்கு அனுப்பி வைத்தோம். அவர்களில், ஐ.டி.ஐ, பிட்டர், வெல்டர், மெஷின் ஆபரேட்டர் கள் அதிகம். அதேபோல், வேலைக் குச் சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே வேலையை விட்டுப் போகும் பிரச்னையை சந்திச்ச கம்பெனிகளுக்கு, நாங்க உடனே மாற்று ஆட்களை அதிகப்பட்சம் ஒரே வாரத்தில் சேர்க்க உத்தரவாதம் தந்தோம்.

‘‘வேலை வேணுமா? மிஸ்டுகால் கொடுங்க..!’’ பரமத்திவேலூர் ஸ்டார்ட்அப் ஆச்சர்யம்!

இதனால அதிகமான கம்பெனிகள் எங்களை அணுக ஆரம்பித்தன. பெரிய நிறுவனங் கள் எல்லாம் ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட் மூலம் ஆட்களை எடுப்பதால், அந்த முறை இல்லாத சிறு, குறு தொழில் நிறுவனங்களை மட்டுமே நாங்க டார்க்கெட் செஞ்சோம். தமிழகத்தில் ஆறு லட்சம் சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் இருக்கு.

டெக்னிக்காக இம்ப்ரூவ் ஆகிட்டே இருந்தோம். 2019 வருஷம் கடைசியிலேயே ‘கைகள் ஜாப்’ங்கிற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தினோம். இதுவரை 50,000 பேர் இன்ஸ்டால் பண்ணி யிருக்காங்க. அதே போல், டெலகிராம், வாட்ஸ்ஆப் மூலமும் வேலை தேடுபவர்களை எங்க கம்பெனியில் பதிவு செய்ய வைத்தோம். எங்ககிட்ட பதிவு செஞ்சவங்களுக்கு, ஜாப் ஆஃபர், கம்பெனி பெயரை ஆட்டோ மேட்டிக்காக வேலை தேடுபவர் களுக்குக்கு குறுஞ்செய்தி, வாய்ஸ் மெசேஜ்னு பல வழிகளில் தகவல் போகும்படி டெக்னிக்கல் விஷயங் களைத் திறம்பட செஞ்சோம்.

ஒரு கம்பெனிக்கு ஒரு டிரைவர் தேவைன்னா, அவர்கள் நடத்தும் நேர்முகத் தேர்வுக்கு 10 டிரைவர் களை தேர்வு செஞ்சு, எங்க சிஸ்டமே தகவல் அனுப்பும். அவர்கள் அந்த வேலைக்கு தயாரா இல்லைன்னா, அடுத்த 10 பேரைத் தேர்வு பண்ணி அனுப்பும். அதே போல், ஊழியர் களுக்கு இன்டர்வியூ பற்றிய தேதி உள்ளிட்ட தகவல்களை, சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காகக் குறுஞ் செய்தி மூலம் நினைவுபடுத்தும். இதனால், எங்க கம்பெனியில் 80% வேலை, ஆன்லைன் மூலம் நடக்க ஆரம்பித்தது.

இதனால கம்பெனி வளர ஆரம்பிச்சது. ஆனா, கடந்த 2020 மார்ச் மாசம் கொரோனா முதல் அலை ஊரடங்கு போட்டதால, எங்க தொழில் வளர்ச்சி அப்படியே முடங்கிப்போச்சு. அந்த வருடம் ஆகஸ்டுக்குப் பிறகு, கம்பெனிகள் இயங்க ஆரம்பிச்ச தால, எங்க தொழில் 2021 ஏப்ரல் வரை நல்லா இருந்துச்சு. ஆனால், மறுபடியும் ஊரடங்கு போடவும், மறுபடியும் பிரச்னை. 2021 செப்டம்பருக்குப் பிறகு தொழில் பழையபடி வளர ஆரம்பித்தது.

தற்போது ஓர் ஊழியருக்கு ரூ.1,500 வரை கட்டணம் வாங்குறோம். எங்களுக்கு இப்ப தமிழ்நாடு முழுக்க 3,500 வாடிக்கையாளர்கள் இருக்காங்க. எங்க கம்பெனி ஆன்லைன் சைட்ல இதுவரை 1.30 லட்சம் பேர் வரை உள்ளே வந்திருக்காங்க. எங்ககிட்ட இருக்கிற 3,500 வாடிக்கையாளர்களில் 56% பேர்கள் ரெகுலராக ஆட்கள் கேட்கிறாங்க. தமிழ்நாடு அளவுல ஸ்டார்ட்அப் கம்பெனியை முதல்ல ஆரம்பிச்சது நாங்கதான். இந்திய அளவில்கூட 2020-க்குப் பிறகுதான் ப்ளூ காலர் கம்பெனிகள் நமது நாட்டில் கால் பதிச்சாங்க. கடந்த ஒரு வருஷத்துல எங்க கம்பெனி ரூ.50 லட்சம் அளவுக்கு டேர்ன்ஓவர் பண்ணியிருக்கு.

ரவின் சோமியுடன் பாலமுருகன்
ரவின் சோமியுடன் பாலமுருகன்

கடந்த வருஷம், தமிழ்நாடு அரசு வளர்ந்துவரும் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி பண்ணினாங்க. அதுல எங்களோட நிறுவனமும் ஒண்ணு. அதே போல, மத்திய அரசும் எங்க நிறுவனத்தைத் தேர்வு செஞ்சிருக்கு. பரமத்தி வேலூர், சென்னை தரமணி, கோவைனு மூணு இடத்துல எங்க கம்பெனிக்கு ஆபீஸ் இருக்கு. அடுத்த 2 வருஷத்துல 35,000 கம்பெனிகளை எங்க க்ளைன்டாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம். அதே போல, 10 லட்சம் ஊழியர்களை எங்க கம்பெனியில வேலைக்காகப் பதிவு பண்ண வைக்கணும்ங்கிற லட்சியத்தோடு இயங்கிகிட்டு இருக்கிறோம். ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலும் எங்க கம்பெனியை ரீச் ஆக்கும் முனைப்போடு செயல்பட்றோம் என்றார்.

பரமத்திவேலூரிலிருந்து தொடங்கிய இந்த ஸ்டார்ட்அப் நிச்சயம் வித்தியாசமானதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism