பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.4 கோடி டேர்ன்ஓவர்... அழகு செடி விற்பனையில் அசத்தும் குமரி பிசினஸ்மேன்!

ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமகிருஷ்ணன்

பிசினஸ்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் ஆர்க்கிட் செடியின் சிறு கன்றுகளை தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, ஓர் ஆண்டு வரை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை டேர்ன்ஓவர் செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.

தக்கலை அருகே சாரோடு பகுதியில் வசித்துவரும் ராமகிருஷ்ணன் பெருஞ்சிலம்பு பகுதியில் ஏழு ஏக்கர் நிலத்தில் ‘ரிங்கோ ஆர்க்கிட்’ என்ற பண்ணையை நிறுவியிருக் கிறார். அவரின் நாற்றுத் தொழிற்சாலையை சுற்றிக் காட்டியபடியே தனது தொழில் பயணம் பற்றி எடுத்துச் சொன்னார் அவர்.

மாலத் தீவுக்கு காய்கறி...

“நான் காலேஜ் படிக்கும்போதே பிசினஸ்ல இறங்கணும்கிற நோக்கம் இருந்தது. தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் யுனிவர் சிட்டில பி.எஸ்ஸி ஹார்ட்டிகல்ச்சர் 1998-ல முடிச்ச கையோடு நாகர்கோவில்ல ஒரு கன்சல்டன்சி ஃபார்ம்ல வேலை செய்தேன். அப்புறம், ஒரு ஏற்றுமதியாளரோட தொடர்பு கிடைத்தது. அவங்க கூட சேர்ந்து இரண்டு வருடம் மாலத்தீவுக்குக் காய்கறிகளை ஏற்றுமதி செஞ்சேன்.

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

ஆர்க்கிட்ஸ் செடி வாங்க தாய்லாந்துக்குப் போனேன்...

2001-ல அக்ரோ ஃபார்மா எக்ஸ்போர்ட் என்ற கம்பெனியை நான் தனியா தொடங்கினேன். அதன்மூலம் காய்கறிகள், லைஃப் பிளான்ட்ஸ்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது எனக் கப்பல், விமானம் மூலமா ஏற்றுமதித் தொழில் பண்ணினேன்.

2008 வரைக்கும் பிசினஸ் நல்லா போய்க்கிட்டு இருந்தது. அந்தச் சமயத்தில, கல்ட்டிவேஷன்ல (உற்பத்தி) செய்ய ஆரம்பிக்கணும்னு நினைச்சு, திருவனந்தபுரம் பக்கத்தில நெடுமங்காட்டில் ஒரு ஏக்கர் இடம் வாங்கினேன். எந்த மாதிரியான செடியை வளர்க்கலாம்னு தேடிக்கிட்டே இருந்தேன்.

திருவனந்தபுரத்தில என் நண்பர்கள் ஆர்க்கிட்ஸ் செடிக்கு கேரளாவுல நல்ல டிமாண்ட் இருக்கிறதா சொன்னாங்க. ஆர்க்கிட்ஸ் செடியை வளர்த்து விக்கிறவங்க, இந்தியாவுல ரொம்ப குறைவுதான். ஆனா, தாய்லாந்தில அந்தச் செடியை நிறைய வளர்த்து விக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு உடனடியா நான் தாய்லாந்துக்குப் போனேன். அங்க இருந்து அந்தச் செடியை இறக்குமதி பண்ணினேன். என்னோட தொடக்கக் காலத்துல ரூ.1 லட்சம்- ரூ.2 லட்சம் வரை முதலீடு செஞ்சேன். அப்புறம் தான் பிசினஸை மெள்ள மெள்ள விரிவு படுத்தினேன்” என்றவர், இறக்குமதியில் இருந்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழிலுக்கு மாறியது குறித்து சொன்னார்.

பூச்சி இல்லாத செடிகள்...

“செடிகளை இறக்குமதி செஞ்சு அதை 45 முதல் 60 நாள்கள் வரை பாதுகாப்பாக வைக்கணும். நெடுமங்காடு யூனிட்ல ரூ.3 லட்சம் வரை செலவு செஞ்சு அதுக்கான வசதிகளை செஞ்சேன். பாதுகாப்பாக வைக்கப்பட்ட செடிகளை உள்ளூரில் உள்ள அக்ரிகல்சர் டிபார்ட்மென்ட், விவசாயக் கல்லூரியில் உள்ள பெத்தாலஜிஸ்ட் போன்றவங்க வந்து ஆய்வு பண்ணுவாங்க. அந்தச் செடிகளில் பூச்சி மற்றும் நோய்கள் எதுவும் இல்லைன்னு உறுதிப்படுத்தின பிறகு, அதை விற்பனை செய்ய அனுமதிப்பாங்க.

பெரிய செடிகளுக்குப் பதிலா...

நாங்க இறக்குமதி செய்யும் செடிகளை விற்பனை செய்வது மூலமா 100% லாபம் கிடைச்சது. நான்கு, ஐந்து வருடம் அந்த பிசினஸ் பண்ணினேன். ஆரம்பத்துல இரண்டு, இரண்டரை வருடம் வயதுள்ள பெரிய செடிகளை இறக்குமதி செய்து விற்பனை பண்ணினோம். பெரிய செடி களை வாங்குறப்ப விலை அதிகம். அதன் எடையும் அதிக மாக இருக்கிறதுனால இறக்குமதி செய்யும் செலவும் அதிகமாகும். ‘‘நாம ஏன் எடை குறைந்த சின்ன செடிகளை இறக்குமதி செய்து பெரிதாக வளர்த்து விற்பனை செய்யக் கூடாதுன்னு யோசித் தேன். அப்படி செஞ்சா வாங்கும் செடிகளின் விலையும் குறையும்; இறக்குமதி செய்யும் செலவும் குறையும். நாமும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும், டேர்ன்ஓவரும் அதிக மாகும்’’ங்கிற முடிவுக்கு வந்தேன்.

இதுக்காக தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள ஆற்றோரத்தில் ஏழு ஏக்கர் இடம் வாங்கினேன். வங்கியில் ரூ.1.5 கோடி கடன் எடுத்து திட்டத்தைத் தொடங்கினேன். சின்ன செடிகளாக இறக்குமதி பண்ணி, ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை இங்கேயே வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அப்ப தான் நாங்க உற்பத்திக்கு வந்தோம்” என்றவர், உற்பத்தியில் உள்ள சிரமங்களை விவரித்தார்.

பிரச்னைக்குமேல பிரச்னை...

“உற்பத்தியை ஆரம்பிச்ச பிறகுதான் பிரச்னைகள் தொடங்கியது. பூச்சி பிரச்னை, நோய்ப் பிரச்னை, தண்ணீர் பிரச்னைன்னு 2011 முதல் 2018 வரை தொடர் பிரச்னையாகவே இருந்தது. நடுவுல, ‘ஏன்டா இந்தத் தொழிலுக்கு வந்தோம்’ங்கிற அளவுக்கு பிரச்னை இருந்தது. பக்கத்தில உள்ள விவசாயிகள் ஆலோசனையைக் கேட்டும், யுனிவர்சிட்டி ஆலோசனை படியும் எல்லா பிரச்னையையும் சமாளிச்சோம்.

ஒருபக்கம் பிரச்னைகள் இருந் தாலும், விற்பனையிலோ, உற்பத்தி யிலோ எந்தச் சுணக்கமும் வரவில்லை. புது பிசினஸ் செய்ய ஆரம்பிச்சா பிரச்னை வரும்; ஆனா, நஷ்டம் வராது. 2018-க்குப் பிறகு, எல்லா பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட்டு, நாங்க நல்லா வியாபாரம் செய்ய ஆரம்பிச்சோம்.

ஆரம்பத்தில ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரைக்கும் டேர்ன் ஓவர் ஆச்சுது. இப்ப வருஷத்துக்கு ரூ.3 கோடி - ரூ.4 கோடி வரைக்கும் டேர்ன்ஓவர் ஆகுது. விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் வரி செலுத்த வேண்டியதும் இல்லை. அதுமட்டும் இல்லாம இந்தத் தொழில் தொடங்க நேஷனல் ஹார்ட்டிகல்ச்சர் போர்டில் இருந்து 40% மானியமும் தர்றாங்க. இப்ப எங்க ஏழு ஏக்கர் நிலம் முழுவதும் ஃபுல் ஆகிடுச்சு. பிசினஸை இன்னும் விரிவுபடுத்த இடம் தேடிக்கிட்டு இருக்கிறோம்” என்றவர், ஆர்க்கிட் தொழில் இன்னும் வளர்ச்சி காணும் என்பதற்கான காரணங்களை அடுக்கினார்.

ஆண்டுக்கு ரூ.4 கோடி டேர்ன்ஓவர்... அழகு செடி விற்பனையில் அசத்தும் குமரி பிசினஸ்மேன்!

30 வருஷத்துக்கு மார்க்கெட்...

“மக்கள் மத்தியில ஆர்க்கிட் செடிக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. பூக்கள் நீண்ட நாள்கள் செடியில் இருக்கும். இது கட் ஃப்ளவர் என்ப தால், நிறைய கலர்ஸ் இருக்குது. அதனால மார்க்கெட்ல தொடர்ந்து டிமாண்ட் இருந்துகிட்டே இருக்கும். எவ்வளவு செடிகள் இருந்தாலும் தொடர்ந்து விற்பனை ஆகிக்கிட்டே இருக்கும். டிரெஸ்ல ஃபேஷன் சேஞ்ச் ஆகிக்கிட்டே இருக்குதே, அதுபோல ஆர்க்கிட்டிலயும் ஒவ்வொரு வருடமும் புதுப்புது வெரைட்டிஸ் மார்க்கெட்ல ரிலீஸ் ஆகிக்கிட்டே இருக்குது. வெளிநாட்டில அதிகமா உற்பத்தி பண்ணிகிட்டே இருக்கிறாங்க. அதனால ஏற்கெனவே வாங்கின கஸ்டமர்களே மீண்டும் புதுவகை செடிகளை வாங்கிக்கிட்டே இருக்கிறாங்க. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஆர்க்கிட்டுக்கு இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்.

ரோஜா செடியைப் போல கட்டிங் மூலமா ஆர்க்கிட் செடியைப் பெருக்க முடியாது. இந்தச் செடியை வளர்த்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒரு கன்றுதான் கிடைக்கும். திசு கல்ச்சர் மூலமாகத்தான் இதை அதிகப்படியாக உற்பத்தி பண்ணுறாங்க. அதனால ஒருமுறை வாங்கின வாடிக்கையாளர்கள் மீண்டும் செடி வாங்க எங்ககிட்டதான் வரணும்.

நர்சரிகளுக்கு மொத்தமா தந்துட்றோம்...

நாங்க நர்சரிகளுக்கு மொத்த விற்பனையாக கொடுக் கிறோம். இறக்குமதி செய்த உடனே அதன் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை இருக்கும். அதை வளர்த்து விற்பனை செய்தால் ரூ.200 முதல் ரூ.250 வரை கிடைக்கும். ஒரு வருடத்தில் 150% விலை அதிகமாகக் கிடைக்கும். பணியாளர் செலவு எல்லாம் போக 20% - 30% லாபம் கிடைக்கும். பெரிய அளவில் பண்ணினால் இன்னும் லாபம் அதிகரிக்கும்” எனக் கூறும் ராமகிருஷ்ணன் ஆர்க்கிட் செடி குறித்த விழிப்புணர்வு கேரளாவில் அதிகமாக உள்ளது என்கிறார்.

எங்களிடம் 300 வகையான செடிகள் உள்ளன. ரூ.70 முதல் ரூ.1,500 வரைக்கும் விலை உள்ள செடிகள் எங்கள் பண்ணையில் உள்ளன. நர்சரியில் சில்லறை விலை எனில், ரூ.250 முதல் ரூ.2,000 வரை விற்கிறார்கள். மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கன்றுகள் விற்பனை ஆகும். அதில் டென்றோபியம் என்ற வகை எளிதில் வளர்க்க முடியும். பெலனோப்ஸிஸ் (phalaenopsis) என்ற பிளான்ட் மிகவும் அழகானது. அதை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய முயற்சி எடுத்து வருகிறோம்.

இப்ப வீட்டில இருக்கிற பெண்கள் ஐந்நூறு, ஆயிரம் சிறிய செடிகளை வாங்கிட்டுப் போறாங்க. அதைப் பெரிதாக வளர்த்து விற்கிறாங்க. அதில அவங்களுக்கு லாபம் கிடைக்குது. பலர் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யுறாங்க. சின்ன அளவுலயும், பெரிய அளவுலயும் நாம இந்த பிசினஸை பண்ணலாம். எப்படி பண்ணினாலும் நாம போட்ட முதலீடு இரண்டு முதல் மூன்று வருடத்தில கிடைத்துவிடும்” என உற்சாகமாகப் பேசி முடித்தார்.