உணவு பொருள்களை விநியோகித்து வரும் ஸொமேட்டோவின் இணை நிறுவனரான தீபிந்தர் கோயல், `இனிமேல் 10 நிமிடங்களுக்குள் மக்களுக்கு உணவு விநியோக்கப்படும்' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார்.
அடுத்த மாதத்திலிருந்து பத்து நிமிடங்களில் உணவு வழங்கும் இந்த புதிய முயற்சி குர்கானில் தொடங்கப்படும். உணவை விரைவாக டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது. தாமதமாக டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது. சாலையில் நேரத்தை நிர்வகிக்க முடியாது என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை சேர்ப்பதற்காக எந்த உயிரையும் ஆபத்தில் விடமுடியாது என தெரிவித்தார்.

இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசியதோடு மட்டுமில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், ``தனது வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடங்களில் உணவை வழங்குவதற்கான ஸொமேட்டோவின் திட்டம் அபத்தமானது. ஸொமேட்டோவுடன் பேரம் பேசும் சக்தி இல்லாத, பணியாளர்கள் அல்லாத மற்றும் எந்த நன்மையும், பாதுகாப்பும் இல்லாத தற்காலிக டெலிவரி ஊழியர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கப் போகிறது" என்று கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசுகையில், ``இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் இது போன்ற நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். எந்தளவு குறைந்த நேரத்தில் பொருட்களை கொண்டு சேர்க்கிறோமோ அந்தளவு அந்த நிறுவனம் மதிப்பிடப்படுகிறது. உணவு, மளிகை பொருட்கள் என 10-13 நிமிடங்களில் வழங்குவதாக இம்மாதிரியான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனங்களில் நியமிக்கப்படும் தற்காலிக டெலிவரி ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை, அதிக எடையை வண்டிகளில் சுமந்து கொண்டு செல்கின்றனர். சொந்த வண்டிகளில் நிறுவனங்களின் வேலையை செய்வதால் இவர்களுக்கு இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் விபத்து நேர்கையில் இழப்பீடு தர மறுக்கின்றன. இது தொழிலாளர்களை பெரும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்த நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்" என பேசினார்.