Published:Updated:

“ஜெர்மனி, ஹாங்காங்கில் எங்க துணிதான்!” ஏற்றுமதியில் கலக்கும் கரூர் இளைஞர்!

அஜய் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
அஜய் பிரசாத்

தொழில்

“ஜெர்மனி, ஹாங்காங்கில் எங்க துணிதான்!” ஏற்றுமதியில் கலக்கும் கரூர் இளைஞர்!

தொழில்

Published:Updated:
அஜய் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
அஜய் பிரசாத்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள முத்துசோழி பாளையத்தைச் சேர்ந்த அஜய் பிரசாத்துக்கு 41 வயது. 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.2,200 சம்பளத்தில் வேலை பார்க்கத் தொடங்கியவர், இன்று சொந்தத் தொழிலில் பல கோடிகளை டேர்ன்ஓவர் செய்கிறார். கரூர் நகரில் இயங்கி வருகிறது, அவரின் ‘இமேஜ் ஸ்டைல்ஸ்’ கம்பெனி. அங்கு பணியில் இருந்த வேலை ஆள்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்த அஜய் பிரசாத்தைச் சந்தித்துப் பேசினோம்.

தொழிலைக் கற்றுக்கொள்ள வேலை...

“ஆரம்பத்துல எங்களுடையது வசதியான குடும்பமெல்லாம் இல்லை. ஊர்ல சொந்தமா 10 ஏக்கர் நிலமிருந்துச்சு. அப்பா, ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருந்தார். வீட்டுல இருந்தவங்க விவசாயத்தைப் பார்த்தாங்க. நானும் விவசாயத்துல அவங்களுக்கு உதவி பண்ணிக் கிட்டே படிச்சேன். பி.எஸ்ஸி படிக்கிறப்ப, ‘படிச்சு முடிச்சதும் ஏதாச்சும் தொழில் பண்ணணும். வேலைக்குப் போகக்கூடாது. இல்லைன்னா, விவசாயத்தைப் பார்க்க வேண்டியதுதான்’னு முடிவு பண்ணி வச்சுருந்தேன். 2001-ம் வருஷம் டிகிரி முடிச்ச டைம்ல, கரூர்ல டெக்ஸ்டைல்ஸ் தொழில் பாப்புலராக ஆரம்பிச்சது. அதனால, அதைப் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா வீட்டுல, ‘அந்தத் தொழிலைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? பெரிய பெரிய முதலைங்க இதுல இருக்காங்க. இதுல, ஈடுபடுற 100 பேர்ல 10% பேர்தான் வெற்றி அடையுறாங்க. உன்னால இதுல ஜெயிக்க முடியாது. பேசாம ஃபைனான்ஸ் மாதிரியான தொழிலைப் பாரு’னு சொன்னாங்க. ஆனா, நான் விடாப்பிடியா இருந்து, அந்தத் தொழிலைக் கத்துக்குறதுக்காக ஒரு டெக்ஸ் டைல்ஸ் கம்பெனியில இரண்டு வருஷம் வேலை பார்த்தேன்.

அஜய் பிரசாத்
அஜய் பிரசாத்

கொசு வலை உற்பத்தி...

காஸ்டிங், தறி ஓட்டுறதுனு சகல விஷயத்தையும் கத்துக்கிட்டேன். ஆனா, கூரியர், வெளிநாடு போறது, சாம்பிள்னு பல விஷயங்கள் இதில் இருப்பதால், அவ்வளவு மூலதனம் என்னால போட முடியாதுனு தோணுச்சு. அதனால, அந்த தொழில் பண்ற எண்ணத்தை அப்போதைக்கு ஒத்திவச்சேன். எங்களுக்கு இருந்த 10 ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப, நண்பர் ஒருவர் பார்ட்ரனாக வர, கொசுவலை உற்பத்தி செய்யும் தொழிலை 2002-ம் ஆண்டு தொடங்கினோம். கொசுவலை உற்பத்தி மட்டுமல்லாம, கொசுவலை கம்பெனிகளுக்குரிய ரா மெட்டீரியல்களை குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்தமா வாங்கி வந்து, இங்குள்ள கொசுவலை கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். கம்பெனி வளர்ச்சிக்காகக் கடுமையா உழைச்சோம். ஒரு வருடம் சிரமமா இருந்தாலும், அடுத்த வருடமே லாபம் தர்ற தொழிலா மாறியது.

வீட்டு உபயோகத் துணி உற்பத்தி...

உடனே, கையில் நாலு காசைப் பார்த்ததும், மனதின் ஒரு மூலையில் முடங்கியிருந்த, டெக்ஸ்டைல்ஸ் தொழில் ஆசை மேலே வந்துச்சு. உடனே, 2004-ம் ஆண்டு ரூ.20 லட்சம் முதலீட்டுடன், ‘இமேஜ் ஸ்டைல்ஸ்’ங்கிற இந்த கம்பெனியைத் தொடங்கினேன். அப்போதும், வீட்டுல எச்சரிச்சாங்க. இருந்தாலும், உறுதியா அந்தத் தொழில்ல இறங்கினேன். கம்பெனி தொடங்கினப்ப, நான்கு ஊழியர்கள் மட்டும் இருந்தாங்க. நாங்க உற்பத்தி செய்யும் வீட்டு உபயோகத் துணிகளை விற்பனை செய்ய ஆன்லைன் மூலமா பையர்களைத் தேடினேன். ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார். அவருக்குத் துணிகளை ரெகுலராக கூரியர் மூலமா அனுப்பிக்கிட்டு இருந்தோம். வருடத்துக்கு ரூ.1 கோடி வரைக்கும் அவர் ஆர்டர் கொடுத்தார்.

இந்தத் தொழில்ல வருமானத்தைப் பெருக்கணும்னா, வெளிநாடுகளில் நடக்கும் ஜவுளி கண்காட்சிகளுக்கு நாம சாம்பிள் துணிகளுடன் போய் கலந்துக்கணும். அங்கே வருபவர் களைக் கவர்ந்து, அவர்களை வாடிக்கையாளர்களா மாற்றணும். இதில், செலவும் ரிஸ்க்கும் அதிகம். அதனால், நஷ்டம் வராத வகையில் தொழிலை மீடியமா நடத்திக்கிட்டு இருந்தேன். கொசுவலை தொழில் வருமானத்தை வச்சு, இந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலை நகர்த்தினேன். இதற்கிடையில், விவசாயத்தையும் விடாம செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

“ஜெர்மனி, ஹாங்காங்கில் எங்க துணிதான்!” ஏற்றுமதியில் கலக்கும் கரூர் இளைஞர்!

ஹாங்காங்குக்குப் போனேன்...

இந்த நிலையில, 2007-ம் ஆண்டு கொசுவலை உற்பத்தித் தொழிலை விட்டுட்டு, டெக்ஸ்டைல்ஸ் தொழில்ல முழுமூச்சா இறங்கினேன். தொழிலை விருத்தி செய்ய நினைச்சு, முதன் முறையாக 2009-ம் ஆண்டு ஹாங்காங்குக்கு ஃபேருக்கு போனேன். நாலரை லட்சம் வரை செலவாச்சு. முதல் முறைங்கிறதால, சாம்பிள் தரத் தெரியாம, துணி டிசைனிங் எப்படிச் செய்றதுனு தெரியாம போனதால, முதல் வருடம் ஆர்டர் கிடைக்கலை. இருந்தாலும், மனம் தளரலை. அங்கே கிடைத்த அனுபவத்தை வச்சு, அங்கே ஸ்டால் போட்டிருந்த சீனர்களின் சாம்பிள் துணிகளைப் பார்த்து பல விஷயங்களைக் கத்துக் கிட்டேன்.

அடுத்த வருடம், தெளிவாக சாம்பிள் துணிகளைக் கொண்டு போனேன். பலரை என் கம்பெனி துணி சாம்பிள்கள் கவர்ந்தாலும், உடனே பையர் கிடைக்கலை. பலரோட விசிட்டிங் கார்டுகளை வாங்கிட்டு வந்து, இங்கிருந்து அவங்ககிட்ட தொடர்ந்து பேசினோம். அதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கிடைச்சார். அதன்பிறகு, ஆர்டர் கிடைக்க, அடுத்தடுத்த வருடம் வருடத்துக்கு மூணு முறை வெளிநாடுகளுக்கு சென்று சாம்பிள் காட்ட, அங்கு நடக்கும் ஜவுளிக் கண்காட்சி களில் கலந்துக்க ஆரம்பிச்சோம். ஹாங்காங், ஜெர்மனியில் நடக்கும் கண்காட்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டோம். வீட்டு உபயோகத் துணிகளைத் தரமாக, நல்ல டிசைன்களில் தயாரிக்க ஆரம்பிச்சோம். அதனால, ஆர்டர் அதிகம் வர ஆரம்பித்தது. இப்ப, வருடத்துக்கு ரூ.10 கோடி டேர்ன் ஓவர் பண்ற அளவுக்கு வளர்ந்திருக் கோம். கடந்த 2020-ம் வருடம் 15 கோடி டேர்ன்ஓவர் செய்தோம். கொரோனா காரணமாகக் கடந்த வருடம் ரூ.10 கோடி மட்டுமே டேர்ன்ஓவர் பண்ண முடிந்தது.

10 வகையான துணிகள்...

எங்க கம்பெனியில, கிச்சன் டவல், ஏப்ரான், கிச்சன் க்ளவ், பெட்ஷீட், பில்லோ கவர், சேர் பேடு, குஷன், டோர் ஸ்டாப்பர், காட்டன் பேக்னு பத்து வகையான வீட்டுஉபயோகத் துணிகளைத் தயாரித்து, ஏற்றுமதி செய்கிறோம். அதற்குரிய மூலப்பொருள்களைக் கரூரில் இருந்தே வாங்கிக்கொள்கிறோம். யார்ன் இங்கேயே வாங்கி, அதை இங்கேயே டையிங் பண்ணி, லூம்ல கொடுத்து பேப்ரிக்கா (துணியாக) தயாரித்து, சொந்தமா ஸ்ட்ரிச்சிங் பண்ணிக்கிறோம்.

இப்ப எங்ககிட்ட 150 ஸ்ட்ரிச்சிங் மெஷின்கள் இருக்கு. மத்த ஜாப் வொர்க்குகளை நாமக்கல், வெள்ளக் கோயில்னு வெளியில் செய்ய கொடுத்து செஞ்சு வாங்கிக்கிறோம். செக்கிங், ஸ்ட்ரிச்சிங், பேக்கிங்னு எல்லாத்துக்கும் தனித்தனி செக்‌ஷன் இருக்கு. எங்கேயும் தப்பு நடக்காம கவனமாகப் பார்த்துக்கிறோம். நூல் விலை ஏற்றம், கொரோனா, வெளி நாடு போக முடியாமை உள்ளிட்ட விஷயங்களால, இப்ப தொழில் கொஞ்சம் டல்லா இருக்கு. ஆனாலும், அதையும் கடந்து ஓடிக்கிட்டு இருக்கிறோம்.ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை தரணும், இந்த தொழில்ல கரூர் மாவட்டத்துலேயே நம்பர் ஒன் இடத்துக்கு வரணும்ங்கிற இலக்கோடு செயல்பட்டுக்கிட்டு இருக்கிறேன்.

“ஜெர்மனி, ஹாங்காங்கில் எங்க துணிதான்!” ஏற்றுமதியில் கலக்கும் கரூர் இளைஞர்!

24 மணி நேரமும் உழைக்கணும்...

தொழில் பண்ணணும், இல்லைன்னா விவசாயத்தைப் பார்ப்போம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். திட்டமிட்டு செயல்பட்டு, கடுமையாக உழைச்சதால விவசாயம், தொழில் என இரண்டிலும் இப்ப வெற்றி பெற்றிருக்கிறேன். அதனால, எனது அடுத்த லட்சியத்திலும் என்னால் ஜெயிக்க முடியும். அதற்காக, 24 மணி நேரமும் உழைச்சுக்கிட்டு இருக்கிறேன்.

2011-ல் ராஜநந்தினியோடு திருமணமாகி, எங்களுக்கு ஒரு மகள் இருக்காங்க. தொழில் தொடங்குறது ஈஸி. ஆனால், அதை சக்சஸ் பண்றது ரொம்ப கஷ்டம். அந்தத் தொழில் பத்தி முதல்ல எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். அடுத்து, ஒரு தொழில் பண்ண இறங்கிட்டா, அதை மட்டுமே பண்ணணும். அதன்பிறகு, ஆரம்பத்துல தொழில்ல வர்ற வருமானத்தை, அந்தத் தொழில் வளர்ச்சிக்காக மட்டுமே இன்வெஸ்ட் பண்ணணும். வேறு விஷயத்தில் போடக் கூடாது. சொல்லிக்கிற மாதிரி லாபம் வர்ற சூழலில், அந்த லாபத்தை வைத்து நிலம், தங்கம் மாதிரியான விஷயங்களில செலவழிக்கலாம். 24 மணி நேரமும் விழிப்புணர்வாகவும், தொழில் குறித்த நுணுக்கங் களையும் கத்துக்கிற ஆர்வத்துடனும் இருக்கணும். அப்பதான், தொழில்ல ஜெயிக்க முடியும். தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் இருந்தால், இங்கு எல்லோரும் தொழில் முனைவோர் தான் பாஸ்” என்று கூறி, புன்னகைக்கிறார். அந்தச் சிரிப்பில், வெற்றிக்கான களிப்பு நிறைந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism