மற்ற எபிசோடுகள்
Published:Updated:

50 வருடப் பாரம்பர்யம்... சைவ உணவுப் பிரியர்கள் தேடிவரும் கரூர் கே.எஸ் மெஸ்!

அமுதா, ராஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதா, ராஜேந்திரன்

நேட்டிவ் பிராண்ட் - 21

கரூரின் இதயப் பகுதியான பேருந்து நிலையத்தையொட்டி, கோவை சாலையில் இயங்கிவரும் கே.எஸ் மெஸ், கரூர் சைவ உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவகம் என்கிறார்கள் கரூர் மக்கள். கடந்த 50 வருடங்களாக இயங்கிவரும் இந்த உணவகத்தின் வெற்றிக் கதையை அதன் நிர்வாகி ராஜேந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“என்னோட மாமனார் செங்கோட கவுண்டர் 1972-ல் சின்னதாக ஆரம்பித்த மெஸ் இது. பல ஹோட்டல்களில் சப்ளையராகப் பணிபுரிந்த அனுபவத்தில், கடனை வாங்கி இந்த மெஸ்ஸை ஆரம்பித்தார். தரமும் சுவையும் இதை கரூர் மக்களின் பிடித்த உணவு ஸ்பாட்டாக மாற்றியது.

நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சுட்டு, 1982 முதல் 1996 வரை கரூர்ல உள்ள ஒரு பெயின்ட் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தேன். மாதச் சம்பளம் ரூ.500. அப்ப இந்த மெஸ்ஸிலதான் தொடர்ந்து அஞ்சு வருஷமா மதிய உணவு சாப்பிட்டேன். மெஸ் ஓனர் என்னப்பத்தி எல்லா விஷயத்தையும் கேட்டுத் தெரிஞ்சிக்குவார். என்னோட உழைப்பையும் குணத்தையும் பார்த்த செங்கோட கவுண்டர் தன்னோட இளைய மகளான அமுதாவை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

அமுதா, ராஜேந்திரன்
அமுதா, ராஜேந்திரன்

இந்த நிலையில், அடுத்த வருடமே என்னோட மாமனார் திடீர்னு ஹார்ட் அட்டாக்குல இறந்துபோயிட்டார். அதற்குப் பிறகு, நான் இந்த மெஸ் பொறுப்பைக் கையில் எடுத்தேன். 2001-க்குப் பிறகு இந்த மெஸ்ஸை 3,000 சதுர அடி அளவுள்ள இடத்துல மாத்த நினைத்து, இப்போ இயங்குற இந்த இடத்துக்குக் கொண்டுவந்தோம்.

என் மாமனார் காலத்துல காலையில இட்லி, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடுனு உணவுப் பட்டியல் இருந்தது. ஆனால், நான் பொறுப்புக்கு வந்த பிறகு, உணவுப் பட்டியலை மாற்றினோம். காலை சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆப்பம், இடியாப்பம், மதியம் மீல்ஸ், வெரைட்டி ரைஸ், இரவு பரோட்டா, சப்பாத்தி, தோசைனு கொடுக்க ஆரம்பித்தோம். அதன்பிறகு, 2001-ல் சைனீஸ் உணவுகள் வெஜ் பிரியாணினு உணவுப் பட்டியலில் புது வெரைட்டிகளைச் சேர்த்தோம். இதுக்கு முன்னாடியே, 1997-ம் வருஷமே, கரூர் ஹோட்டல்களில் முதன் முதலில் காளான் பிரியாணியை அறிமுகப்படுத்தியது, நாங்கதான். இப்பவரைக்கும் நல்லா போற டிஷ்ஷில் அதுவும் ஒண்ணு. ஊட்டியில் ஃப்ரெஷ்ஷா காளான் பர்சேஸ் பண்ணிட்டு வந்து, சூடா, சுவையா சமைச்சு தர்றோம்.

அதேபோல், 2010-க்குப் பிறகு உணவு முறை, பயன்படுத்தும் எண்ணெயால மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுதுனு நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டேன். அதனால நாங்களே தரமான எள், கடலை, தேங்காய்களை வாங்கி, அதைத் தெரிந்தவங்க செக்குல கொடுத்து ஆட்டி, எண்ணெய் ஆக்கி, அதைச் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கினோம். இரண்டு வருடங் களுக்குப் பிறகு, அந்த செக்கு உரிமையாளரே தரமாக எண்ணெயை ஆட்டி எங்களுக்கு தேவைக்கேற்ப ரெகுலராகக் கொடுக்கத் தொடங்கினார். இந்த நிமிடம் வரை, எண்ணெயில் எந்த சமரசமும் பண்ணிக்காம, தரமான எண்ணெயில் உணவுப் பதார்த்தங்களைச் செய்து தருகிறோம். அதே போல, எங்க மெஸ்ல சாப்பிட்றவங்களோட ஆரோக்கியம் முக்கியம் என்கிறதால அஜினோமோட்டோ மாதிரியான சமாச்சாரங்களை நாங்க பயன்படுத்துறதே இல்லை. நம்ம கைப்பக்குவத்துல கொண்டு வர முடியாத சுவையை அஜினோமோட்டோ மூலம் நிச்சயம் கொண்டு வர முடியாது!

2015-க்குப் பிறகு, மக்கள் உடலுக்குத் திடம் சேர்க்குற பாரம்பர்ய உணவுத் தானியங் களில் செய்யப்படும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தினோம். தினை, சாமை, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்யப் பட்ட பொங்கல், தோசை உள்ளிட்ட உணவுகளை காலை நேரத்தில் மட்டும் வழங்கத் தொடங்கினோம்.

ஆரம்பத்துல இருந்தே அதற்கும் மக்களிடம் அமோக வரவேற்பு. இதையும் கரூரில் உள்ள ஹோட்டல்களில் முதலில் அறிமுகப்படுத்தியது நாங்கதான். கொரோனா காலத்துக்குப் பிறகு, இந்த உணவுபத்தி பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக் கிறது. அதனால், சிறுதானிய உணவுப் பட்டியல்ல இட்லி யையும் சேர்த்துத் தரலாம்னு இருக்கிறேன்.

இன்னொரு பக்கம், காலத் துக்கு ஏற்ப மக்களின் உணவுத் தேடலின் வேர் அறிந்து, உணவு களில் அப்டேட்டாக இருக்கவும் தவறவில்லை. 2020-ல் சோயாவை பயன்படுத்தி செய்யப்படுகிற பொறித்த சைவ மீன், சைவ மீன் குழம்பு, சைவ சிக்கன், சைவ மட்டன்னு கொஞ்சம் கொஞ்சமா மசாலாவை மாத்தி மாத்தி பயன்படுத்தி, செஞ்சுக் கொடுத்தோம். கரூர் சைவப் பிரியர்கள், ‘அசைவம் சாப்பிட்ட திருப்தியை எங்களுக்கும் ஏற்படுத்திட்டிங்க. வித்தியாசமான டேஸ்ட்’னு அதையும் ஆரவாரமா ஏத்துக்கிட்டாங்க.

எங்க மாமனார் விதையாக ஆரம்பித்த இந்த மெஸ்ஸை இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க, என்னோட மனைவி அமுதாவின் பங்களிப்பு அபரிமிதமானது. உணவு டேஸ்ட் மாறாமல் பார்த்துக் கொள்வது, வாடிக்கையாளர்களை அக்கறையாகக் கவனித்துக் கொள்வது என நாள் முழுக்க ஹோட்டலை ஒரு சிசிடிவி கேமரா போல தன்னோட கண்ணசை விலேயே வைத்திருக்கிறார்.

எங்க மெஸ்ல சாப்பிட வருபவர்கள் ஹோட்டல்ல சாப்பிடுற உணர்வோட சாப்பிட மாட்டாங்க. தங்களோட வீடுகள்ல சாப்பிடு உரிமையோடதான் எங்க ஹோட்டல்ல சாப்பிடுவாங்க. அந்தத் தரத்தை எங்களுக்கு சொல்லித் தந்தவர் என் மாமனார் தான். நாங்களும் அவர் வழியில், அந்தத் தரத்தை அப்படியே வழங்குகிறோம்.

50 வருடப் பாரம்பர்யம்... சைவ உணவுப் பிரியர்கள் தேடிவரும் கரூர் கே.எஸ் மெஸ்!

எங்க ஹோட்டலுக்கு கடந்த 1992-ம் வருஷத்துல இருந்து ரெகுலரா சாப்பிட வர்ற கஸ்டமர்களே, சுமார் 300 பேர் கிட்ட இருப்பாங்க. தவிர, எங்க ஹோட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்னு 1,000 பேர் வரை இருக்காங்க. அதனால, இங்க சாப்பிட வர்ற ஒவ்வொரு கஸ்ட மரையும் விருந்தினரா நினைத்து, நாங்கள் கவனிக்கிறோம்.

டெக்ஸ்டைல்ஸ், பஸ்பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி, ஃபைனான்ஸ்னு தொழில் சார்ந்த நகரம் என்பதால், வியாபாரம் சார்ந்து கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர்னு பல மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக் கானவங்க கரூர் வர்றாங்க. அவங்கள்ல பெரும்பாலானோர் உணவு சாப்பிட விரும்புவது, எங்க ஹோட்டல்தான் என்பதுல பெருமையா இருக்கு.

பல நல்ல பாரம்பர்ய ஹோட்டல்கள் பண்ற தப்புகள்ல ஒண்ணு, கொஞ்சம் வளர்ந்ததும் சமையல் மாஸ்டர்களை மாத்திடுறதுதான். பணியாளர் களை கரிசனமா பார்த்துக்கிற விஷயத்தில் நாங்க தெளிவா இருந்தோம்.

எங்க ஹோட்டல்ல இப்போ 30 பேர் வரை வேலை பார்க்குறாங்க. இதுல, சமையல் மாஸ்டர்கள்னு பார்த்தா, கடந்த 15 வருஷமா வேலை பார்க்கிற அஞ்சு மாஸ்டர்கள் எங்க ஹோட்டல்ல வேலை பார்க்குறாங்க. எங்க ஹோட்டல்ல வேலை பார்ப்பவங்க, தொழிலாளி மாதிரி பழக மாட்டாங்க; நாங்களும் அவர்கள்கிட்ட ஒரு முதலாளி மாதிரி நடந்துக்க மாட்டோம். அண்ணன், தம்பி, தங்கை, அக்கானு உறவுமுறைபோல பழகுறோம்.

கடந்த 10 வருஷமா என்னோட ஒவ்வொரு பிறந்த நாளையும் ஹோட்டல் ஊழியர்களோடயும், இங்க சாப்பிட வர்ற கஸ்டமர்களோடயும்தான்கொண்டாடுறேன். அப்போ, ஊழியர்கள் எல்லோரும் எனக்கு கிஃப்ட் தருவாங்க. பதிலுக்கு நான் அன்பளிப்பு தருவேன்.

அதே போல, எங்களோட புதிய முயற்சியா ஹோட்டலுக்குள்ளேயே தேன் நெல்லி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், கடலைமிட்டாய், எள் மிட்டாய்னு சிறுவர் களுக்கு நலம்பயக்குற நொறுக்குத்தீனி வகைகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அதற்கும், நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.

அடுத்து, இந்த ஹோட்டலை இன்னும் பெரிய இடத்துல, அதுவும் சொந்த இடத்துல நடத்தணும்னு ஒரு யோசனை இருக்கு. அதுக்கான முயற்சியில் இருக்கிறோம். இன்றைக்கு எந்த பிசினஸ் நிறுவனம்ன்னாலும் ஒரே ஒரு இடத்துல மட்டுமே நடத்தி லாபம் பார்க்க முடியாது. ஒரே ஊர்ல ஒண்ணு, ரெண்டு இடத்துல அல்லது வேறவேற ஊர்ல ஹோட்டல் கிளை தொடங்கி நடத்தி னாத்தான் பெரிய அளவுல பிசினஸை வளர்த்தெடுக்க முடியும். அதனால எங்க ஹோட்டலையும் வேற ஊர்ல தொடங்குற எண்ணமும் எங்களுக்கு வந்திருக்கு.

எங்களோட காலத்துக்குப் பிறகும், இன்னும் நூறு ஆண்டு, நூத்தம்பது ஆண்டுனு இந்த ஹோட்டல் இயங்கணும். இப்போதைக்கு என் மகன் ஐ.டி துறையில் இருந்தாலும், அவர் இந்த பாரம்பர்யத்தைத் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

உணவு பிசினஸ்ல நம்மை நம்பி வர்ற வாடிக்கையாளரைத் திருப்தி பண்ணி அனுப்பினாலே போதும், அவர் வேறு ஒரு ஹோட்டலைத் தேடிப் போக மாட்டார்” என்று பிசினஸ் டிப்ஸ் தந்து முடித்தார் ராஜேந்திரன்!