Published:Updated:

தமிழகத்து பாரம்பர்ய பொருள்கள் ஏற்றுமதியில் கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்

ஸ்டார்ட்அப்

தமிழகத்து பாரம்பர்ய பொருள்கள் ஏற்றுமதியில் கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்

திண்டுக்கல் மற்றும் கரூரைச் சேர்ந்த மூன்று பொறியாளர்கள், ‘நேட்டிவ் ஸ்பெஷல்’ என்ற இவர்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம், தமிழகத்தில் உள்ள 300 பாரம்பர்ய ஸ்நாக்ஸ் மற்றும் இயற்கை பானங்களை 25 நாடுகளில் உள்ள தமிழர்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த பார்த்திபன், பாஸ்கரன், பார்த்திபனின் நண்பரான செல்வக்குமார் என மூன்றுபேரும் சேர்ந்துதான், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

கரூர், வாங்கப்பாளையத்தில் இருக்கிறது இவர்களது அலுவலகம். அங்கே அலுவலகப் பணியில் ‘பிஸி’யாக இருந்தவர்களைச் சந்தித்துப் பேசினோம். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவானது எப்படி என்று சொல்ல ஆரம்பித்தார் பார்த்திபன்.

“எங்களுக்கு விவசாயக் குடும்பம். பெருசா நிலம் இல்லை. அப்பாவுக்கு பழனியில மில் வேலை. குடும்பக் கஷ்டத்தைக் கடந்து, என்னையும், என் தம்பியையும் இன்ஜினீயரிங் படிக்க வச்சார். நான் 2004-ம் வருஷம் ‘ட்ரிபிள் இ’ படிச்சு முடிச்சேன். படிச்சு முடிச்ச உடனேயே சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் ரூ.14,000 சம்பளத்துக்கு வேலை கிடைச்சுச்சு. அந்த கம்பெனியிலேயே 2017-ம் வருஷம் வரைக்கும் வேலை பார்த்தேன். இதற்கிடையில், என் தம்பி பாஸ்கரன், 2007-ம் ஆண்டு இ.சி.இ பொறியியல் கோர்ஸை முடிச்சுட்டு, ஹெச்.பி கம்பெனியில வேலையில ஜாயின்ட் பண்ணினான்.

பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்
பாஸ்கரன், செல்வக்குமார், பார்த்திபன்

இந்த நிலையில, 2009-ம் ஆண்டு எனக்கும், 2011-ம் ஆண்டு என் தம்பிக்கும் திருமணமாச்சு. இந்த சூழல்ல, சென்னையில் வேலை பார்த்து வந்த என்னை, 2010-ம் வருஷத்துக்குப் பிறகு, எங்க கம்பெனியின் அமெரிக்கப் பிரிவுக்கு அனுப்பினாங்க. அங்க தங்கி வேலை பார்த்தப்ப, என்னால அமெரிக்கவாசியா மாற முடியலை.

ஆனால், வேலை நிமித்தமா அமெரிக்காவில தங்கியிருக்கும் பலர், தங்களது நடை உடை பாவனை மட்டுமன்றி, உணவு கலாசாரம், மொழி என எல்லாத்தையும் மாத்திக்கிட்டாங்க. உலக அளவில் உள்ள எல்லா பிராண்ட் பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்தினாங்க. பீட்சா, பர்கர்னு அவங்க உணவு கலாசாரமும் அடியோடு மாறியிருந்தது. தங்களது சிறு பிராயத்தில் இலந்தை வடை, கல்கோணானு சாப்பிட்டு வளர்ந்தவங்க, அவங்களோட குழந்தைகளுக்கு வெளிநாட்டு உணவுகளைப் பழக்கி, அவங்களோட உடம்பை பாழாக்கும் காரியத்தைப் பண்ணினாங்க. ‘நமது பாரம்பர்ய உணவு, நொறுக்குத் தீனிகளின் அருமை தெரியாமல் இருக்காங்களே’னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால், இதே வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு, நமது பாரம்பர்ய பொருள்களைக் கொண்டு சேர்க்க ஏதாச்சும் பண்ணணும்னு தோணுச்சு. உடனே, நானும், என்னோட தம்பியும் சென்னையை அலுவலக மையமா வச்சு, இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 2012-ம் வருஷம் தொடங்குனோம். நமது பாரம்பர்ய பொருள்களை வெளிநாடு வரைக்கும் அனுப்புன முதல் கம்பெனி எங்களோடதுதான். அதன்பிறகுதான், இது ஒரு கேட்டகிரியா மாறுனுச்சு. தமிழ்நாடு அளவுல பிரசித்தியமா விளங்குற பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, வில்லிபுத்தூர் பால்கோவானு 15 வகையான பொருள்களை வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.

தமிழகத்து பாரம்பர்ய பொருள்கள் ஏற்றுமதியில் கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

ரூ.5 லட்சம் மூலதனம் போட்டு, வெப்சைட் ரெடி பண்றது, டிஜிட்டல் விளம்பரம்னு செஞ்சோம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள்ல வாழுற தமிழர்கள்கிட்ட ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. ஆனா, இந்தத் தொழில்ல முன்அனுபவம் இல்லாததுனால, தடுமாற்றம் இருந்துச்சு. வேகமா இந்தத் தொழிலை எடுத்துக்கிட்டுப் போக முடியலை. அதனால, ஒரு ஆளை வேலைக்குப் போட்டு, சென்னையில் 2013-ம் வருஷம் கடை போட்டு, இதே பொருள்களை வாங்கி விற்பனை பண்ணினோம். அதுவும் சரியாகப் போகாததால, இரண்டே வருஷத்துல கடையை இழுத்து மூடிட்டோம்.

உலகம் முழுக்க 5,000 கஸ்டமர்கள் இருந்தாலும், மூணு வருஷம் ஆகியும் சொல்லிக்கிற மாதிரி கம்பெனியில் முன்னேற் றம் இல்லை. அப்போதான், தம்பியோ, நானோ யாரோ ஒருவர் வேலையை விட்டுட்டு, இந்த நிறுவனத்தில் முழுநேரமா இயங்கணும்னு முடிவு பண்ணி னோம். 2016-ம் வருஷம் சென்னை யில ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்கிகிட்டு இருந்த என்னோட தம்பி, தன்னோட வேலையை ராஜினாமா செஞ்சான். அதன் பிறகு, எங்க நிறுவனத்தை கரூர் வாங்கப் பாளையத்துக்கு மாத்தி, அங்கே ரீஸ்டார்ட் பண்ணினோம். அந்த நேரத்துல, எங்களோட கம்பெனியோட பார்ட்னரா, என்னோட நண்பரும், கம்ப் யூட்டர் பொறியியல் படிச்சுட்டு, என்னைப்போல அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தவருமான செல்வக்குமார் சேர்ந்தார். ஆனால், ஆரம்பத்துல என்னைப் போல வேலை பார்த்துக்கிட்டே, கம்பெனி விஷயத்தில் கவனம் செலுத்தினார்.

முதலில், நிறைய முதலீடு செஞ்சு, எங்க நிறுவனத்தோட வெப்சைட்டை அப்டேட்டா மாத்தினோம். டிஜிட்டலில் நிறைய விளம்பரம் செஞ்சோம். எங்க முயற்சியைப் பார்த்த ஒரு முதலீட்டு நிறுவனம், எங்க கம்பெனியில முதலீடு போட் டாங்க. அதனால, எல்லா வகையில் எங்களை மெருகேத்திக் கிட்டோம். என்னோட தம்பி முழு நேரமா கவனம் செலுத்தினார். இதனால, எங்களுக்கு கஸ்டமர்கள் எண்ணிக்கை பெருகி, ஆர்டர் களும் நிறைய வர ஆரம்பிச்சது. அதனால, தம்பி ஒருவனால கம்பெனியைக் கவனிக்க முடியலை. அதன் காரணமாக, 2017-ம் வருஷம் நானும், நண்பர் செல்வக்குமாரும் அமெரிக்காவில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, ஊருக்கு வந்துட்டோம்.

கரூர் வேலாயுதம்பாளையம் ஓட்டுப் பக்கோடா, மதுரை கருப்பட்டி மைசூர்பாகு, நாங்களே தயாரிச்ச சிறுதானிய சத்துமாவு, முருங்கை இலைப் பொடி, தேன் மிட்டாய், இலந்தை வடை, கடலைக் கருப்பட்டி உதிரி, பல்லடம் இஞ்சிச் சாறு, நெல்லிச் சாறுனு 300 வகையான ஸ்நாக்ஸ், இயற்கை பானங்களை வாங்கி வெளிநாடு, வெளி மாநிலங்களில் விற்க ஆரம்பிச்சோம்” என்றார்.

தமிழகத்து பாரம்பர்ய பொருள்கள் ஏற்றுமதியில் கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

அடுத்து பேசினார் செல்வக் குமார். “இன்னொருபக்கம் டெக்னாலஜிவைஸ் அப்டேட் ஆகிகிட்டே இருந்தோம். டெக்னாலஜி பேஸ்ல ஆர்டர், டெலிவரி பண்ணினோம். அதாவது, கஸ்டமர்களின் ஆர்டர் களுக்கு தக்கன பொருள்களை டெக்னாலஜி மூலம் ஆட்டோ மேட்டிக்காக ஆர்டர் செய்யும் வகையில், சிஸ்டமேடிக் செஞ் சோம். இதனால், தேவையில்லாம பொருள்களை அதிக நாள் நாங்க ஸ்டாக் வைக்காத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக, நாங்க வாங்கி விற்கிற பொருள் களில் தரம் முதல் விஷயமாக இருந்ததால, மெள்ள மெள்ள எங்க கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிச்சுச்சு.

இப்ப, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர்னு 25 நாடுகள் மற்றும் நமது நாட்டில் உள்ள அநேக மாநிலங்கள் என 80,000 ரெகுலர் கஸ்டமர்கள் வரை இருக்காங்க. மாசத்துக்கு 10 டன் வரை பொருள்களை வாங்கி விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம். கூரியர், பார்சல் உள்ளிட்ட பல வழிகளில் பொருள்களை கஸ்டமர் களுக்கு, பாதுகாப்பான முறையில் பேக் செஞ்சு, அனுப்பி வைக்கிறோம். எங்கோ கண்காணாத தேசத்தில், குடும்பத் துக்காக வேலை பார்த்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப எங்கோ தூர தேசங்கள்ல வேலைபார்க்கிற தமிழர்களுக்காக, நம்மூர் ஹெல்த்தியான உணவுகளைக் கொண்டு போய் சேர்க்கிறோம்” என்றார் உற்சாகமாக.

தொடர்ந்து பேசினார் பாஸ்கரன். “இந்த ஸ்டார்ட் நிறுவனத்தை நாங்க ஆரம்பிச்சதுக்கு காரணம், பணம் பிரதானம் இல்லை. நமது பாரம்பர்ய பொருள்களை அழியவிடாமல் காக்கணும்ங்கிற சிந்தனைதான் முதல் மோட்டிவ். இன்னும், நிறைய பாரம்பர்ய பொருள்கள் அழியுற நிலையில் இருக்கு. அதையெல்லாம் தேடி கண்டு பிடிச்சு, கடல் தாண்டி வாழும் தமிழர் வீடுகளில் கொண்டு சேர்க்கணும். அந்த லட்சியத்தோட ஓடிக்கிட்டு இருக்கோம். இன்னும் பல பாரம்பர்ய ஸ்நாக்ஸ்களைத் தயாரிக்கும் சிறுசிறு நிறுவனங்களைக் கண்டுபிடித்து, அவர்களின் பொருள்களை உலகத் தமிழர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கணுங்கிறது எங்களோட ஒரே ஆசை’’ என்று பேசி முடித்தார் பாஸ்கரன்.

வித்தியாசமான அணுகுமுறை பிசினஸில் எப்போதும் வெற்றி தரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism