நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஊழியர்களுக்கு நல்லதொரு பரிசு தந்து ஆச்சரியப்பட வைப்பது வளர்ந்துவரும் நிறுவனங்களின் வழக்கமாக மாறியிருக்கிறது. சென்னையில் இருந்து செயல்படும் சாஸ் (SaaS) நிறுவனமான கிஷ்ஃஃப்ளோ தனது ஐந்து ஊழியர்களுக்கு ஐந்து பி.எம்.டபிள்யு கார்களை வழங்கி அவர்களை மட்டுமல்ல, ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
10-ஆம் ஆண்டில் கிஸ்ஃப்ளோ...
`நோகோடு மென்பொருள்’ (Low-code / No-code work management) தயாரிப்பு நிறுவனமான `கிஸ்ஃப்ளோ’ (Kissflow) தனது 10-வது ஆண்டு விழாவில் ஐந்து பிஎம்டபிள்யூ (BMW) கார்களை அந்த நிறுவனத்தில் ஆரம்பித்திலிருந்து பணியாற்றிய தலைமைப் பொறுப்பிலுள்ள ஐந்து பேருக்கு அளித்து அசத்தியுள்ளது.
கிஸ்ஃப்ளோ தனது முதல் `நோகோட்’ மென்பொருளை 2012-ம் ஆண்டு கூகுள் I/O நிகழ்ச்சியில் வெளியிட்டது. அன்று முதல் சுமார் 160 நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியுள்ளது. கிஸ்ஃப்ளோ நிறுவனம் சமீபத்தில் சென்னையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு தங்கள் அலுவலகத்தை மாற்றியது. வேகமாக வளர்ந்துவரும் கிஸ்ஃப்ளோவின் அலுவலகங்கள் சென்னை, துபாய் மற்றும் வட அமெரிக்காவில் சுமார் 400 பேர் கொண்டு இயங்கி வருகிறது.
5 பேருக்கு BMW....
இந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தினேஷ் வரதராஜன் (Chief Product Officer), பிரசன்னா ராஜேந்திரன் (Vice President) , விவேக் மதுரை (Director), ஆதி ராமநாதன் (Director), கெளசிக்ராம் கிருஷ்ணசாயி (Director) உள்ளிட்டோருக்கு கார்களை வழங்கி, திக்குமுக்காட வைத்திருக்கிறது.
மென்பொருள் உலகில் இத்தகையதோர் நிகழ்வு பலரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறது. இதற்கான நிகழ்வு சென்னை, பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Centre IT Park) நடந்தது. முன்னதாக ஐந்து குடும்பங்களுக்கும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநட்சத்திர விடுதியில் மதிய விருந்து...
இந்த ஐந்து பேருக்கும் பி.எம்.டபிள்யூ கார் பரிசளிப்பது தொடர்பான தகவல் நட்சத்திர விடுதியில் மதிய விருந்துக்கு வந்திருந்தபோதுதான் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பி.எம்.டபிள்யு காரைப் பரிசளித்துப் பேசிய கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஒ சுரேஷ் சம்பந்தம், ``இந்திய அளவில் தலைசிறந்த 10 மென்பொருள் சேவையில் ஈடுபட்டுள்ள சாஸ் (SaaS) நிறுவனங்களில் எங்களது கிஸ்ஃப்ளோவும் ஒன்று. கிஸ்ஃப்ளோ தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளை நிறுவனம் சந்தித்திருக்கிறது. இதில் என்னோடு கைகோர்த்து தொடர்ந்து பயணித்த நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பிலுள்ள ஐந்து பேருக்கு 5 பிஎம்டபிள்யூ (BMW) 5 சீரிஸ் 530டி எடிஷன் கார்களை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த ஒவ்வொரு காரின் மதிப்பு தோராயமாக ரூ.1 கோடி. இந்த ஐவரும் கிஸ்ஃப்ளோவின் ஆரம்பத்திலிருந்து பல ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, இந்தப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். அதற்கான சிறிய அன்பளிப்புதான் இது.

இந்த ஐவரும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இதில் ஆதி என்பவருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்குவதை தன்னுடைய வாழ்வின் லட்சியமாகவே வைத்திருந்தார். கார் பரிசளிப்பை இந்த ஐவரிடமும் தெரிவித்தபோது மிகவும் நெகிழ்ந்துபோய்விட்டனர். இந்த அன்பளிப்பை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் தருவதில் எனக்கு பெருமகிழ்ச்சி” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு BMW-ல டூர் போறோம்...
பி.எம்.டபிள்யு காரைப் பெற்றுக்கொண்ட அந்த பேரிடமும் பேசினோம். முதலாவதாக, கிஷ்ஃப்ளோவில் சீஃப் புராடக்ட் ஆபீஸராக இருக்கும் தினேஷ் வரதராஜனுடன் பேசினோம். ``ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கார் எனக்குக் கிடைத்ததைவிட ஆரம்பிக்கும்போது இருந்த அனைவருக்கும் சேர்ந்து கிடைத்தில் இன்னும் இரட்டிப்பு சந்தோஷம். ஒவ்வொரு படியா கடந்து இந்த இடத்துக்கு வந்திருக்கோம். கடந்த ஐந்து வருஷத்துல நாங்க வேகமாக வளர்ந்துகிட்டு வர்றோம். அந்த வளர்ச்சியோட அடையாளமா இந்த ஐந்து காரையும் பார்க்கிறோம். ஏற்கெனவே, வேற ஒரு கார்ல நண்பர்கள் எல்லோருமா சேர்ந்து கும்பகோணம், தஞ்சாவூருக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். இப்போ கார் மாறிடுச்சு” என்ற உற்சாகமாகப் பேசினார்.
அடுத்து, இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்னா ராஜேந்திரனுடன் பேசினோம். ``இன்னிக்கு சுரேஷ் எங்களை விருந்துக்கு கூப்பிட்டுப் போய் ஒருசேர ஐந்து பேருக்கும் கார் பரிசாக தந்தார். இது இந்தியாவில வேற எந்த மென்பொருள் நிறுவனமும் இப்படிப் பண்ணியிருக்குமான்னு எனக்குத் தெரியல. ரொம்ப எக்ஸைட்டாகவும் மகிழ்ச்சியாகவும் த்ரில்லாங்காவும் இருக்கு” என்றார்.
திருநெல்வேலி போறேன்...
அவரைத் தொடர்ந்து விவேக் மதுரையிடம் (Director) கேட்டபோது, ``இதை சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், இந்த காரை நிறுத்தும் அளவுக்கு என் வீட்டில் இடமில்லை. இதற்காக என் வீட்டை இடித்து சிறிது மாற்றம் செய்ய வேண்டும். கார் கிடைத்திருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. காரை எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்டு திருநெல்வேலி வரைக்கும் போலாம்னு இருக்கேன்” என்றார்.
இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆதி ராமநாதன், ``என்னோட வாழ்க்கை லட்சியம் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும்ங்கிறதுதான். அது ரொம்ப நாள் ஆசையா இருந்துச்சு. என்னைக்காவது வாங்கிடுவேன் நினைச்சேன். சுரேஷ் எங்களை கூப்பிட்டப்பே ஏதாவது புரமோஷனாக இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா, என் லட்சிய கார் முன்னால நின்னுக்கிட்டிருந்தது. இதுதான் உங்களுக்கு சுரேஷ் காட்டினப்ப சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டேன்” என்றார் சிரித்தபடி.
வீகன் +BMW
நிறுவனத்தின் இன்னொரு இயக்குநரான கெளசிக்ராம் கிருஷ்ணசாயி, ``அடிப்படையில நான் ஒரு வீகன். பால் புராடக்ட்ஸ்கூட சாப்பிட மாட்டேன். ஆனா, இன்னிக்கு நிறுவனத்தோட முக்கிய பொறுப்புல இருக்கிறவங்கள லஞ்ச்க்குக் கூப்பிட்டாரு. அப்போ அவருக்கிட்ட எனக்கு வீகன் புட் வேணும்னு கேட்டேன். சரி வாங்கன்னு சொன்னார். ஓட்டலுக்குப் போனதும், `உங்களுக்கு வீகன் புட் ஏற்பாடு பண்ணிருக்கேன். அதுக்கு முன்னாடி கொஞ்சம் வெளியே போகலாம் வாங்கன்'னு சொல்லிக்கிட்டே அழைச்சுட்டுப் போனார்.
வெளியே வரிசைய அஞ்சு பி.எம்.டபிள்யூ கார்கள் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுல ஒன்னைக் காட்டி இதுதான் உங்களுக்கு சர்பிரைஸ்ன்னு சொன்னாரு. அதை கேட்டதும் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. சுரேஷ் நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டி சர்பிரைஸ் கொடுப்பாரு. இந்த முறை பாராட்டி, காரு கொடுத்திருக்காரு. இதைப் பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை” என்றவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
``எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்கிற மாதிரி தன் நிறுவனப் பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் சுரேஷ் சம்பந்தம்.