Published:Updated:

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

மலைப்பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
மலைப்பூண்டு

ஜி.ஐ பிசினஸ்

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
மலைப்பூண்டு
பிரீமியம் ஸ்டோரி
மலைப்பூண்டு

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கிரீடம் சூட்டும் வகையில் இருப்பது மலைப்பூண்டு. குஜராத், மகாராஷ்டிரா, ஊட்டி போன்ற இடங்களில் விளைவிக்கப்படும் பூண்டுகளில் எடுக்கப்படும் விதையைக் கொடைக்கானலில் பயன்படுத்த முடியும். ஆனால், கொடைக்கானல் மலைப்பூண்டில் இருந்து விதை எடுத்து பிற இடங்களில் சாகுபடி செய்ய முடியாது என்பதே கொடைக்கானல் மலைப்பூண்டின் மிக முக்கியமான அம்சமாக உள்ளது.

கடல் மட்டத்தில் சுமார் 2000 மீட்டருக்கு மேலே கொடைக்கானல் மேல்மலைப் பகுதி களான கவுஞ்சி, பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, குண்டுப்பட்டி, கூக்கால், வில்பட்டி, கிளாவரை உள்ளிட்ட 36 பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது.

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

மலைப்பகுதியில் உள்ள சீதோஷன நிலை, மண்வளம் உள்ளிட்டவை அதிக மருத்துவ குணம் நிறைந்த பூண்டு கிடைக்க காரணமாக அமைந்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்த கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் உஷாவிடம் பேசினோம்.

‘‘ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டுமெனில், சுமார் 100 ஆண்டு பாரம்பர்யம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களைத் தர வேண்டும். அவ்வாறு பார்க்கையில், மலைப் பூண்டு 1837-ல் கொடைக்கானலில் விளைவிக்கப்பட்ட தற்கான குறிப்புகளை ஆங்கிலேயேர்களே குறிப்பிட்டுள்ளனர்.

பிற இடங்களில் விளையும் பூண்டுக்கு காரத்தன்மை குறைவு; கொடைக்கானல் மலைப்பூண்டுக்குக் காரத்தன்மை அதிகமாகவே இருக்கும். பூண்டின் ஒரு பல்லைக்கூட வெறும்வாயால் சாப்பிட முடியாது. அதேபோல பிற இடங்களில் விளையும் பூண்டைவிட மலைப்பூண்டின் அளவு சிறியதாகவே இருக்கும். நிறத்தில் சிறிது மாற்றம் இருக்கும். வெள்ளையாக இருக்கும் தோலில் பிரவுன், பர்ப்பிள் கலர் லேசாக இருக்கும். மேலும், பதப்படுத்துவதற் காக புகைமூட்டப்படுவதாலும் அதன்மீது லேசாக கருப்பு அடித்திருக்கும்.

இந்தப் பூண்டை பதப்படுத்து வதன் மூலம் 8 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும். பிற வகை பூண்டுகளை இவ்வாறு வைத்திருக்க முடியாது.

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

மனித உடலில் செல்கள் அழியாமல் புத்துணர்வு அளிக்கக்கூடிய தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக மலைப்பூண்டு உள்ளது. மேலும், புற்றுநோய், உடலில் ஏற்படும் அழுத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கும் பூண்டு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், நம் முன்னோர்கள் தலைவலி, வயிற்றுவலி, உடல் வலிக்குத் தேவையான அளவு பூண்டு எடுத்து பால், கருப்பட்டி, மஞ்சள் உள்ளிட்டவற்றைச் சேர்த்து தேவைக்கேற்றாற்போல லேகியம் செய்து மருந்தாகச் சாப்பிட்டுள்ளனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இத்தகையை சிறப்புகளை எடுத்துக் கூறி கடந்த 2019-ல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெற்றோம் என்றார்.

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கத் தலைவர் பால கிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘முதலில் நிலத்தை மாடுகள் கொண்டு உழுதுவிடுவோம். உழவுப் பணிக்காக மட்டுமே ஏக்கருக்கு 5,000 ரூபாய் ஆகும். பிறகு, விதைப்பூண்டு வாங்க வேண்டும். ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ விதைப்பூண்டு தேவை. கிலோ 120 முதல் 200 ரூபாய் வரைக்கும் விதைப் பூண்டுகள் கிடைக்கின்றன. விதை வாங்க முடியாத விவசாயிகள் முன்பண மாகவும், விதைகளையும் பெரியகுளம் வடுகபட்டி கமிஷன் மண்டியில் பெறுகின்றனர். பிறகு, விளைவிக்கும் பொருள்களுக்கு கமிஷன் மண்டியினர் நிர்ண யிக்கும் விலைக்கு ஏற்றவாறு மீதித் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். கொடைக் கானலைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் இந்த முறையில் தான் விவசாயம் செய்கின்றனர்.எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கும் அதே மலைப்பூண்டை அவர்கள் எங்களிடமே அதிக விலைக்கு விற்பார்கள்.

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

உழவுசெய்த நிலத்தில் சாணத்தைப் போட்டு சமன்செய்து கொத்து எடுக்க வேண்டும். அதில் 4 இன்ச் இடைவெளியில் பூண்டுகளை நடுவோம். இதற்கு ஏக்கருக்கு 40 பேர் தேவை. ஒவ்வொருவருக்கும் 250 ரூபாய் கூலி கொடுக்க வேண்டும். கலப்பு உரம் ஏக்கருக்கு 5 மூட்டைகள் தேவைப்படும். ஒரு மூட்டை 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரெயின் குழாய்கள் பதித்தால் ஒரு லட்சம் ரூபாய் செலாகும். 25-வது நாளில் ஒரு களையும், 40-வது நாளில் ஒரு களையும், 60 முதல் 70-வது நாள்களில் ஒரு களையும் எடுக்க வேண்டும். இதற்கு மட்டுமே 10,000 ரூபாய் செலவாகும். இதுபோக இலை பழுப்பு, வேர் அழுகல் உள்ளிட்ட நோய் தாக்குதல்களில் இருந்து பயிரைக் காக்க மருத்துக்கு 10,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி மூட்டைக்கு 15 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அறுவடைக்கு மட்டுமே 25,000 ரூபாய் செலவாகும். இப்படி உழைப்பையும் பணத்தையும் போட்டால், ஒரு ஏக்கருக்கு 2,000 முதல் 4,000 கிலோ வரை பூண்டு எடுக்க முடியும். ஆனால், விளைச்சல் இயற்கையின் கையில்தான் இருக்கிறது. சில நேரம் 2,000 கிலோ கிடைக்கும், சில நேரம் 200 கிலோ மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். இப்படி சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரெயின் குழாய் பாசனம் அமைத்தல் தவிர்த்து, 2 லட்சம் ரூபாய் வரை செய்தால், 2 லட்சம் ரூபாய் வரை லாபம் எடுக்க முடியும்.

மலைக்க வைக்கும் கொடைக்கானல் மலைப்பூண்டு!

பொடி பூண்டு கிலோ 40 ரூபாய், மீடியம் பூண்டு 200 ரூபாய், நல்ல பூண்டு 400 ரூபாய் விலை போனால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனால், அதில் பாதிகூட கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் இன்றி அரசு பூண்டுக்கு விலை நிர்ணயம் செய்து எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது மலைப்பூண்டு விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும், புவிசார் குறியீடு பெற்றும்கூட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, மின்சாரம், மோட்டார், தோட்டக்கலை மானியம் உள்ளிட்டவற்றை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

மருத்துவ குணம் வாய்ந்த மலைப்பூண்டுக்கு உரிய மரியாதை கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism