Published:Updated:

“கோடிகளில் வருமானம் தரும் கொய் ஃபிஷ்..!’ சென்னை இளைஞரின் ஆச்சர்ய வெற்றி

கொய் ஃபிஷ்
பிரீமியம் ஸ்டோரி
கொய் ஃபிஷ்

பிசினஸ்

“கோடிகளில் வருமானம் தரும் கொய் ஃபிஷ்..!’ சென்னை இளைஞரின் ஆச்சர்ய வெற்றி

பிசினஸ்

Published:Updated:
கொய் ஃபிஷ்
பிரீமியம் ஸ்டோரி
கொய் ஃபிஷ்

அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தி வருகிறார் முகமது அஷ்பக் ஷெரிப். ‘கொய் ஃபிஷ்’ எனப்படும் ஜப்பானிய அலங்கார மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார் அஷ்பக். சென்னை புழலில் அமைந்திருக்கும் இவரது மீன் பண்ணையில் பல வண்ணங்களில் பெரிய அளவிலான கொய் மீன்கள் வளர்கின்றன. அவை ஒவ்வொன்றும் சில ஆயிரங்களிலிருந்து பல லட்சம் ரூபாய்க்கு விலைபோவது ஆச்சர்யம். ‘கொய்’ மீன் வளர்ப்பு குறித்து நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அஷ்பக்.

“பிசினஸுக்கான ஐடியா பிடிக்க ரூம் போட்டு யோசிக்க வேண்டியதில்லை. நமக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு விஷயங்களைக்கூட தொழில் வாய்ப்பா மாத்தலாங்கிற யதார்த்தத்தைக் கொய் மீன்கள்தான் எனக்குக் கத்துக் கொடுத்துச்சு” என்று நம்பிக்கை வார்த்தைகளுடன், இந்தத் தொழிலில் தான் வளர்ந்த விதத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“ஸ்கூல் படிக்கும்போது வண்ண மீன்கள் வளர்ப்புல எனக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. இன்டர்நெட்ல அலங்கார மீன்கள் குறித்து அடிக்கடி தேடிகிட்டே இருப்பேன். காலேஜ் படிக்கும்போது ‘கொய் ஃபிஷ்’ பத்தித் தெரிஞ்சு கிட்டு, சென்னை, கொளத்தூர்ல அந்த இனத்துல சில மீன்களை வாங்கினேன். சரியான உணவும் கவனிப்பும் தந்தும்கூட, அவை சரியா வளரலை. அப்புறமா, கொல்கத்தா, மும்பை, மலேசியானு பல இடங்கள்லேருந்து வாங்கின ‘கொய்’ மீன்களும் சரியா வளராததால, தொடர்ந்து ஏமாற்றத்துடன் நஷ்டத்தை எதிர்கொண்டேன். இதுக்கிடையில மாஸ்டர் டிகிரி முடிச்சுட்டு, சென்னையில முன்னணி ஐ.டி நிறுவனத்துல வேலைக்குப் போனேன்.

அஷ்பக்
அஷ்பக்

அந்த நேரத்துல மீன் வளர்ப்புக்கான என் தேடல் இன்னும் அதிகமாகவே, பெரும் முயற்சிக்குப் பிறகு, ஜப்பான்ல இருக்கும் ‘கொய் ஃபிஷ்’ பண்ணைக்கு நேர்ல போனேன். ஒரு மாசம் அங்கேயே தங்கியிருந்து ‘கொய் ஃபிஷ்’ வளர்ப்புக்கான அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சென்னைக்குத் திரும்பியதும் என் வீட்டுல சின்னதா தொட்டி அமைச்சு, ஜப்பான்லேருந்து சில ‘கொய்’ மீன்களை இறக்குமதி செஞ்சு வளர்த்தேன். அப்ப ‘ஆர்க்குட்’ சோஷியல் மீடியா பக்கம் பிரபலமா இருந்ததால, இந்த மீன் வளர்ப்பு பத்தின என் அனுபவங்களை அதுல பதிவிட்டேன். பலரும் என்னைத் தொடர்புகொண்டு விசாரிச்சதுடன், மீன்களையும் வாங்கினாங்க. கிடைச்ச லாபத்துல கூடுதலான மீன்களை வாங்கி வளர்த்தேன்.

ஓரளவுக்கு நம்பிக்கை கிடைச்ச பிறகு, சின்னதா ஷாப் ஆரம்பிச்சேன். தவிர, இந்த மீன் வளர்ப்புக்கான தொட்டி களை (Pond) நாடு முழுக்க பலருக்கும் வடிவமைச்சுத் தந்து, கஸ்டமர் வட்டாரத்தைப் பெருக்கினேன். நான் ஐ.டி வேலையில டீம் ஹெட்டா பெரிய பொறுப்புல இருந்தாலும், பல காரணங்களால அந்த வேலையில மன அழுத்தம் அதிகமாச்சு. ‘கொய் ஃபிஷ்’ வளர்ப்பு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருந்ததால, எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போன இந்த மீன் வளர்ப்பையே பிசினஸா மாத்திக்கலாம் எனத் தீர்க்கமா முடிவெடுத்து, ஐ.டி வேலையிலிருந்து விலகினேன்’’ என்றவர், 2015-ல் கொளத்தூரில் மீன் பண்ணையில் மின் விபத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதை எடுத்துச் சொன்னார்.

“ ‘மீன் வளர்க்கிறேன்னு இருந்த வேலையையும் விட்டுவிட்டு இப்படி நஷ்டப்பட்டு உட்கார்ந்திருக்கியே’னு பலரும் பல விதமா பேசினாங்க. மறுபடியும் ஜப்பான் போய், இன்னும் கூடுதலான அனுபவங்களைத் தெரிஞ்சுகிட்டு வந்ததும், எப்படியாச்சும் ஜெயிச்சே ஆகணுங்கிற வைராக் கியத்துல, எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கத் தயாரானேன். சின்னதும் பெரிசுமா நிறைய ஆர்டர்களை எடுத்தேன். ஜப்பான்ல குறைவான வெப்பநிலையில நல்லா வளரும் இந்த வகை மீன்கள், நம்மூர் வெப்பநிலைக்குத் தாக்கு பிடிக்க முடியாம இறந்து போவதைத் தடுக்கிறது பெரும் சவாலா இருந்துச்சு. பல விதத்துலயும் நிறைய இழப்புகளைத் தாண்டித்தான் இந்த மீன்கள் பத்தின வளர்ப்பு முறையைக் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறமா, நல்ல தண்ணீர் வளம் இருக்கிற புழல் பகுதியில புது யூனிட்டை ஆரம்பிச்சேன். அடிக்கடி தண்ணீர் மாத்துறது, இறக்குமதி செஞ்ச மீன்களைச் சில காலம் தனிமைப்படுத்திய பிறகு, மத்த மீன்களோடு ஒண்ணா விடுறது, வளர்ச்சிக்கு ஏத்தமாதிரி மீன்களைத் தனித்தனி குட்டையில வளர்க்கிறது, சி.சி.டி.வி கேமராக்கள் அமைச்சு எந்நேரமும் மீன்களோட வளர்ச்சியைக் கண்காணிக்கிறதால இப்ப இறப்புகள் ரொம்பவே குறைஞ்சிருக்கு.

பிறந்து அஞ்சு மாதக் குஞ்சுப் பருவத்திலிருந்து சில வயசு வரையிலான மீன்களை மட்டுமே வாங்கி வளர்ப்பேன். கிரேட் பி, கிரேட் ஏ, ஹை குவாலிட்டி, சூப்பர் குவாலிட்டி, ரேர் வெரைட்டினு அஞ்சு விதமான தரத்துல இந்த மீன்கள் வகைப்படுத்தப்படும். எல்லா மீனுக்கும் இறக்குதி செய்யப்படுற ஒரே வகையான உணவுகளைத் தந்தா போதும். முறையான மருத்துவ வசதி களுடன், சரியான முறையில கவனிச்சுக்கிட்டா, இந்த வகை மீன்கள் நூறு வருஷங்களைத் தாண்டியும் வளரும்” என்பவர், சில இன்ச் முதல் மூன்றடி நீளம் வரை 3,000-க்கும் அதிகமான ‘கொய்’ வகை மீன்களைத் தனது பண்ணையில் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தி வளர்க்கிறார். தவிர, சிறிய அளவிலான சாதாரண கோல்டு ஃபிஷ் வகையில் வெளிநாட்டு உயர் ரகங்களை வளர்க்கவும் தனி யூனிட் வைத்திருக்கிறார்.

“கோடிகளில் வருமானம் தரும் கொய் ஃபிஷ்..!’ சென்னை இளைஞரின் ஆச்சர்ய வெற்றி

நம்மிடம் பேசிக்கொண்டே மீன்களுக்கு உணவு கொடுக்கும் அஷ்பக்கின் கரங்களைச் சூழ்ந்து கொண்டு மீன்கள் குதூகலமாக விளையாடின. அதே உற்சாக பிரதிபலிப்புடன் தொடர்ந்தவர், “இதுபோன்ற அலாதியான சந்தோஷத்துக்காகவும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுற தாலயும், பலரும் ‘கொய் ஃபிஷ்’ வளர்ப்புல இறங்குறாங்க. குறிப்பா, லாக்டெளன் நேரத்துல பலரும் வீட்டுலயே முடங்க நேர்ந்ததால, இந்த மீன் பத்தின விவரம் தெரிஞ்சுகிட்டு கொய் மீன்களை வளர்க்க ஆரம்பிச் சாங்க.

ஜப்பான்ல பல ஆயிரம் கோடிகள் வர்த்தகம் நடக்கிற பெரிய வணிகமா ‘கொய் ஃபிஷ்’ வளர்ப்பு இருக்கு. ஆனா, நம்ம நாட்டுல இப்பதான் இந்த மீன்களைப் பத்தின விழிப்புணர்வு மெதுவா விரிவடையுது. ரகத்தைப் பொறுத்து ஒவ்வொரு மீனின் நிறம், அதன் உடல்ல இருக்கிற டிசைன்கள், பளபளப்புத்தன்மை, எடை, நீளம், வயதுனு பல காரணி களைப் பொறுத்து, சில ஆயிரம் முதல் அதிகபட்சமா பல லட்சம் ரூபாய் வரை இந்த மீன்கள் விற்பனையாகுது.

என்கிட்ட 60 வகையான மீன்கள் இருக்கு. இந்தியாவுல வளரும் ‘கொய்’ வகை மீன்களை இனப்பெருக்கம் செய்றதுல பல சவால் இருப்பதால, இனப் பெருக்கம் செய்யாம, வளர்த்து விற்பனை செய்றதுல மட்டுமே கவனம் செலுத்துறேன்” என்று தனது அனுபவங்களை அடுக்கினார் அஷ்பக்.

இந்திய அளவில் ‘கொய்’ வகை மீன் வளர்ப்பைப் பெரிய அளவில் செய்யும் அஷ்பக், பெரும் பணக்காரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரின் நட்பு கிடைத்து, அவர்களின் வீடுகளில் அந்த வகை மீன்களை வளர்க்கும் ஏற்பாடுகளைச் செய்து தந்திருக்்கிறார். ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஆல் ஜப்பான் கொய் ஷோ’ என்கிற பிரபலமான நிகழ்ச்சியில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இதுவரை பெரிதாக வெற்றிகளைப் பெற்றதில்லை. அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சில பிரிவுகளில் தன்னுடைய மீன்களைக் காட்சிப்படுத்தி முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெற்றிருக்கிறார். முறையான அனுபவத்துடன் இந்தத் தொழிலில் கவனம் ஈர்ப்பவர், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அசத்துகிறார்.

“பெருமிதம், ஆசை, பந்தயம்னு வெவ்வேறு காரணங் களுக்காக, குதிரை வளர்ப்புல பலரும் பெரும் தொகையைச் செலவிடுவாங்க. அதுபோலத்தான், இந்த ‘கொய் ஃபிஷ்’ வளர்ப்பும் கொஞ்சம் காஸ்ட்லியானதுதான். இந்த மீன் வளர்ப்புல சுகாதார மேலாண்மை (Hygiene Management) ரொம்பவே முக்கியம். இறக்குமதி செய்றதுக்கான லைசென்ஸ் வாங்கி, சரியான பண்ணையிலிருந்து மீன்களை இறக்குமதி செஞ்சு, நாம வசிக்கும் உள்ளாட்சி அமைப்புகள்ல அனுமதி வாங்கி, இந்த வகை மீன்களை வளர்க்கலாம். உரிய முன்அனுபவம், முறையான கவனிப்பு மற்றும் பராமரிப்பு கொடுத்து, இந்தத் தொழில்லயும் சீரான வளர்ச்சியை வசப்படுத்தலாம்” என்கிற அஷ்பக்கின் தனித்துவமான வெற்றி, தங்களுக்குப் பிடித்த தொழில் துறையில் ஜெயிக்க நினைப்பவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைகிறது.

படங்கள்: ந.கார்த்திக்