Published:Updated:

‘‘இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறக்க வேண்டும்!’’ கோவை பி.எஸ்.ஆரின் லட்சியக் கனவு!

ஜவஹர்
பிரீமியம் ஸ்டோரி
ஜவஹர்

நேட்டிவ் பிராண்ட் - 10

‘‘இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறக்க வேண்டும்!’’ கோவை பி.எஸ்.ஆரின் லட்சியக் கனவு!

நேட்டிவ் பிராண்ட் - 10

Published:Updated:
ஜவஹர்
பிரீமியம் ஸ்டோரி
ஜவஹர்

ஒவ்வோர் ஊரிலும், இன்றைக்கு ஓராயிரம் துணிக்கடைகள் வந்துவிட்டன. ஆனாலும் பண்டிகைகளுக்கும், வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் நமக்குப் பிடித்த கடைகளில் துணி எடுப்பதை பலர் சென்டிமென்டாகவே கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த இருபதாண்டு களாகப் பருத்தி மற்றும் பட்டுப் புடவைகளில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது ‘பி.எஸ்.ஆர் சில்க் சாரீஸ்’ நிறுவனம். இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான சிறப்பு, இந்த நிறுவனத்தில் விற்பனையாகும் அனைத்து புடவைகளின் டிசைன் மற்றும் நிறம். பார்ப்பவர் மனதை அது கிறங்கடித்துவிடும். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கிளையில் உள்ள பி.எஸ்.ஆர் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜவஹரிடம் பேசினோம். பி.எஸ்.ஆர் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனம் வளர்ந்த கதை பற்றி விரிவாக நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

ஜவஹர்
ஜவஹர்

“நாங்கள் பாரம்பர்யமாகவே நெசவுக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குக்கிராமம் தான் எங்கள் பூர்வீகம். அப்பா பி.எஸ்.ரங்கசாமியும் அம்மாவும் சிறிய வயதில் இருந்தே நெசவு செய்துதான் எங்களை வளர்த்தனர். அண்ணா ஜெகதீஸ், 9-வது வரை படித்தார். தரமான ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வியாபாரத்தில் இறங்கினார். அந்தத் தொழிலில் கிடைத்த பணத்தைச் சேமித்த பணத்தில் கூலித் தறிகளை அதிகப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சொந்தத் தறி வாங்கி வியாபாரம் செய்யத் திட்டமிட்டனர்.

1980 வரை எங்கள் குடும்பத்தினர் நெசவுத் தொழில்தான் செய்து வந்தனர். 1980-க்குப் பிறகு கூலித்தறி, 1990-ல் சுமார் 10 சொந்தத் தறிகளை வாங்கி வியாபாரத்தில் இறங்கினோம். எங்கள் வீட்டில் யாரும் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்ததில்லை என்பதால், அப்பா என்னை படிக்க வைத்தார். 1990-க்குப் பிறகு, நகரத்துக்கு இடம்பெயரலாம் என புஞ்சைபுளியம்பட்டிக்குச் சென்றோம். அங்கு ஒரே வருடத்தில் 100 தறிகள் வரை விரிவுபடுத்தினோம்.

கோயம்புத்தூர்தான் எங்கள் மார்க்கெட். இங்கு மொத்த விற்பனைச் சந்தையில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தோம். உள்ளூர் மார்க்கெட்டுடன் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை மாதிரியான பகுதிகளில் உள்ள பெரிய பிராண்ட் கடைகளுக்கு சப்ளை செய்தோம்.

2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காந்திபுரம் கிராஸ்கட் வீதியில் பி.எஸ்.ஆர் சில்க்ஸ் தொடங்கினோம். 400 சதுர அடி, ஒரு காற்றாடி, ஒரு ரேக், ஒரு டேபிள், சாதாரண ஒரு சேர் இதுதான் எங்களது முதல் கடை. இப்போதளவுக்கு, அன்றைய தேதியில் கிராஸ்கட் சாலையில் கடைகள் இல்லை. காந்திபுரம், டவுன்ஸ் போன்ற பல பகுதிகளில் இருந்து பெரிய துணிக்கடைகள், பட்டுப் புடவையில்தான் கவனம் செலுத்தி வந்தன. அதனால் நாங்கள் விதவிதமான பருத்தி புடவைகளில் கவனம் செலுத்தினோம்.

அப்போது நாங்கள் அறிமுகப்படுத்திய பருத்தி புடவைகள், இங்கு வேறு யாரிடமும் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி நிறைய வி.ஐ.பி-க்கள் வரத் தொடங்கினர். கடை தொடங்கப்பட்ட முதல் 45 நாள்களில் சுமார் 5,000 பேர் எங்கள் கடைக்கு வந்திருந்தனர். ‘விலை கொஞ்சம் அதிகமா இருக்கே?’னு மக்கள் கேட்டால் அவர் களிடம் பொருளின் தரத்தைச் சொல்லி விற்கச் சொல்வார் எங்கள் அப்பா. எந்த இடத்திலும் விலையைக் குறைக்கக் கூடாது என்பார். ரகத்தின் தரம், நெசவாளர்களின் வடிவமைப்பு குறித்து புரிந்துகொண்டால், அவர்கள் வேறு எங்கேயும் செல்ல மாட்டார்கள் என்பது அப்பாவின் தீர்க்கமான நம்பிக்கை. இந்த அணுகுமுறை எங்களுக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுத்தது.

மார்க்கெட்டில் கிடைக்காத ரகங்களை வாங்குவதற்காக, இந்தியா முழுவதும் பயணம் செய்து, புதிய ரகங்களைக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு மாநில ரகத்துக்கும், ஒரு ரேக் வைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 400 சதுர அடி, 2,000 சதுர அடி, 8,000 சதுர அடி, 15,000 சதுர அடி எனப் படிப்படியாக விரிவடைந்தது.

இப்போது அந்தக் கடை மட்டும் 20,000 சதுர அடியில் இயங்கி வருகிறது. கோவையில் உள்ள மில் முதலாளிகள்தான் எங்கள் தயாரிப்புகளை முதலில் வாங்கத் தொடங்கினர். பிறகு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். அருகே உள்ள மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் இருந்து வந்த ஒரு வாடிக்கையாளர், ‘பி.எஸ்.ஆருக்கு மங்களூரில் கடை தொடங்க நாங்கள் இடம் கொடுக்கத் தயார்’ என எழுதி வைத்து சென்றுவிட்டார். அதை நாங்கள் ஆலோசனை செய்து பேசியதில் உடன்பாடு ஏற்பட் டது. 2008-ம் ஆண்டு மங்களூரில் ஒரு கிளையைத் திறந்தோம்.

‘‘இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கடைகளைத் திறக்க வேண்டும்!’’ கோவை பி.எஸ்.ஆரின் லட்சியக் கனவு!

அடுத்த ஆண்டே மைசூர், ஈரோடு, பாண்டிச்சேரி பகுதி களில் கிளைகளைத் திறந்தோம். நாங்கள் வளர வளர, எங்களுக்குப் பிறகு வந்த நிறுவனங்களும் கடைகளை விரிவுபடுத்தினார்கள். எங்களுக்கு கார் பார்க்கிங் பிரச்னை யாக இருந்துச்சு. பண்டிகைக் காலத்தில் எங்கள் கடைக்கு வரும் கார்கள் சிக்னல் வரை வரிசையில் நிற்பார்கள். இதையெல்லாம் சரி செய்யும் விதமாகத்தான் 2011-ம் ஆண்டு 100 அடி சாலையில், 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக ஓர் கிளையைத் திறந்தோம். மக்கள் பரபரப்பாக வராமல், பொறுமையாக காரை நிறுத்தி நிதானமாக கடைக்குள் வருகிற மாதிரி அமைத்துள்ளோம்.

இப்போதும் தரமான, புது டிஸைன்களைத் தயாரிப்பது, எந்தெந்த இடத்தில் மக்கள் என்ன மாதிரியான ரகங்களை விரும்பு கிறார்கள் என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள எங்களது பெரிய டீம் வேலை செய்துவருகிறது.

பொதுவாக, ‘பி.எஸ்.ஆர் கடையில் விலை அதிகம்’ என ஒரு பேச்சு இருக்கிறது. அந்தக் காலத்தில் மக்களுக்கு ஒரு பொருளின் தரத்தை ஒப்பிட்டுத் தேர்ந்தெடுக்கும் திறன் குறைவாக இருந்தது. தற்போது மக்கள் அந்தந்த பிராண்டின் தரம் எப்படி இருக்கும், எதனால் விலை அதிகம் என எல்லாற்றையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர். ஒரு சில கடைகளில் நிறைய ஸ்டாக் வைத் திருப்பார்கள். அதுனால் நேரம் வீணாவதுடன், துணியைச் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும். ஆனால், எங்களிடம் 100 புடவை ஸ்டாக் இருந்தாலும் டிஸைன், கலர் காம்பினேஷன் என அனைத்திலும் தரமாக இருக்கும் என்று புரிந்து வைத்து உள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மெனக்கெடல் தான் முக்கியம். மார்க்கெட்டில் வித்தியாசமாக, மக்களுக்குப் பிடித்த மாதிரியான படைப்பு களைத் தயாரிக்கும் இடங்களைத் தேடித் தேடிப் பிடிக்கிறோம். இப்போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்து பொருள்களை வரவழைக் காமல், தொடர்ந்து நிறைய பயணம் செய்துகொண்டேதான் இருக்கோம். நூல் ஒன்றுதான். நாங்கள் கொடுக்கும் அதே தரத்தை மற்ற கடைகளும் நிச்சயம் கொடுக்க முடியும். இங்கு நாம் பயன்படுத்தும் கலர் காம்பி னேஷன் டிசைன்தான் கவனிக்கப்படும். அதைப் பயன் படுத்துவதில்தான் எங்களின் தனித்தன்மை அடங்கியுள்ளது.

பி.எஸ்.ரங்கசாமி
பி.எஸ்.ரங்கசாமி

இப்போது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி என 14 கிளைகள் இருக்கின்றன. அடுத்ததாக மதுரை, நாமக்கல் பகுதிகளில் விரைவில் புதிய கிளைகளைத் திறக்க உள்ளோம். சென்னை, கொச்சி போன்ற பல பகுதிகளில் எங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. சென்னை மிகப் பெரிய பகுதி. பொதுவாக, விளம்பரம் குறைவாகவும், வாடிக்கையாளர்களுக்கு நிறைவான உணர்வையும் தருவதுதான் எங்களது வழக்கம். ஆனால், சென்னையில் விளம்பரம் அதிகம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவுபடுத்தினால் போதும். பெரும்பாலும் அவர்கள்தானே சென்னையில் இருக்கிறார்கள். அவர்களாகவே நம்மை சென்னைக்கு வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கு வார்கள். அப்படி நடந்தால் சென்னையில் ஒரே நாளில் 10 கிளைகள் வரை தொடங்க முடியும். அதை நோக்கித் தான் திட்டமிட்டு பயணித்துவருகிறோம்.

இப்போது சில்க் மற்றும் காட்டன் இரண்டில்தான் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம். கொரோனா வைரஸ்க்குமுன், ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்தோம். இப்போது அது பாதியாகக் குறைந்து விட்டது. முன்பு 800 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றி வந்தனர். தற்போது சுமார் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தொழிலை முன்னின்று நடத்திய அப்பா, இப்போது பின்னணியில் இருந்து எங்களுக்கு ஆலோசனை தந்து வழிகாட்டி வருகிறார். அண்ணன், நான், தம்பி ஆளுக்கு ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டு இயங்கி வருகிறோம். எங்கள் வாரிசுகளும் இதில் வருகிறபோது இன்னும் சிறப்பாகச் செல்ல முடியும். எங்கள் அப்பா கிராமத்தில் இருந்து இங்கு அழைத்து வந்து விரிவுபடுத்தியபோது போல, எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் பி.எஸ்.ஆர் கிளைகளைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஆசை” என்றார் நம்பிக்கையுடன்.

இந்தியா முழுக்க மட்டுமல்ல, உலகம் முழுக்கவுமே செல்லும் இந்த பி.எஸ்.ஆர்..!