Published:Updated:

"டெக்னாலஜி நிறுவனத்தின் சந்தை இந்தியாவுக்கு வெளியேதான் இருக்கிறது!"

டெக்னாலஜி

பிரீமியம் ஸ்டோரி

டெக்னாலஜி நிறுவனங்கள் பெரும்பாலும் பெரு நகரங்கள் அல்லது வெளிநாடுகளில் தான் இருக்கும் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால், கோவையில் ஒரு டெக்னாலஜி நிறுவனத்தை அந்த ஊரின் பெயரிலே (Kovai.co) நடத்துகிறார் சரவணக்குமார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தில் 250 நபர்களுக்குமேல் பணிபுரிகிறார்கள். சொந்த முதலீட்டை மட்டுமே வைத்து முன்னேறிய நிறுவனமாக (Bootstrap) இந்த நிறுவனத்தை எகானமிக் டைம்ஸ் நாளிதழ் சமீபத்தில் தேர்வு செய்து கெளரவித்தது. இந்த நிறுவனம் கோவையில் செயல்பட்டு வந்தாலும், இதன் சி.இ.ஓ சரவணக்குமார் லண்டனில் இருக்கிறார். சில நாள்களுக்கு முன், வீடியோ காலில் அவருடன் நாம் பேசினோம்.

சரவணக்குமார்
சரவணக்குமார்

கோவையில் இருந்து எப்போது லண்டன் சென்றீர்கள், நிறுவனம் தொடங்கும் ஐடியா எப்படிக் கிடைத்தது?

“நான் படித்ததெல்லாம் கோவையில்தான். கோவையில் உள்ள சிறிய ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை செய்யும்போது தொலைதூரக் கல்வி மூலமாக எம்.சி.ஏ படித்தேன். எம்.சி.சி முடித்தவுடன் லண்டனில் வேலை கிடைத்தது. 2000-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். லண்டனில் உள்ள அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் அலுவலகத்தில் வேலை செய்ய அங்கு போனேன். சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு, மைக்ரோசாஃப்ட், அசென்சர், பிடிலிட்டி இன்வெஸ்மென்ட் என அங்கேயே வேலை செய்தேன்.

மைக்ரோசாஃப்ட்டில் பிஸ்சாஃப்ட் என்னும் ஒரு டெக்னாலஜி இருக்கிறது. அதிலேயே 10 ஆண்டுகள் வேலை செய்ததால், அந்த புராடக்ட்டில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை என்னால் தர முடியும் என நினைத்தேன். அதனால் பிஸ்சாஃப்ட் என்னும் புராடக்ட்டை அடிப்படையாக வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவையை வழங்கலாம் எனத் திட்டமிட்டேன்.

அப்போது பிடிலிட்டி நிறுவனத்தில் முழு நேரப் பணியிலிருந்து பகுதி நேரப் பணிக்கு மாறினேன். மூன்று நாள்கள் பிடிலிட்டிக்கு, மீதமுள்ள நாள்கள் புதிய புராடக்ட் உருவாக்க என ஒதுக்கிக்கொண்டேன். புதிய புராடக்ட்டை உருவாக்க 18 மாதங்கள் ஆனது.

2004-ம் ஆண்டு முதல் டெக்னிக்கலாக பிளாக் எழுதினேன். 15,000 வாடிக்கையாளர்கள் அதைப் படித்து வந்தார்கள். நான் ஒரு புதிய புராடக்ட் உருவாக்கி யிருக்கிறேன் என்று எழுதிய வுடன் இரு வாரங்களில் ஹாங்காங்கில் இருந்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். அதைத் தொடர்ந்து ஷெல் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங் களும் வாடிக்கையாளர்களாக மாறின.”

கோவையில் எப்போது தொடங்கினீர்கள்?

“முதல் 35 வாடிக்கையாளர்கள் வரும் வரைக்கும் நிறுவனத்தில் யாரும் கிடையாது. நானே அனைத்து வேலைகளையும் செய்தேன். அதன் பிறகு, எனது வீட்டில் ஒரு அறையை அலுவலகமாக மாற்றி, ஐந்து நபர்களை வேலைக்கு எடுத்தேன். 150 வாடிக்கை யாளர்கள் வரும் வரைக்கும் இதே மாடலில் வேலை செய்தோம். 2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி எங்களுக்கு முழுமையாகத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து தனியாக அலுவலகம் அமைத்து செயல்பட முடிவெடுத்தேன்.

இங்கிலாந்தில் பெரிய அளவில் அலுவலகம் அமைத்து விரிவாக்கம் செய்வது கடினம். அதனால் இந்தியாவில் தொடங்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் எனப் பல இடங்களில் பரிசீலனை செய்தோம். ஆனால், அங்கு ஏற்கெனவே பல நிறுவனங்கள் உள்ளன. கோவையில் ஐ.டி நிறுவனங்கள் குறைவு. குறிப்பாக, புராடக்ட் நிறுவனங்கள் குறைவு. அதனால் கோவையில் தொடங்கினோம்.’’

கோவை டாட் கோ என ஊர் பெயரை நிறுவனத்தின் பெயராக வைக்கக் காரணம் என்ன?

“2017-ம் வரைக்கும் மைக்ரோசாஃப்ட்டை அடிப்படையாக வைத்து புராடக்ட் உருவாக்கினோம். 2018-ம் ஆண்டு சொந்த மாக புராடக்ட் உருவாக்கினோம். நாங்கள் பல புராடக்ட்டு களை உருவாக்கினாலும், குறிப்பிட்ட புராடக்ட்டை அடிப்படையாகக்கொண்டே எங்களை அடையாளம் கண்டனர். அதனால் நிறுவனத்தை முன்னிறுத்த வேண்டும் என முடிவெடுத்து, 2018-ல் கோவை டாட் கோ என மாற்றினோம். தவிர, நிறுவனத்துக்கு பெயர் என்பது ஒன்றுமில்லை. பெயர் சிறியதாக உச்சரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கோவை என்பது தமிழகத்தில் இருப்பவர் களுக்குதான் அது ஊர் பெயர் எனத் தெரியும். வட இந்தியாவில் இருப்பவர்களுக்குக்கூட அப்படித் தெரிய வாய்ப்பில்லை. அப்படி இருக்க, சான் பிரான்சிஸ்கோவில் இருப்பவர்களுக்கு கோவை என்பது ஐந்து எழுத்து உள்ள வார்த்தை, அவ்வளவுதான்.

தவிர, ஒரு நிறுவனம் வளர்ந்துவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் கோவையை மையமாகக் கொண்டு வளரும். கடந்த 18 மாதங்களில் 60 நபர்களில் இருந்து, 240 நபர்கள் உள்ள அலுவலகமாக மாற்றி இருக்கிறோம். புதிய அலுவலகம் போதவில்லை. மேலும், ஓர் அலுவலகத்தைத் தொடங்க இருக்கிறோம்.”

நீங்கள் இந்தியாவில் இல்லாமல் ஏன் லண்டனில் இருக்கிறீர்கள்?

“டெக்னாலஜி நிறுவனத்தின் சந்தை பெரும்பாலும் மேற்கில்தான் இருக்கிறது. அதனால் தலைமை நிலையில் இருப்பவர்கள் அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும். இதுவரை வளர்ந்த நிறுவனங்கள் இப்படித்தான் வளர்ந்துள்ளன. இந்தியாவில் திறமையான பணியாளர்கள் உள்ளனர்; ஆனால், சந்தை மற்றும் வாய்ப்பு இந்தியாவுக்கு வெளியேதான் இருக்கிறது.”

சாஸ் மாடலில் செயல்படுகிறீர்கள். ஒருவேளை ஃபண்டிங் வாங்கி இருந்தால், இதைவிட பெரிய வளர்ச்சி அடைந்திருக்கலாமே?

“நான் டெக்னிக்கல் நபர். நான் மட்டுமே அனைத்தையும் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. அதற்குக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளுக்குமுன் ஃபண்டிங் கிடைத்திருந்தால், தேவை இல்லாமல் செலவு செய்திருப் போம் அல்லது எப்படிச் செலவு செய்வது, எதற்காகச் செலவு செய்வது என்பது புரியாமல் இருந்திருப்போம். இப்போது பெரிய அளவிலான பணம், வாடிக்கையாளர்கள், பணி யாளர்களைக் கையாண்ட அனுபவம் இருக்கிறது.”

இனியும் சொந்த முதலீட்டிலேயே நிறுவனத்தை நடத்துவீர்களா?

“இப்போதைக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பணம் இருக்கிறது. வளர்ச்சிக் கான வாய்ப்பிருக்கும் பட்சத்தில் ஃபண்டிங் பெறுவோம்.’’

2030-ல் யுனிகார்ன் ஸ்டேட்டஸ் அடைவீர்களா?

‘‘இங்கிலாந்தில் ஒரு நிறுவனம் 20 மாதங்களில் யுனிகார்ன் நிலையை அடைந்தது. ஆனால், நாங்கள் பாதுகாப்பான கால அளவை நிர்ணயம் செய்திருக் கிறோம். முதல் பத்து ஆண்டுகள் எங்கள் பயிற்சிக் காலம். இப்போதுதான் எங்கள் முதல் பயணத்தைத் தொடங்குகிறோம். இலக்கை நிச்சயம் அடைவோம்!’’ என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் சரவணக்குமார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு