Published:Updated:

`டாடா நியூ’ சூப்பர் ஆப்... சந்தையின் கதாநாயகன் ஆகுமா?

டாடா நியூ
பிரீமியம் ஸ்டோரி
டாடா நியூ

டெக்னாலஜி

`டாடா நியூ’ சூப்பர் ஆப்... சந்தையின் கதாநாயகன் ஆகுமா?

டெக்னாலஜி

Published:Updated:
டாடா நியூ
பிரீமியம் ஸ்டோரி
டாடா நியூ

கடந்த சில ஆண்டுகளாகப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘டாடா நியூ (Tata Neu)’ என்கிற சூப்பர் செயலியை (super app) கடந்த 7-ம் தேதி முதல் அறிமுகப் படுத்தியிருக்கிறது டாடா குழுமம். காய்கறி முதல் காப்பீடு வரை மக்களின் அனைத்துத் தேவைகளையும் இந்த ஒரு ஆப் மூலம் செய்யும் படியாக இந்த சூப்பர் ஆப் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் பரிசோதனை முயற்சியாக இந்தச் செயலியை யாராவது ஒருவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே அதுவும் டாடா குழுமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் படியாக இருந்தது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். செயலியைத் தரவிறக்கிய பின் மொபைல் எண், ஓ.டி.பி-யை (OTP) உள்ளீடு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

எல்லாச் சேவைகளும் ஒரு குடையின்கீழ்...

இதுவரையில் நாம் மளிகைப் பொருள்கள் வாங்க ஒரு ஆப், பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஒரு ஆப், பணம் செலுத்த ஒரு ஆப், முதலீடு செய்ய ஒரு ஆப் என நமது மொபைல் போன்திரை முழுவதும் செயலிகளால் நிரம்பி இருக்கின்றன. சில பெரிய நிறுவனங்கள் பொருள்களை வாங்குவது, சேவைகளைத் தருவது, நிதி சார்ந்த நடவடிக்கை களையும் மேற்கொள்ள வசதி செய்து தந்தாலும், அந்த நிறுவன ஆப்களை எல்லாம் விஞ்சும் வண்ணம் டாடா நியூ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டாடா குழுமம் உலக அளவில் பல பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருவதும், பல துறைகளில் தனது சேவைகளை வழங்கிவருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. இவை அனைத்தையும் ஒரே தளத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சூப்பர் ஆப்பை டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா டிஜிட்டல் பிரிவு வடிவமைத்திருக்கிறது.

இந்தச் செயலி மூலம் டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களான குரோமா, பிக் பாஸ்கெட், 1 mg, ஏர் ஏசியா, டைட்டன், விஸ்தாரா, டாடா மோட்டார்ஸ், ஏர் இண்டியா போன்றவற்றுடன் மற்ற நிறுவனங்களின் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்குப் பயன்படுத்த முடியும்.

இந்தச் செயலியைக் கொண்டு பணம் செலுத்தலாம், உணவு ஆர்டர் செய்யலாம், முதலீடு செய்யலாம், சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் ஐ.பி.எல் போட்டி களைக் கண்டுகளிக்கலாம் (டாடா நிறுவனம் ஐ.பி.எல் போட்டியின் ஸ்பான்சர்களில் ஒன்று, ஒவ்வொரு முறையும் இதன் மூலம் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் ரிவார்டு பாயின்டுகளும், நியூ காயின்களும் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன், அடுத்த முறை பரிவர்த்தனையில் ஈடுபடும்போது இதைப் பயன் படுத்திப் பொருள்கள் அல்லது சேவைகளைப் பெறலாம்.

ஒரு நியூ காயினின் மதிப்பு ஒரு ரூபாய். பயன்பாட்டாளரின் மின்சாரக் கட்டணம், கேபிள் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், டி.டி.ஹெச் (DTH) கட்டணம் போன்ற பலவிதமான சேவைக் கட்டணங்களை இந்த செயலி யில் இருக்கும் டாடா பே மூலம் செலுத்தலாம். இது யு.பி.ஐ சேவையையும் வழங்குவதுடன் வால்மார்ட்டைச் சார்ந்திருக்கும் போன் பே, கூகுள் பே போன்ற செயலிகளுக்கு கடும் போட்டி யையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`டாடா நியூ’ சூப்பர் ஆப்... சந்தையின் கதாநாயகன் ஆகுமா?

முதலீடு செய்யவும் முடியும்...

முதலீடு செய்யவும், முதலில் பொருளை வாங்கி, பிறகு பணம் செலுத்தும் முறையான ‘பை நவ், பே லேட்டர்’-க்கான (buy now pay later - BNPL) வசதியும், காப்பீடு செய்வதற்கும், தனிநபர் கடன் பெறும் வசதியும், வேறு பல பிரத்யேகமான முதலீட்டுத் திட்ட வசதிகளும் இந்தச் செயலியில் இருக்கிறது.

இதன்மூலம் பயன்பாட் டாளர்கள் கடன் வாங்கும் தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கொள்ள `கிரெடிட் ஸ்கோர்’ வசதியும் உள்ளது. இதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனையில் ஏதேனும் மோசடி நடக்கலாம் என நினைக்கும் பயன் பாட்டாளர்கள் வருடத்துக்கு ரூ.499 செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் வரைக்குமான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்யும் அனைவரும் தொடர்ந்து உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில் விசுவாச வாடிக்கையாளர் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு தடவை பரிவர்த்தனை செய்யும்போது ரிவார்ட் பாயின்ட்ஸ், நியூ காயின் ஆகியவை வரவு வைக்கப்படும். அதை வேறொரு சமயம் செயலி மூலம் பொருள் வாங்கும்போது உபயோகித்துக்கொள்ளலாம்.

சலுகைகள் தரும் நியூ பாஸ் திட்டம்

நியூ பாஸ் (Neu Pass) என்கிற உறுப்பினர் திட்டத் தையும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது உறுப்பினரின் கணக்கில் 5% அளவுக்கு நியூ காயின்ஸ் வரவு வைக்கப்படும். இதை அவர்கள் பயன்படுத்த வேண்டுமெனில், டாடா பே-யைப் பரிவர்த்தனைக்குத் தெரிவு செய்ய வேண்டும். இதன்மூலம் பணம் செலுத்தும்போது கணக்கில் இருப்பில் இருக்கும் நியூ காயின்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சேர்வதற்கான உறுப்பினர் கட்டணம் பின்னர், அறிவிக்கப்படும் எனத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு 70% தள்ளுபடி கொண்ட பல மெகா ஆஃபர்களையும் இந்தச் செயலி அதன் பயன்பாட் டாளர்களுக்கு வழங்குகிறது. தற்சமயம் ஏர் ஏசியாவில் டிக்கெட் புக் செய்பவர்களுக்குக் கட்டணத்தில் 10% தள்ளுபடியும், பிக் பாஸ்கெட்டில் வாங்கும் சில பொருள்களுக்கு 50% வரை தள்ளுபடியும், பயன்படுத்துவர் இருக்கும் இடத்துக்கு அருகிலிருக்கும் தாஜ் ஹோட்டலில் இருந்து உணவு ஆர்டர் செய்து டெலிவரி செய்யும்பட்சத்தில் 50% தள்ளுபடியும், டாடா க்ளிக் கடையிலிருந்து துணிகள் வாங்கினால் அதற்கு 70% வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

‘`பல தெரிவுகள் (choices), தடங்கல் இல்லாத அனுபவம், விசுவாசம் ஆகியவற்றுடன் ‘ஆற்றல்மிக்க டாடா அனுபவ’த்தை வழங்குவதுதான் இந்த செயலியின் மைய நோக்கம்’’ என டாடா சன்ஸின் சேர்மன் சந்திரசேகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘டாடா குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங் களின் மொத்த நுகர்வோர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடி. குழுமத்தின்கீழ் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 2,500, இதனுடைய பல்வேறு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 8 கோடி என இருக்கும் நிலையில், இந்தச் செயலி மிகவும் வித்தியாசமாக நுகர்வோர் களுக்கான தளத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என்று டாடா டிஜிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் பால் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் இ-காமர்ஸ் துறையின் மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மேலும் வளரவும், இந்தத் துறையில் கணிசமான அளவுக்கு சந்தைப் பங்கை டாடா குழுமம் அடையவும் இந்தச் செயலி உதவும். ஆனால், இது சந்தையின் கதாநாயகன் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism