Published:Updated:

ஒரே நாளில் பில்லியனர்..! 'லேட்டன்ட்வியூ' வெங்கட் விஸ்வநாதனின் வெற்றி வியூகம்!

வெங்கட் விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கட் விஸ்வநாதன்

சிறப்புப் பேட்டி

ஒரே நாளில் பில்லியனர் ஆகியிருக்கிறார் ‘லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் வெங்கட் விஸ்வநாதன். ஆனால், அந்த வெற்றிக்குப் பின் 15 ஆண்டுக்கால கடுமையான உழைப்பும் வெற்றி பெற வேண்டும் என்கிற தீராத வேட்கையும் தெளிவாகத் தெரிகிறது.

டேட்டா அனலிடிக்ஸ் மூலம் பிசினஸ் கன்சல்ட்டிங், டேட்டா இன்ஜினீயரிங் சொல் யூஷன்ஸ் உள்ளிட்டவற்றை வங்கித்துறை, தொழில்நுட்பத்துறை, தொழில்துறை, ரீடெய்ல் எனப் பல்வேறு துறை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது இந்த நிறுவனம். அடோப், ஊபர் உட்பட பல ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ சமீபத்தில் அனைவராலும் ஆச்சர்யத்துடன் பார்க்கப் பட்டது. ரூ.600 கோடியைத் திரட்டவந்த இந்த நிறுவனத்துக்கு யாருமே எதிர்பார்க்காத அளவில் ரூ.1.13 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதன் பங்குகள் ரூ.190 - 197 விலையில் ஐ.பி.ஓ வந்து, பங்குச் சந்தையில் பட்டியலான முதல் சில தினங்களிலேயே ரூ.650-க்கு மேல் சென்று, பல முதலீட்டாளர்களுக்கு கொழுத்த லாபத்தைத் தந்தது. வெங்கட் விஸ்வநாதனும் பில்லியனர் ஆனார். இனி அவர் நமக்களித்த பேட்டி...

வெங்கட் விஸ்வநாதன்
வெங்கட் விஸ்வநாதன்

‘‘முதலில், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...’’

‘‘சென்னைதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். என் அப்பா, ஆடிட்டர். சென்னை ஐ.ஐ.டி-யில் சிவில் இன்ஜினீயரிங் முடித்தேன். என்னுடைய பல நண்பர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கப் போனார்கள்.

இந்தியாவில் அப்போது பொருளாதார மாற்றங்கள் பல நடந்த சமயம். இந்தியாவில் வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையில் நான் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. ஐ.ஐ.எம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ படித்தேன்.

தற்போது இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக உள்ள ராஜன் சேதுராமனும், நிறுவனத்தின் இணை நிறுவனரும், என் மனைவியுமான பிரமாத் ஜந்த்யாலாவையும் அங்குதான் சந்திந்தேன். முதலில், என்னுடைய கரியர் ஆரம்பித்தது கிரெடிட் ஏஜென்சி நிறுவனமான இக்ராவில்தான். அங்கு சீனியர் கன்சல்டன்டாக இருந்து, பின்னர் காக்னிசன்ட் நிறுவனத்துக்கு மாறினேன். இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறை புரட்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயம் அது. ‘எங்களிடம் கோடிங் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். வாடிக்கையாளர் களிடம் பேசி டீலை முடிக்க ஆட்கள் தேவை’ என்று காக்னிசன்ட் சொன்னது. அப்போது எனக்கு என்னுடைய எம்.பி.ஏ டிகிரி உதவியது.

அங்கு ஆறு ஆண்டுகள் பணி செய்ததன் மூலம் ஐடி துறையையும், வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றியும் நல்ல அனுபவம் கிடைத்தது. சர்வதேச நாடுகளுக்குப் பயணித்து வாடிக்கையாளர்களைச் சந்தித்த அனுபவமும் சேர்ந்து எனக்குள் இருந்த தொழில் முனைவோரை வெளிக்கொண்டு வந்தது. ‘லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ்’ அப்படித்தான் ஆரம்பித்தது. சர்வதேச சந்தைகளில் தொழிலை எப்படிப் பிடிப்பது என்பதற்கான வழியை ஏற்கெனவே காக்னிசன்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருந்தன. நாங்கள் எங்களுடைய பிசினஸ் கஸ்டமர்ஸ், மார்க்கெட்டிங் தலைமை, ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம்.’’

‘‘2006-ல் நிறுவனத்தைத் தொடங்கினீர்கள். சர்வதேச வாடிக்கையாளர்களின் ஒப்பந்தத்தை எப்படிப் பெற்றீர்கள்?’’

‘‘பொதுவாகவே, ஒரு வாடிக்கையாளரிடம் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது சாதாரண விஷயமல்ல. போட்டி அதிகமுள்ள சூழலில் அவர்கள் நம் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான வலுவான காரணங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். எந்தவொரு வாடிக்கையாளரையும் ஓரிரு சந்திப்புகளில் வென்றுவிட முடியாது. குறைந்தபட்சம் ஆறு முறை சந்திக்க வேண்டும். அதற்குப் பொறுமையும் விடாமுயற்சியும் முக்கியம். விடாமுயற்சியைத் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை. 2008-க்குப் பிறகு, அமெரிக்காவில் பெரும் நெருக்கடி இருந்தது. அத்தகைய சூழலில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் முயற்சி செய்ததன் மூலம்தான் 2010-ல் இரண்டு பெரிய அமெரிக்க நிறுவனங்களின் ஒப்பந்தத்தை வெல்ல முடிந்தது. அப்போது வாரக் கணக்கில் அமெரிக்கா விலேயே தங்கியிருந்தேன்.’’

‘‘உங்கள் நிறுவனப் பங்கை ஐ.பி.ஓ மூலம் வெளியிட்டு நிதி திரட்டியதன் மூலம் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. ஒரே நாளில் நீங்கள் பில்லியனர் ஆனது பற்றி...’’

‘‘எல்லோரும் நினைப்பது போல, இது ஓவர்நைட்டில் கிடைத்த வெற்றி அல்ல. இதன் பின்னால் 15 வருட உழைப்பும் விடாமுயற்சியும் இருக்கிறது. இப்போதுதான் டேட்டா அனலிடிக்ஸ், டேட்டா மைனிங், பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், ஏஐ போன்றவற்றைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் தெரிகிறது. நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் டேட்டா அனாலிடிக்ஸ் என்றால் என்ன, அதை வைத்து பிசினஸை எப்படி பெருக்க முடியும், புதிய வாய்ப்புகளை எப்படி அடையாளம் காண முடியும் என்பது பற்றியெல்லாம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விளக்கம் தர வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொருவருக்கும் புரிய வைத்து வாடிக்கையாளர்களைச் சேர்த்து இந்த நிறுவனத்தை இந்தத் துறையில் வலுவான முன்னணி நிறுவனமாக உருவாக்கி இருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டு மென்றால், ஐ.பி.ஓ மூலம் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

இப்போது மட்டுமல்ல, 2006-ல் இந்த நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கியபோதுகூட இவ்வளவு பெரிய உயரத்தை எட்டுவோம் என்று எதிர் பார்ப்பும் இல்லை. தவிர, இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு வெளியிலிருந்து ஒரு ரூபாய்கூட நிதி தேவைப் படவே இல்லை. லாபகரமான தாகத் தொழிலைச் செய்வதற் கான எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்து கொண்டிருந் ததால் எங்களுக்கு நிதித் திரட்ட வேண்டிய தேவையே ஏற்படவில்லை.’’

ஒரே நாளில் பில்லியனர்..! 'லேட்டன்ட்வியூ' வெங்கட் விஸ்வநாதனின் வெற்றி வியூகம்!

‘‘இத்தனை ஆண்டுகளாகக் கடன் வாங்காமல், நிறுவனத்தை லாபகரமாக நடத்த எப்படி முடிந்தது?’’

‘‘எங்கள் பிசினஸ் எதிர்காலத் துக்கான தொழில்நுட்பங்களைச் சார்ந்ததாக இருந்தாலும், நிறுவனத்தை லாபகரமானதாக நிர்வகிப்பதில், தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதில் எப்போதுமே பாரம்பர்யக் கொள்கைகளையே கடைப்பிடிக்கிறேன். எல்லா வற்றையும் எச்சரிக்கையுடன், லாப நஷ்டங்களைப் பார்த்து கணக்கிட்டு செயல்படுத்தும் போக்கு என்னிடம் உண்டு. இது நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்ததன் காரணமாகக்கூட இருக்கலாம். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது. தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டவும், லாபத்தை மீண்டும் பிசினஸுக்குள் முதலீடாக பாய்ச்சுவதும்தான் என் பாலிசி. எனவே, போதுமான நிதி எப்போதும் கைவசம் இருந்தது. இப்போதும்கூட நிதி திரட்டும் வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தவே திட்ட மிட்டுள்ளோம். ஐ.பி.ஓ மூலம் திரட்டப்பட்ட நிதியில் 80% நிறுவனத்துக்குள்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.’’

‘‘உங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்க, உங்கள் நிறுவனத்தின் தலைமை யிடத்தை சென்னையில் வைத்திருக்கிறீர்களே...’’

‘‘அமெரிக்காவிலிருந்து பெரும் பான்மை வருமானம் வந்தாலும், இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கான விதையை இங்குதான் நட்டிருக் கிறோம். தவிர, இந்தியா விலிருந்துதான் திறமையானவர் களை அமெரிக்க நிறுவனங்களே வேலைக்கு அமர்த்துகின்றன. திறமையானவர்கள் இங்கிருக்க அமெரிக்காவில் தலைமையகத்தை எதற்காக அமைக்க வேண்டும்? தொழில் தேவைகளுக்காக அங்கும் எங்களுக்கு அலுவலகங்கள் உள்ளன. ஆனால், தலைமையகம் இங்குதான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். இந்தியாவில் கோலோச்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து ஒரு பன்னாட்டு நிறுவனம் என்ற நிலையை அடைவது பெருமை இல்லையா? அமெரிக்க நிறுவனங் களுக்கு சேவை வழங்கும் ஒரு நிறுவனம் இந்தியாவில் தென் தமிழகத்தில் சென்னையில் இருப்பது எங்கள் நிறுவனத் துக்குப் பெருமை.’’

‘‘உங்கள் நிறுவன ஊழியர்கள் நீண்ட காலம் உங்கள் நிறுவனத்திலேயே பணி செய்வதாகச் சொல்கிறார்களே..!’’

‘‘மனித மதிப்பீடுகள் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவன் நான். என்னதான் ஐடியா இருந்தாலும், நிதி இருந்தாலும், ஒரு நிறுவனமாக பல தசாப்தங்கள் தாண்டி துறையில் வெற்றியாளராகத் தொடர்வதற்குத் திறமையான, நம்பிக்கை யான மனிதவளம் முக்கியம். கடைசிவரை நீங்களே எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்க முடியாது. ஒருகட்டத்தில் அடுத்தவருக்கு வழிவிட்டு நிறுவனத்தை வழிநடத்தினால்தான் புதிய வாய்ப்புகளை, புதிய கதவுகளைத் திறக்க முடியும். ஆனால், தன் சொந்த நிறுவனமாகக் கருதி உழைக்கும் நிர்வாகத் திறமை உள்ள குழுவை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. எங்களுடைய நிறுவனத்தில் எல்லோருடைய ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் செவிசாய்ப்போம். அது தேறுமா, தேறாதா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். போகிற போக்கில் ஒருவர் சொல்கிற ஐடியா, யோசனை எப்போது வேண்டு மானாலும் ஒரு மேஜிக்கை நிகழ்த்திவிடும். அதுதான் இத்தனை ஆண்டுகள் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவர காரணமாக இருக்கிறது.’’

‘The best way to predict the future is to invent it’ என்று தனக்குப் பின்னால் உள்ள சுவரில் எழுதி வைத்திருக்கிறார் வெங்கட் விஸ்வநாதன். அதுதான் அவர் வெற்றிக்கான காரணம்!