Published:Updated:

தொழிலாளி to முதலாளி... லாப்ஸ்டர் ஏற்றுமதியில் கலக்கும் காசிமேடு பிசினஸ்மேன்!

பீட்டர்
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர்

ஏற்றுமதி

தொழிலாளி to முதலாளி... லாப்ஸ்டர் ஏற்றுமதியில் கலக்கும் காசிமேடு பிசினஸ்மேன்!

ஏற்றுமதி

Published:Updated:
பீட்டர்
பிரீமியம் ஸ்டோரி
பீட்டர்

கூட்டுப் புழுவாகவே இருந்துவிடாமல், உரிய நேரத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களே வெற்றியாளர்களாக மாறு கிறார்கள். அதற்கு, சென்னை காசிமேட்டைச் சேர்ந்த பீட்டர் ஓர் உதாரணம்.

வறுமை, பள்ளிக்குச் செல்லவிடாமல் பீட்டரை பால்ய பருவத்திலேயே வேலைக்குத் துரத்தியது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், கடல் உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் ஊழியராகச் சேர்ந்தார். சில ஆண்டுகளிலேயே ஓரளவுக்குத் தொழில் அனுபவங்களைக் கற்றுக்கொண்டவர், ஒருகட்டத்தில் தனியாகத் தொழில் ஆரம்பித்து முதலாளியாக அடுத்த கட்டத்துக்குச் சென்றார். கடந்த 15 ஆண்டுகளாக, லாப்ஸ்டர் (Lobster) மற்றும் உணவுக்கான சங்கை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பீட்டர், இந்தத் தொழிலில் கவனிக்கத்தக்க தொழில்முனைவோராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.

காசிமேடு பழைய துறைமுகத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது இவரின் ‘Jansi sea food export’ நிறுவனம். மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த கடல் சங்கை ஏற்றுமதி செய்யும் பணிகளை விரைந்து முடித்துவிட்டு வந்த பீட்டர், தொட்டியில் விளையாடிக்கொண்டிருந்த சில லாப்ஸ்டர்களைப் பிடித்து நம்மிடம் காட்டியவாறே, இந்தத் தொழிலில் வெற்றிகண்ட அனுபவத்தைப் பகிர ஆரம்பித்தார்...

பீட்டர்
பீட்டர்

“ஆரம்பத்துல நான் வேலை செஞ்ச நிறுவனத்துல என்கூட வேலை செஞ்ச ரெண்டு நண்பர்களுடன் சேர்ந்து, 22 வயசுல தனியா தொழில் ஆரம்பிச்சேன். அப்போ நாங்க மூணு பேரும் தலா 30,000 ரூபாய்தான் முதலீடு போட்டோம். நம்மூர் மேற்கத்திய உணவகங் கள்ல மட்டும்தான் லாப்ஸ்டர் விற்பனை செய்யப்படுது. ஆனா, சாமானியர்களுக்கு இந்தக் கடல் உணவு இன்னும் பரிச்சயமாகலை. 30 வருஷங்களுக்கு முன்பு, லாப்ஸ்டரைப் பத்தி பெரும்பாலானோருக்கும் தெரியாது. கடல்ல வளரக்கூடிய ஒருவிதமான பூச்சினுகூட இதைச் சொல்வாங்க.

இறால் குடும்பத்தைச் சேர்ந்த இந்த உயிரினத்துக்கு, வெளிநாடுகள்ல அப்பவே பெரிய வரவேற்பு இருந்துச்சு. அதனால, லாப்ஸ்டர் விற்பனையில நாங்க கூடுதல் கவனம் செலுத்தினோம். அதிக அளவிலான லாப்ஸ்டருடன், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இறால் மற்றும் மீன்களையும் விற்பனை செஞ்சோம்.

ஒரு கட்டத்துல நாங்க மூணு பேரும் தனித் தனியே பிரிஞ்சுட்டோம். மூணு லட்சம் ரூபாய் முதலீட்டுல வாடகைக்குக் கடை எடுத்து தனியா தொழில் ஆரம்பிச்சேன். மீனவர்கள்கிட்ட லாப்ஸ்டரைக் கொள்முதல் செஞ்சு, ஏற்றுமதி யாளர்களுக்கு டிரேடிங் பண்ணிகிட்டிருந்தேன். இப்படியே சில வருஷங்கள் ஓடுச்சு. தொழில்ல வெளிப்படைத்தன்மையுடன், பண விஷயத்துல நாணயமா இருந்ததால, என்கிட்ட லாப்ஸ்டர் வாங்கிக்கிட்டிருந்த நிறுவனத்துக்கு என்மேல நல்ல மதிப்பு இருந்துச்சு. ஹாங்காங்கைச் சேர்ந்த அவங்களோட வாடிக்கையாளர் நிறுவனத்துடன், எனக்கு நட்பை உருவாக்கிக் கொடுத்தாங்க” என நேர்மை மற்றும் நாணயத்துக்கான பலனைப் பெற்று தொழிலில் சிறகை விரிக்க ஆரம்பித்த கதையைச் சொன்ன பீட்டர், 2007 முதல் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகிறார்.

தொழிலாளி to முதலாளி... லாப்ஸ்டர் ஏற்றுமதியில் கலக்கும்
காசிமேடு பிசினஸ்மேன்!

கடலில் உள்ள பாறை இடுக்குகளில் வளரும் லாப்ஸ்டர்கள், மீனவர்களின் வலையில் மீன்களைப் போல அதிக அளவில் பிடிபடாது. வரத்து குறைவாக இருப்பதால், இதற்கான வரவேற்பு உள்ளூர் முதல் உலக அளவில் அதிகமாக இருக்கிறது.

லாப்ஸ்டரை ஏற்றுமதி செய் யும் நடைமுறைகள் குறித்து விவரித்த பீட்டர், “மீனவர்கள் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்ததுமே லாப்ஸ்டரைத் தொட்டியில சேர்த்துவிடுவோம். இதுக்காக அலை அதிகமா இருக்கிற இடத்துல தூய்மையான கடல்நீரைச் சேகரிச்சுக்கொண்டு வந்து, அந்த நீர்லதான் லாப் ஸ்டரை வளர்ப்போம். தண்ணீர் சரியில்லைனா, லாப்ஸ்டர் இறந்துடும்.

சில தினங்களுக்கு வச்சிருந்து வளர்க்க ஏதுவா, தொட்டியில கெட்டியான பிடிமானத்துக்கு ஏத்த மாதிரி சொரசொரப்பான இடுக்குகள் மாதிரி அமைச்சிருக் கோம். சூழலைப் பொறுத்து இந்தத் தொட்டியில அதிக பட்சமா அஞ்சு தினங்கள் வரை லாப்ஸ்டரை வளர்த்துட்டு விற்பனை பண்ணிடுவோம்.

பொதுவா, ஒரு ஷிப்மென்ட் டுக்கு 100 கிலோவுக்குக் குறையாம தான் லாப்ஸ்டரை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச புதுசுல, வாரத்துல ரெண்டு ஷிப்மென்ட் அளவுக்கு ஏற்றுமதி செஞ்சு கிட்டிருந்தேன். அப்போ தொழில் இன்னும் சிறப்பா இருந்துச்சு. இப்போ லாப்ஸ்டர் கிடைக்கிறது ரொம்பவே குறைஞ்சுடுச்சு. மீனவர்கள்கிட்ட இருந்து லாப்ஸ்டரைக் கொள்முதல் செஞ்சு, தினமும் 10 கிலோ எடை அளவுல பிற ஏற்றுமதி நிறுவனங்களுக்கு டிரேடிங் பண்ணிட்டு இருக்கேன். அதே சமயம், வாரத்துக்கு ஒருமுறை மட்டும் 100 - 200 கிலோ அளவு லாப்ஸ்டரை ஒரு ஷிப்மென்ட் மட்டும் ஏற்றுமதி பண்றேன். அவை ஹாங்காங் மற்றும் சீனாவுக்குப் போகுது.

லாப்ஸ்டர் ஏற்றுமதியில பல்வேறு வழிமுறைகள் இருக்கு. லாப்ஸ்டரை மயக்க நிலையில உறங்க வச்சுதான் பார்சல் பண்ணுவோம். அவை அடுத்த 36 மணி நேரத்துக்குள் கண் முழிக்கும். அதுக்கு முன்னதாவே லாப்ஸ்டர் உரிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து, உடனே தொட்டியில சேர்த்துடணும். இதுல ஏதாச்சும் சிக்கல் ஏற்பட்டா, லாப்ஸ்டர் உயிரிழந்து இழப்புகள் நேரிடும். தவிர, ஏற்றுமதிக்குப் போகும் ஒவ்வொரு லாப்ஸ்டரும் குறைந்த பட்சம் 220 கிராம் எடையில இருக்கணும். அதுக்குக் குறைவான எடை கொண்ட லாப்ஸ்டரைத் தூத்துக்குடியில இருக்கிற சில நிறுவனங்களுக்கு வித்திடுவோம். அங்கே, தனி யூனிட்டுல தீவனம் கொடுத்து லாப்ஸ்டர்களைக் கூண்டுல வளர்த்து, உரிய எடை வந்ததும் விற்பனை பண்ணிடுவாங்க.

இந்த முறையில லாப்ஸ்டர் 100 கிராம் எடை கூடுவதற்கு ஒரு வருஷம் வரைகூட ஆகலாம். அதனால, பண்ணையில இறால் வளர்க்கிற மாதிரி லாப்ஸ்டரைக் குஞ்சுப் பருவத்துல இருந்தே வளர்த்து விற்பனை செய்றது மட்டும் சாத்தியமில்லாத தொழில்.

லாப்ஸ்டரை அதிகமா சாப் பிட்டா உடல்ல உஷ்ணம் அதிக மாயிடும். அதனால, குளிர்பிரதேச நாடுகள்லதான் இதுக்கு வரவேற்பு அதிகமா இருக்கு அங்கதான் இதுக்கான விலையும் நிர்ணயிக்கப்படுது. உற்பத்தியும் வரத்தும் குறைவா இருக்கிறதால லாப்ஸ்டரின் விலை ஏறுமுகத்துல இருக்குது. உயிர் எடையுடன் ஒரு கிலோ லாப்ஸ்டர் நம்மூர்ல 1,600 ரூபாய் விலை போகுது” என்று சொல்லும் பீட்டர், உணவுத் தேவைக்கான கடல் சங்கை (புறா முட்டை சங்கு) தினமும் 500 – 1,500 கிலோ அளவுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

தொழிலாளி to முதலாளி... லாப்ஸ்டர் ஏற்றுமதியில் கலக்கும்
காசிமேடு பிசினஸ்மேன்!

“மீனவர்கள்கிட்ட வாங்கிக்கிட்டு வந்ததும் தரம் பிரிச்சு, நீர்ல கழுவி சில மணி நேரத்துல இந்த சங்கை ஏற்றுமதி செய்யணும். குளிர்பிரதேச நாட்டினர்தான் இதையும் விரும்பிச் சாப்பிடுறாங்க. அங்க போய்ச் சேர்ந்ததும் உடனே இதைச் சமைச்சுடுவாங்க. கடல் உணவுகள்ல விலை குறைவானது இந்த சங்குதான்.

நம்மூர்ல கிலோ 130 ரூபாய்க்கு இது விற்பனையாகுது. இப்போதைக்கு லாப்ஸ்டர் மற்றும் சங்குகளை மட்டும்தான் ஏற்றுமதி செய்றேன். மத்தபடி நண்டு, இறால் மற்றும் பல வகையான மீன்களை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு டிரேடிங் செய்றேன். இந்த வேலைகளை எல்லாம் உடனுக்குடன் செஞ்சு முடிச்சுடுறதால குறைந்த அளவிலான இடப்பரப்பே போதுமானதா இருக்கு. அதனால, பெரிசா செலவுகள் இல்லாம, குறைவான பணியாளர்களுடன் செலவுகளைக் கட்டுக்குள் வச்சுக்கிறேன்” எனத் தொழில் நுணுக்கம் பகிரும் பீட்டர், ஆண்டுக்கு ரூ.3 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறார்.

“கடல் அலைகளைப்போல அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்ட தொழில் இது. ஆனாலும், உரிய வழிமுறைகளுடன் இந்தத் தொழிலைச் செய்றவங்க நிச்சயமா ஜெயிக்க முடியும். அனுபவத்தைக் கத்துக்கிற அளவுக்கு, லாப்ஸ்டர் தொழில்ல வெற்றியோட ஆழத்தைப் பார்க்கலாம். பிசினஸ் உட்பட எல்லா வேலையிலயும், சாதக பாதக விஷயங்கள் ஒவ்வொருத் தரோட பார்வைக்கும் மாறுபடும். ஆனா, நாம சரியான வழியில பயணிச்சா, வெற்றிக்கான இலக்கை அடையலாம்” என்று தன் வெற்றிக்கான காரணத்தைச் சொல்லி முடித்தார் பீட்டர்.

படங்கள்: க.ரமேஷ் பாலாஜி