Published:Updated:

`ஆண்டுக்கு 12 லட்சம் பேருக்கு வேலை!' - மாஃபா பாண்டியராஜனின் புதிய பிசினஸ் திட்டம்

மாஃபா பாண்டியராஜன்
News
மாஃபா பாண்டியராஜன்

1992-லிருந்து மாஃபா நிறுவனம் மூலம் இந்திய வேலைவாய்ப்புத் துறையில் முக்கியப் பங்கு வகித்துவந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வந்தார் பாண்டியராஜன். அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் தனது பலமான மனிதவளத்துறை பிசினஸுக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் சவாலாக இருந்துவரும் சூழலில், ஓராண்டில் 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான புதிய பிசினஸ் திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மத்திய அரசு செயல்படுத்திவரும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள திறன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து மாஃபா மற்றும் சியல் (CIEL) இரண்டு நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.10 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 242 மாஃபா பயிற்சி மையங்களை அமைக்க உள்ளார். முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, சேலம், கோயமுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பையும் தேவையான திறனையும் ஒருங்கிணைப்பது இந்த மையங்களின் முக்கிய செயல்பாடாகும். இந்த முதற்கட்ட மையங்களின் தொடக்க விழாவில் பேசிய மாஃபா பாண்டியராஜன்,

``திறன் இந்தியா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2,000 திறன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ.17,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. திறன் இந்தியா திட்டத்தில் 50% நிதி ஒதுக்கப்படும் தீனதயாள் உபத்யாய கிராமீன் கவ்ஷல் யோஜனா, பிரதான் மந்திரி கவ்ஷல் விகாஸ் யோஜனா திட்டங்களில் கவனம் செலுத்தி கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால், இந்தத் திறன் பயிற்சித் திட்டங்களை முன்னெடுக்கும் திட்ட செயலாக்க முகவர்கள் பயிற்சி பெறுபவர்களை அடையாளம் காண்பதும், வேலையில் அமர்த்துவதும் சவாலானதாகவே இருந்துவருகிறது. இதனால் நிதி ஆக்கபூர்வமாகச் செலவிடப்படாமல் வீணாகிறது.

India Skills
India Skills

இந்தியாவில் ஓராண்டில் 1.2 கோடி பேர் வேலைக்காகத் தயாராகிறார்கள். இவர்களில் 10% அதாவது, 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே இலக்கு. வேலைவாய்ப்பு தேவையின் அடிப்படையில் இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி, பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்வதுதான் இந்த மாஃபா திறன் பயிற்சி மையங்களின் நோக்கமாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு திறன் பயிற்சி வழங்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால், இது எட்டமுடியாத இலக்காகவே இருந்துவருகிறது. காரணம், சரியான நபர்களை அடையாளம் காண்பதும், அவர்களை முழுமையான பயிற்சிக்கு உட்படுத்துவதும், தொடர்ந்து வேலைவாய்ப்பு உறுதி செய்வது உள்ளிட்ட அனைத்திலும் சவால்கள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள திட்ட செயல்பாட்டு முகவர்கள் தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் இல்லாததால் இந்த இலக்கை எட்ட முடிவதில்லை.

முகவர்கள், பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை எனில், அவர்களுக்கு நிதி கிடைக்காது. இதனால் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் கடமைக்கு நடப்பதோடு, நிதியும் காலமும் வீணாகிறது. 40 கோடி பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான கால அவகாசம் அடுத்த 14 மாதங்களில் முடிவடைகிறது. இதுபோன்ற சவால்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு எங்களுடைய செயல்முறைகளைக் கட்டமைத்துள்ளோம்.

இந்த பிரச்னைகளைச் சரி செய்யும் வகையில் மாஃபா, சியல் இணைந்து பிசினஸ் மாடலை உருவாக்கி உள்ளது. இதற்காக பீரைட்ஹியர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த இணையதளத்தையும் உருவாக்க உள்ளது. இது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த பிசினஸ் மாடல் மூலம் திறன் மேம்பாட்டு திட்டங்களின் இலக்கை எட்ட முடியும் என்பதோடு, நிறுவனத்துக்கும் கணிசமான வருவாய், லாபம் கிடைக்கும் என நம்புகிறோம்.

Job Application / Representational Image
Job Application / Representational Image

குறிப்பாக, எங்களுடைய மாடல், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளைக் கண்டடைதல் ஆகும். அதன்மூலம் மட்டுமே தொடர்ந்து வேலையில் நீடிக்க செய்ய முடியும். குறிப்பாக, பெண்கள் வேலையில் நீடிக்க இது உதவும். எங்களால் ஆண்டுக்கு 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனில் நாடு முழுவதும் இது சாத்தியம்'' என்றார்.

முழு நேர பிசினஸ்

1992-லிருந்து மாஃபா நிறுவனம் மூலம் இந்திய வேலைவாய்ப்புத் துறையில் முக்கியப் பங்கு வகித்துவந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வந்தார் பாண்டியராஜன். கடந்த ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் மீண்டும் தனது பலமான மனிதவளத்துறை பிசினஸுக்குத் திரும்பியுள்ளார்.

இந்த முறை திறன் வளர்ப்பு திட்டங்கள் சார்ந்து தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். மத்திய அரசின் ஸ்கில் இந்தியா, திறன் மேம்பாட்டு திட்டங்கள், மாநில அரசின் திறன் வளர்ப்பு திட்டங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் ஆகிய்வற்றில் கவனம் செலுத்தி இந்திய வேலைவாய்ப்புத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இலக்கு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒதுக்கவும் இல்லை, ஒதுங்கவும் இல்லை

``30 ஆண்டுகள் மனிதவளம், வேலைவாய்ப்பு சார்ந்து அனுபவம் பெற்றிருப்பதன் மூலம் இந்திய வேலைவாய்ப்பில் உள்ள சிக்கல்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த சிக்கல்களை கவனத்தில் கொண்டு எப்படி வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் திறன் இந்தியா திட்டத்தின் இலக்கை எட்டலாம் என்ற பார்வையும் எங்களுக்கு இருக்கிறது. எனவே, இந்த திறன் வளர்ப்புத் திட்டங்களை முன்னெடுத்து நாட்டுக்கே முன்னுதராண நிறுவனமாக தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்த முடியும் என்ற ந்ம்பிக்கை உள்ளது.

இதில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். மற்றபடி யாரும் என்னை ஒதுக்கவும் இல்லை; நான் ஒதுங்கவும் இல்லை. அரசுத் திட்டங்கள், அவற்றில் உள்ள சவால்கள் போன்றவற்ற அனுபவம் அரசியலில் இருந்த காலத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் கிடைத்தது. அந்த அனுபவத்திலிருந்தும் 30 ஆண்டுகால மனிதவள துறை அனுபவத்திலிருந்தும் இதை முன்னெடுக்கிறோம்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

2023-ல் பொதுப்பங்கு வெளியீடு

தற்போது எட்டு மையங்களுடன் தொடங்கும் இந்தப் பயணம் அடுத்த 2023 மே மாதத்துக்குள் 242 மையங்களுடன் முழுமையாக செயல்பட இலக்கு வைத்துள்ளோம். மேலும், 2023-ல் பொதுப் பங்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். அதற்குள் இந்திய வேலைவாய்ப்பு சந்தையிலும் திறன் வளர்ப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை மாஃபா, சியல் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கத் தொடங்கியிருக்கும்'' என்று அவர் தெரிவித்தார்.

1992-ல் மாஃபா மனிதவள நிறுவனத்தை பாண்டியராஜன், மனைவி லதா பாண்டியராஜன் இணைந்து உருவாக்கி பின்னர் ரான்ஸ்டாட் நிறுவனத்திடம் பங்குகளை விற்பனை செய்தனர். ரூ.2015-ல் சியல் என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.

இந்நிறுவனம் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சியல் தற்போது இந்தியாவின் முன்னணி 10 வேலைவாய்ப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனத்துக்கு 58 முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன.

தற்போது மாதம் 4,000 முதல் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.