Published:Updated:

காலையில் மதுரை, மாலையில் மலேசியா... உலகம் முழுவதும் மணக்கும் மதுரை மல்லி!

 மதுரை மல்லி
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மல்லி

ஜி.ஐ பிசினஸ்

காலையில் மதுரை, மாலையில் மலேசியா... உலகம் முழுவதும் மணக்கும் மதுரை மல்லி!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
 மதுரை மல்லி
பிரீமியம் ஸ்டோரி
மதுரை மல்லி

மீனாட்சியம்மன் கோயில், சித்திரைத் திருவிழா, சூடான இட்லி, ஜிகர்தண்டா, ஜல்லிக்கட்டு, கீழடி பண்பாடு, சங்கத் தமிழ் நகரம், உணவுத் தலைநகரம் எனப் பல வகையிலும் புகழ்பெற்ற மதுரைக்கு இன்னொரு பெருமை ‘மதுரை மல்லி!’

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மல்லிகைப் பூக்கள் உற்பத்தியானலும், மதுரை மாவட்டத்திலும், சுற்றுவட்டாரத்திலும் உற்பத்தியாகும் மல்லிகைக்குத் தனி மதிப்பு உண்டு. மதுரையிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் உற்பத்தி யாகும் மல்லிகையை ‘மதுரை மல்லி’ என்று அழைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சின்ன உலகாணி, பெரிய உலகாணி, கல்லணை, கூடக்கோயில், எலியார் பத்தி, ஆவியூர் வளையங்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் அதிகமாக மல்லிகை விவசாயம் செய்யப்படுகிறது.

காலையில் மதுரை, மாலையில் மலேசியா... உலகம் முழுவதும் மணக்கும் மதுரை மல்லி!

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எந்த அளவுக்கு மதுரை மல்லியை விரும்புகிறார்கள் என்பதற்கு காலையில் பறித்து, சரம் தொடுக்கப் பட்டு மாலையில் அவர்கள் கையில் சேரும் வகையில் தினமும் மூன்று டன் மல்லி விமானத்தில் செல்கிறது என்பதே சாட்சி. அது மட்டு மல்லாமல், வாசனைத் திரவிய உற்பத்திக்காக மல்லிகை அரோமா தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிற்சாலையும் மதுரையில் இயங்கி வருகிறது.

இவ்வளவு புகழ்பெற்ற மதுரை மல்லிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு 2012-ல் அளித்தது. அதனால் உலக அளவில் மேலும் பிரபலமாகியுள்ளது.

திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூர், மைசூர், நாக்பூர், மும்பை, டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் மதுரை மல்லிக்கு எப்போதும் சிறந்த வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக, கர்நாடகா, ஆந்திராவுக்கு ஒரு காலத்தில் அதிகம் சென்றுகொண்டிருந்தது. தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மல்லிகைச் சாகுபடி அதிகமாகிவிட்டதால், மதுரையிலிருந்து செல்வதில்லை.

காலையில் மதுரை, மாலையில் மலேசியா... உலகம் முழுவதும் மணக்கும் மதுரை மல்லி!

மல்லிகையை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதில் வெற்றிகரமாகச் செய்லபட்டுவரும் என்.ஜெகதீசனிடம் பேசினோம். ‘‘என் தந்தை காலத்திலிருந்து மதுரையில் மல்லிகைப்பூவை மட்டும் பிசினஸ் செய்து வருகிறோம். எல்லா ஊர்களிலும் மல்லிகை இருந்தாலும் என் தந்தைதான் அந்தக் காலத்திலேயே வெளியூர், வெளிமாநில சந்தைகளுக்கு மதுரை மல்லியை அனுப்பி தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

மதுரை மல்லிகைக்கு ஸ்பெஷலே வெண்மை, அதன் உருண்ட வடிவம், மனதை மயக்கும் நறுமணம்தான். அதற்கு காரணம், மல்லிகை நாற்று பாம்பன் தீவில் உருவாக்கப்பட்டு மதுரைக்கு வருவதுதான்.

இந்தியா முழுவதும் மதுரை மல்லி வியாபாரம் செய்து வந்த நாங்கள் அப்போதே பூக்களை விமானத்தில் அனுப்பினோம். ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்து, முதலில் வேறு நபர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். பின்பு, நேரடியாகவே அனுப்பினோம். மதுரையிலிருந்து சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், திருச்சிக்கு அனுப்பி, வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பா, அமெரிக்கா வுக்கும் அனுப்புகிறோம்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

இன்றைக்குத் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை. அதுபோல, கோயில்கள் இல்லாத நாடுகளும் இல்லை. அவர்களுக்கு மலர்கள் அவசியம் தேவைப்படுகிறது. அதிலும் மதுரை மல்லிக்கென்று வெளிநாடுகளில் தனி மதிப்பு உள்ளது. அந்தப் பெயரை தக்கவைத்துக்கொள்ள சரியான கலரில், பெரிய சைசில் உள்ள மல்லியை உதிரியாகவும், வெவ்வேறு அளவிலும் சரம் தொடுத்து பக்காவாக பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். தினமும் 2 முதல் 3 டன் அளவுக்கு மல்லி அனுப்பு கிறோம். இன்னும் தேவை அதிகமுள்ளது. ஆனால், இங்கு உற்பத்தி குறைவாக உள்ளது. மதுரை மார்க்கெட்டில் சரியான விலை கிடைக்காமலும், கடந்த கொரோனா கால பாதிப்பாலும் பல மல்லி விவசாயிகள் வேறு வேலைக்குச் சென்று விட்டார் கள். முன்பு தினமும் 15 டன் மல்லி மார்க்கெட்டுக்கு வரும். இப்போது 10 டன்தான் வருகிறது’’ என்றார்.

தேவை அதிகமாக இருந் தாலும் மல்லிகையை உற்பத்தி செய்யும் விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு நிரந்தரமான விலையும், வருவாயும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மதுரை மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த மல்லிகை விவசாயம், சமீபகாலமாகக் குறைந்து வருகிறது, மல்லிகை விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்குச் சென்று வருகிறார்கள்.

மதுரை பூ மார்க்கெட்டில் நம்மிடம் பேசிய மல்லிகை விவசாயிகள், “மல்லிகை நாற்று, உரம், பரமாரிப்புச் செலவு, வேலையாள் கூலி ஏறிக் கொண்டே போவதாலும், மல்லிகைக்கு நிரந்தரமான விலை இல்லாததாலும், மார்க்கெட்டில் உள்ள கமிஷன் ஏஜென்டுகள், மொத்த வியாபாரிகள், பூக்கடைக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், உற்பத்தி செய்த எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. சராசரியான அளவில் மல்லி பூத்தால் நியாயமான லாபம் கிடைக்கும். ஆனால், பூக்கள் உற்பத்தி குறைந்தாலும், அதிக மானாலும் நஷ்டம்தான் கிடைக் கிறது.

கடந்த கொரோனா காலத்தில் மிகவும் நசிந்து போனோம். பறித்த பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. கோயில்கள் பூட்டியதாலும், திருமணம் போன்ற விசேஷங்கள் குறைந்ததாலும் கிலோ 50 ரூபாய்க்குகூட விற்க முடியாத நிலை ஏற்பட்டது. மல்லிகை உற்பத்திச் செலவில் அரசு எங்களுக்கு கொஞ்சம் உதவ வேண்டும். எங்களிடம் சீரான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

நம்மிடம் பேசிய விவசாய அலுவலர், ‘‘இடையில் லாக் டௌன் விலக்கப்பட்ட ஒரு முகூர்த்த நாளில் மதுரை மல்லி கிலோ 4,000 ரூபாய்க்கு விற்றது. இப்படி எப்போதாவது விவசாயி களுக்கும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால், மற்ற நாள்களில் நியாய மான விலை கிடைப்பதில்லை. ஏஜென்டுகளுக்கு எப்படியும் 10% கமிஷன் கிடைத்துவிடும்.

புவிசார் குறியீடு பெற்று தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த மதுரை மல்லியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசும், தோட்டக் கலைத்துறையும் மானி யம் வழங்க வேண்டும். உற்பத்தி அதிகமான காலங்களில் அரசே ஸ்டோரேஜ் செய்தும் சீரான வருவாயை அளிக்கலாம்’’ என்றார்.

‘‘மல்லிகை விவசாயிகளுக்கு அரசுதான் உதவணும். ஒரு நாற்று 3 ரூபாய் ஆகிவிட்டது. ஒரு ஏக்கரில் நடவு செய்ய 600 நாற்றுகள் வேண்டும். இது தவிர, உரம் இடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, வேலை செய்பவருக்கு கூலி, போக்குவரத்துச் செலவு என்று எங்கோ போய்விடுகிறது. சராசரியாக ஒரு கிலோவுக்கு 300 ரூபாய்க்கு மேல் கிடைத்தால், ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லையெனில், நஷ்டம்தான். இது அழுகும் பொருள். மதியத்துக்கு மேல் மலர்ந்துவிட்டால் விலை போகாது. அதுபோல் அதிக உற்பத்தி நாளில் வாசனைத் திரவியம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் தயாரிக்க வாங்குகிறோம். கிலோ 120 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும். காரணம், ஒரு கிலோ அரோமா ஜெல் தயாரிக்க 70 கிலோ மல்லிகைப்பூ தேவைப்படும். அதையும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே மல்லிகை ஏற்றுமதி யாளர்கள் உள்ளார்கள். மதுரை மல்லிக்கு உலக அளவில் நல்ல மதிப்பு இருந்தாலும், நமக்கு போட்டியாளர் எகிப்து. அங்கும் அதிக அளவில் மல்லிகையை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கும் அனுப்பி வருகிறார்கள். அதனால்தான் நம்மால் வெளிநாட்டில் விலையை அதிகப்படுத்த முடிய வில்லை’’ என்றார் ஜெகதீசன்.

மணக்கும் மதுரை மல்லியை உற்பத்தி செய்யும் விவசாயி களின் வாழ்க்கையில் இத்தனை பிரச்னைகள் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது. மல்லிகையின் மணம் குறையாமல் தொடர்ந்து வாசம் வர வேண்டுமெனில், தமிழக அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism