Published:Updated:

நூறு ஆண்டுகள்... 5 தலைமுறைகள்... மதுரை ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோலி சோடாவின் வெற்றிக் கதை!

கதிர்வேல்
பிரீமியம் ஸ்டோரி
கதிர்வேல்

நேட்டிவ் பிராண்ட் 3

நூறு ஆண்டுகள்... 5 தலைமுறைகள்... மதுரை ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோலி சோடாவின் வெற்றிக் கதை!

நேட்டிவ் பிராண்ட் 3

Published:Updated:
கதிர்வேல்
பிரீமியம் ஸ்டோரி
கதிர்வேல்

மீனாட்சியம்மன் கோயில், சித்திரைத் திருவிழா, மதுரை மல்லி, ஜல்லிக்கட்டு, டி.வி.எஸ் என மதுரைக்குப் பல அடையாளங்கள் உண்டு. அதில்,  மாப்பிள்ளை விநாயகர் சோடாவும் ஒன்று. 100 வருட வரலாறு கொண்ட  மாப்பிள்ளை விநாயகர் சோடா, விளம்பரத்துக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் வெளிநாட்டுக் கோலா நிறுவனங்களின் படையெடுப்புக்குப் பின்பும், தன் வாடிக்கையாளர்களை இழந்துவிடாமல், சுவை, தரம் மாறாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது சாதனைதான்.

மதுரையின் பரபரப்பு நிறைந்த வர்த்தகப் பகுதியான நேதாஜி சாலையில் இயங்கிவரும்  மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனிக்குச் சென்றோம். தற்போது கம்பெனியை நடத்திவரும் கதிர்வேல் நம்மிடம் பேசினார்.

“எங்கள் பாட்டனார் முருகன் நாடார், மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனியை 1909-ல் தொடங்கினார். அந்தக் காலத்தில் கோலி சோடா பாட்டில்கள் ஜெர்மனியில்தான் தரமாகத் தயாரிக்கப்பட்டன. அங்கிருந்து பாட்டில்களை இறக்குமதி செய்து, இங்குள்ள சோடா கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் தொழிலைத் தான் 1887-களில் எங்கள் பாட்டனார் முதலில் செய்தார். அதற்குப் பின்பு 1909-ல்தான் சோடா கம்பெனியைத் தொடங்கினார். திருமங்கலம், திருப்பரங்குன்றம், திண்டுக்கல், மணப்பாறை, மதுரை என ஐந்து ஊர்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கினாலும், தலைமை அலுவலகம் திருமங்கலத்தில்தான் இருந்தது. பிசினஸைப் பெரிய அளவில் கொண்டு செல்வதில் ரொம்ப ஆர்வமாகவும் பொருள்களை இறக்குமதி செய்ய வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு விவரமாகவும் இருந்தார்.

அப்போதெல்லாம் மாட்டு வண்டிகள் மூலம்தான் சோடாக்களை ஒவ்வொரு ஊராக எடுத்துச் சென்று சப்ளை செய்வார்கள். அப்படி போகும்போது ஒவ்வொரு ஊரிலும் எங்கள் சோடாவுக்கு மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது தென் தமிழகத்தில் வி.எம் சோடா, காமதேனு சோடா, லவ்வோ, வின்சென்ட், ஸ்பென்சர் போன்ற சோடா நிறுவனங்கள் இருந்தன. மாப்பிள்ளை விநாயகருக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஸ்வீட் டிரிங்ஸ்களையும் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

கதிர்வேல்
கதிர்வேல்

இந்தத் தொழில் ஒருபக்கம் நடந்துவந்தபோதிலும், கோலி பாட்டில், எஸென்ஸ் மொத்த வியாபாரத்தையும் அவர் விடவில்லை. கம்பெனியை வேகமாக வளர்த்து வந்த நேரத்தில் தான் என் பாட்டனார் முருகன் திடீரென்று விபத்தில் இறந்துவிட, அவருடைய வாரிசுகள் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்’’ என்றவர், இந்த நிறுவனத்தின் பெயர்க் காரணம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

‘‘திருமங்கலத்தில் இருக்கும் விநாயகர் கோயில் தான் எங்கள் குலக்கோயில். அந்தக் கோயில் அருகே கோதா பள்ளியில் உடற்பயிற்சிகள் நடக்கும். அங்கிருக்கும் இளவட்ட கல்லைத் தூக்கும் இளைஞர்களை மாப்பிள்ளை போன்று திடகாத்திரமாக இருக்கிறான் என்பார்கள். அதனால் அந்த விநாயகருக்கு மாப்பிள்ளை விநாயகர் என்று பெயர். அந்தப் பெயரில் நாங்கள் பிராண்டை உருவாக்கினோம். அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாங்கள் பிரபலமான பின்பு எங்கள் பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி, பலரும் சோடா தயாரிக்க ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் சட்டப்படி தடுத்து நிறுத்தினோம். அதன்பின்பு நாங்கள் நடத்திய ஸ்பின்னிங் மில், மாவு மில், தியேட்டர், ரியல் எஸ்டேட் என்று எல்லாத் தொழிலுக்கும் மாப்பிள்ளை விநாயகர் பெயரையே வைத்தோம்’’ என்றவர், இன்னும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

``கோலி பாட்டில் ஒன்றின் விலை ரூ.75. இடையில் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடை களில் போடும் பாட்டில்கள் பல திரும்ப வருவதில்லை. அதனால் நஷ்டம் ஏற்பட்டதால், சாதாரண ஃபேன்சி பாட்டில்களில் சோடா தயாரிக்கத் தொடங்கினோம். அந்த பாட்டிலின் விலை ரூ.12 தான். ஆனாலும் எங்கள் சோடாவை கோலி பாட்டிலில் வர வேண்டும் என்று மக்கள் விரும்பியதால், மீண்டும் கோலி பாட்டிலில் சோடா தயாரிக்க ஆரம்பித்தோம்.

கோலி சோடா பாட்டில்களை நம் நாட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்தாலும் ஜெர்மனியில் தயாரான பாட்டில்போல திட மாக இல்லை. ஆனால், இப்போது பாட்டில்களைத் திடமாகத் தயாரிக்கிறார்கள். சில கம்பெனி கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சோடா விற்கின்றன. சோடா சுவையும் கேஸும் சரியாக இருக்க வேண்டு மென்றால், தரமான பாட்டில்கள் வேண்டும். அதனால் பெரிய அளவில் நாங்கள் மாற்றவில்லை. இப்போதுகூட இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், மனித உழைப்பைக் கொண்டுதான் செய்கிறோம்.

நூறு ஆண்டுகள்... 5 தலைமுறைகள்... மதுரை  ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோலி சோடாவின் வெற்றிக் கதை!

எங்களுடைய மற்ற தொழிலில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாகத்தான் நாங்கள் இதை பெரிய அளவில் கொண்டு செல்லவில்லை. சோடா கம்பெனி மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டுதான் பல சொத்துகளை வாங்கினோம். மாவு மில், ஸ்பின்னிங் மில், தியேட்டர், லாட்ஜ் என்று பல தொழில்களிலும் கால்பதித்தோம். என் தம்பி அண்ணா பல்கலைக் கழகத்தில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தார். மெஜுரா கோட்ஸில் சில ஆண்டுகள் வேலை பார்த்தபின், அவரை வைத்து எங்களுடைய மில்லை நிர்வாகம் செய்ய வைத்தோம். ஒரு சமயம், எங்கள் மில்லில் 6,000 பேர் வேலை செய்தார்கள். தியேட்டரும் நன்றாகப்போனது. 2006-ல் மில் நிர்வாகத்தில் இருந்த சிலர் எடுத்த தவறான முடிவுகளால் கடன் பிரச்னை ஏற்பட்டு, அதை அடைக்க மற்ற தொழில்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நன்றாகச் சென்றுகொண் டிருந்த சோடா கம்பெனியும் சரிவை சந்தித்தது. எல்லா பிரச்னை களையும் சரி செய்த பிறகு, இனி குடும்பத்தினர் கூட்டாகத் தொழில் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து சொத்துகளைப் பிரித்துக்கொண்டோம். அந்த அடிப்படையில் சோடா கம்பெனியை நானும் என் மகனும் நடத்தி வருகிறோம். மாப்பிள்ளை விநாயகர் சோடாவுக்கென்று மக்கள் மத்தியில் ஒரு மரியாதை உள்ளது. அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை.

லெமன், ஆரஞ்சு, பன்னீர், நன்னாரி, ஜிஞ்சர்பீர், மேங்கோ என குளிர்பானங்கள் தயாரிக்கிறோம். ஃபேன்சி பாட்டில்களிலும் சோடா கலர்கள் தயாரிக்கிறோம். இவற்றுக்கு ஏற்றுமதி வாய்ப்பு வந்தபோதும் நாங்கள் ஏற்க வில்லை. காரணம், வேலைக்கு ஆள் பற்றாக்குறை. தவிர, நிர்வாகம் செய்ய நானும் என் மகனும் மட்டும்தான் இருக்கிறோம். இரண்டு மகள்களும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்கள். திருச்சி யூனிட்டை மட்டும் என் தம்பி பார்த்துக்கொள்கிறார். அதனால் அதிகம் ரிஸ்க் எடுக்காமல், வழக்கம்போல் தென் மாவட்டங்களில மட்டும் சப்ளை செய்கிறோம்.

முன்னோர்கள் உருவாக்கிய இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிறுவனம் மூலம் உருவான சார்புத் தொழில்களால் 20 வருடங்களுக்குமுன் தினமும் பல கோடி ரூபாய் டேர்ன் ஓவர் ஆனது. இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வந்து, தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு டேர்ன் ஓவர் செய்கிறோம். அடுத்து என் பேரனும்  மாப்பிள்ளை விநாயகரை நடத்தணும் என்பதே என் விருப்பம்’’ என்றார்.

ஆச்சர்யம் தரும் தகவல்தான்!

1900-களில் கோலி சோடா பாட்டில்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. ஜெர்மனி யிலிருந்துதான் இறக்குமதி செய்தார்கள். அப்படி இறக்குமதி செய்துகொண்டிருந்தபோது  மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனியின் நிறுவனர் முருகன், பாட்டில்கள் கேட்டு ஜெர்மன் கம்பெனிக்கு 2,000 ரூபாயை மணி ஆர்டர் அனுப்பி வைக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அது பெரிய தொகை. பணம் அனுப்பி சில வாரங்களிலேயே இரண்டாம் உலகப்போர் வந்துவிட, பாட்டில்கள் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது. பாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டதால், தொழில் முடங்கும் நிலை உருவானது. ஆனால், 1943-ல் ஜெர்மனி பாட்டில் கம்பெனியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘மன்னிக்கவும், நீங்கள் பணம் அனுப்பிய நேரத்தில் இங்கு போர் ஏற்பட்டதால், பாட்டில்களை அனுப்ப முடியவில்லை. தற்போது நிலைமை சரியாகிவிட்டது. நீங்கள் அனுப்பிய 2,000 ரூபாய்க்குப் பதிலாக 10,000 ரூபாய் அளவுக்கு பாட்டில்களை அனுப்பி வைக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர். இதன்மூலம் மதுரை  மாப்பிள்ளை விநாயகர் சோடா கம்பெனியின் வெளிநாட்டுத் தொடர்பையும், ஜெர்மன் நிறுவனத்தின் நேர்மையையும் தெரிந்துகொள்ளலாம்’’ என்றார் கதிர்வேல்.