மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆட்டோமொபைல் to நிதி நிறுவனம் வரை... ஆச்சர்யப்படுத்தும் அழகேந்திரன்!

அழகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அழகேந்திரன்

வெற்றித் தலைமுறை - 8

பிறந்தது குக்கிராமம்... பெரிய படிப்பும் இல்லை... ஆனால், ஆட்டோமொபைல் தொழில் தொடங்கி, பிறகு ஃபைனான்ஸ் பிசினஸை ஆரம்பித்து, சாதனை புரிந்த தொழிலதிபர்தான் அழகேந்திரன். அவரின் மகனும் அழகேந்திரன் நிதி நிறுவனத் தின் நிர்வாக இயக்குநருமான ராஜ்குமார் தன் தந்தையைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘திருநெல்வேலி மாவட்டம் விளாத்தி குளத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்த்தாண்டன்பட்டிதான் என் அப்பா அழகேந்திரன் பிறந்த ஊர். என் கொள்ளுத் தாத்தா அழகுமலை நாடார் ஒரு ஜமீன்தார். அந்தக் காலத்திலேயே அவருக்கு 5,000 ஏக்கர் நிலம் இருந்தது. அவருக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர் என் தாத்தா ரத்னசாமி. மார்த்தாண்டன் பட்டியில் மளிகைக்கடை ஒன்றை வைத்திருந்தார் என் தாத்தா.

அழகேந்திரன்
அழகேந்திரன்

தாத்தாவுக்கு மொத்தம் ஏழு மகன்கள், இரண்டு மகள்கள். என் அப்பா அழகேந்திரன் 1940-ல் பிறந்தார். மார்த்தாண்டன்பட்டியில் ஆரம்ப நிலைப் படிப்பையும், தூத்துக்குடியில் கார்டுவெல் பள்ளியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்தார். விருதுநகர் ‘ஹிந்து நாடார்’ கல்லூரியில் பி.யு.சி படித்தார். அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. ‘‘கவலைப்படாதே, எல்லாம் நல்லதுக்குதான். ஏதாவது ஒரு இடத்தில் அடிமையாய் போய் தொழில் கத்துக்கோ’’ என்று வழி காட்டினார் என் பாட்டி. மதுரையில் அவரின் சித்தப்பா ஏ.எம்.நடராஜன் வைத்திருந்த மோட்டார் வாகன உதிரிபாகங்களை விற்கும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு கஷ்டப்பட்டு அத்தனை வேலைகளையும் கற்றுக்கொண்டார் என் அப்பா அழகேந்திரன்.

ஆனால், நடராஜன் சித்தப்பா அவரை வேலையில் இருந்து திடீரென்று நீக்கிவிட, மதுரையில் இருந்த என்.கே.ஆர் பெரிய நாடார் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு 24 மணி நேரமும் வேலை பார்த்தார். இரவில்கூட யாராவது கதவைத் தட்டி பொருளைக் கேட்டால் எடுத்துத் தருவார். அதுவே அவருக்கு பாதகமாக போக, அந்த வேலையை விட்டு, ‘ஆட்டோ எலெக்ட்ரிக்கல் அண்ட் அக்ஸசரீஸ்’ என்கிற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதுதான் அவர் வேலை பார்த்த கடைசி நிறுவனம்.

அதன்பிறகுதான் ‘அழகேந்திரன் ஆட்டோ மொபைல்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார். தாத்தா ரத்னசாமிக்குத் தந்த 5,000 ரூபாய்தான் ஆரம்ப முதலீடு. மதுரையில் தமிழ்ச் சங்கம் ரோட்டில் சிறிய அளவில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடையைத் திறந்தார். அப்போது கூட அவருக்கு உதிரிபாகங்களை விற்கத் தெரியுமே தவிர, கணக்கு வழக்கு எழுதுவது சுத்தமாகத் தெரியாது. ‘ஐந்தொகை’ என்று சொல்லப்படும் கணக்கு வழக்கு தொடர்பான விவரங்களைக் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டார். அழகேந்திரன் ஆட்டோமொபைல் கடை 365 நாளும் செயல் பட்டது. இரவு 2 மணிக்குக்கூட பொருள்களைத் தந்ததால், அழகேந்திரன் ஆட்டோமொபைல் கடையின் பெயர் மதுரை சுற்றுவட்டாரத்தில் இருந்த அத்தனை மெக்கானிக்குகளுக்கும் தெரிந்தது.

ராஜ்குமார்
ராஜ்குமார்

‘கடனில் பொருள்களைத் தர முடியாது’ என்று டி.வி.எஸ் நிறுவனம் சொல்லிவிடவே, கல்கத்தாவில் உள்ள ‘ஹெரா மோட்டார் கம்பெனி’ கடனில் பொருள்களைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் இருந்த இன்னொரு கம்பெனியான மினி மோட்டார் கம்பெனி, மும்பையில் உள்ள கான்டி னென்ட்டல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் கடனில் பொருள்களைத் தர, எந்தப் பொருளைக் கேட்டாலும் கிடைக்கும் என்கிற நிலைக்கு அழகேந்திரன் ஆட்டோ மொபைலை உயர்த்தினார் அப்பா.

அதன்பிறகு, 1962-ல் அப்பாவுக் குத் திருமணம் ஆனது. என் அம்மா அமர்ஜோதிக்கு நாங்கள் இரண்டு மகன்கள்; இரண்டு மகள்கள். அழகேந்திரன் ஆட்டோமொபைல் 33% லாபம் சம்பாதித்தது. அதை அப்படியே வரிப் படிவத்தில் காட்டி வரி கட்டப் போனார். வரித் துறை அதிகாரியான மோகன் காந்தி அந்த லாபக் கணக்கை நம்ப வில்லை. தவிர, என் அப்பா மாதம் ரூ.150 வாடகையில் குடி யிருந்ததையும் நம்பவில்லை. எனவே, மோகன் காந்தி எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபிறகு தான் வரிக் கணக்கில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஆனால், அவருடனான நட்பு அடுத்த 30 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

மதுரையில் கிடைத்த நல்ல பெயர் காரணமாக, அழகேந் திரன் ஆட்டோமொபைல்ஸின் கிளையைத் திருச்சியில் தொடங்கினார் அப்பா. அங்கும் விற்பனை நன்றாக இருந்தது. நண்பருக்கு உதவியாக ஒருமுறை கோவைக்குப் போனார் அப்பா. அங்கு தொழில் செய்ய வாய்ப்பு இருப்பதைக் கண்டு, கோவை யிலும் ஒரு கிளையைத் தொடங்கினார். சில ஆண்டுகளில் அங்கு சொந்தமாக ஒரு கட்டடம் கட்டி, பெரிய அளவில் ஆட்டோ உதிரி பாகங்களை விற்கும் நிலைக்கு உயர்ந்தார்.

அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் கிளைகளைத் தொடங்கியதால், 1989-ல் அப்பா விடம் நிறைய பணம் புழங்கியது. அவசரத்துக்குக் கடன் வேண்டும் என்று கேட்டவர்களுக்கு அப்பா கடன் தந்தார். வட்டி என்று எது வும் வாங்கவில்லை. ‘ஹாண்டிலிங் சார்ஜஸ்’ என்கிற பெயரில் கொஞ்சம் பணம் வாங்கினார். இது நல்ல முறையில் அவருக்கு லாபத்தை சம்பாதித்துத் தர, நாம் ஏன் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத் தைத் தொடங்கக் கூடாது என்று அவர் யோசித்ததன் விளைவுதான், அழகேந்திரன் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட்.’ ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஃபைனான்ஸ் நிறுவனம் களைகட்டியது. பிறகு ஆர்.பி.ஐ அறிவுறுத்தலின்படி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, ‘அழகேந்திரன் பெனிஃபிட் ஃபண்ட்’ (தற்போது அழகேந்திரன் நிதி லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) என்கிற நிறுவனத் தையும் ஆரம்பித்திருந்தார். அந்த நிறுவனத்தை யார் கவனித்துக் கொள்வது என்பதில் பிரச்னை இருந்தது. அந்தச் சமயத்தில், நான் அப்பாவின் ஏற்றுமதித் தொழில் களைக் கவனித்துக்கொள்ள சிங்கப்பூரில் இருந்தேன். ‘பெனி ஃபிட் நிறுவனத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அவர் அழைத்ததால், நான் உடனே சென்னைக்கு வந்து அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தேன்.

அப்பா காட்டிய வழியில் அழகேந்திரன் நிதி நிறுவனத்தை நான் சரியாக நடத்தியதன் விளைவு, இந்த நிறுவனம் இன்றைக்கு 21 கிளைகளாக விரிந்திருக்கிறது. மக்களிடம் டெபாசிட் வாங்குவது, தங்கநகைக் கடன் இந்த இரண்டும் தான் எங்களுக்குப் பிரதானமானது. இரண்டு மிகச் சரியாகப் போய்க்கொண் டிருப்பதால், 2035-க்குள் மாவட்டத்துக்கு மூன்று கிளைகள் வீதம் 100 கிளைகளுடன் 5,000 கோடி வர்த்தகத்தை அடையத் திட்டமிட்டுள்ளோம். எங்களின் சேவையின் மூலம் தமிழகம் முழுக்க 55,000 வாடிக்கையாளர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

மதுரையில் அழகேந்திரன் சூப்பர் மார்க்கெட் தொடங்கி கடந்த இரண்டு வருடமாகத் திறம்பட நடத்தி வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுக்குள் பல இடங்களிலும் சூப்பர் மார்க்கெட் தொடங்கத் திட்டமிட்டுளோம்.

சிறிய கிராமத்தில் இருந்து வந்து, தன் கடும் உழைப்பால் பெரிய அளவில் வளர்ந்த என் அப்பாவுக்கு ஒரே ஒரு கவலைதான். அவருடைய உறவினர்களில் பலர், அவருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. ‘என் குடும்பத்தினர் எனக்கு மட்டும் ஆதரவாக இருந்திருந்தால், பல ஆயிரம் கோடி மதிப்புடைய நிறுவனத்தைக் கட்டியெழுப்பி இருப்பேன்’ என்று சொல்வார். ஆனாலும், தொழிலில் அவர் அடைந்த உயரம் உண்மையிலேயே ஆச்சர்யமானது. எங்களுக்கெல்லாம் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுகிறார். அவரை நினைத்து நான் நிச்சயம் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன்’’ என்று பேசி முடித்தார் ராஜ்குமார். மதுரையின் அதிசய தொழிலதிபர்தான் அழகேந்திரன்..!

(தலைமுறை தொடரும்)

ஆட்டோமொபைல் to நிதி நிறுவனம் வரை... ஆச்சர்யப்படுத்தும் அழகேந்திரன்!

அழகேந்திரனின் வாழ்க்கை வரலாறு..!

அழகேந்திரன் தன் வாழ்க்கை வரலாற்றை ‘என் வாழ்க்கை ஓடம் வழங்கிய பாடம்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பிரபல எழுத்தாளர் ராணி மைந்தன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். தொழில் ஆர்வம் கொண்டவர்களும், எம்.பி.ஏ பயிலும் மாணவர்களும் ரசித்துப் படிக்க வேண்டிய புத்தகம் இது!