Published:Updated:

தித்திப்பான வருமானம் தரும் மாம்பழ ஜூஸ் தயாரிப்பு!

மாம்பழ ஜூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மாம்பழ ஜூஸ்

தொழில் பழகுவோம் வாங்க! - 6

முக்கனிகளில் முதன்மை இடம் வகிக்கும் மாம்பழங்கள் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. உலகில் மொத்த மாம்பழ உற்பத்தியில் நம் நாட்டில் மட்டுமே 50% அதிகமான விளைச்சல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்கப் பரவலாகவும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மா விளைச்சல் நடைபெறும் நிலையில், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே மாம்பழங்கள் கிடைக்கின்றன. ஆனால், ஆண்டு முழுக்க இதற்கான தேவை இருப்பதால், மாம்பழக்கூழ், மாம்பழ ஜூஸ் உள்ளிட்ட இதர மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகள், இந்த மதிப்புக்கூட்டுதல் தொழிலுக்கான கேந்திரமாகத் திகழ்கின்றன. மாம்பழ ஜூஸ் தயாரிப்புத் தொழிலுக்கான தற்போதைய வரவேற்பு குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

தித்திப்பான வருமானம் தரும்
மாம்பழ ஜூஸ் தயாரிப்பு!

ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம்...

அதிக வெப்பத்தைத் தாங்கி வளரும் மாமரங்கள் தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடியவை. சுவை மிகுந்த, அதிக சத்துகள் நிறைந்த இந்தப் பழங்களின் விலை குறைவு தான். கோடைக்காலத்தில் மட்டுமே இவை விளைவதால், மாம்பழத்தின் சதைப் பகுதியைப் பிரித்தெடுத்துப் பதப்படுத்தி கூழ் மற்றும் ஜூஸ் தயாரிக்கும் தொழிலுக்கான தேவை கடந்த 30 ஆண்டுகளில் பெரிதாக விரிவடைந்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் மாம்பழ உற்பத்தி அதிகம் நடக்காததால், இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் மற்றும் அதன் மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மாம்பழத்தின் சதைப் பகுதியிலிருந்துப் பிரித்தெடுக்கப்படும் மாம்பழக்கூழானது, ஜூஸ், ஜாம், ஐஸ்க்ரீம், சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

தயாரிப்பு முறை ரொம்பவே சுலபம்...

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான தொழிற்சாலை அமைக்க அதிக முதலீடு தேவைப்படும். அந்த ஆலைகளில் சிறியது முதல் நடுத்தர அளவிலான தகர டப்பாக்களில் சேமித்து வைக்கப்படும் மாம்பழக்கூழ் கெட்டித்தன்மையில் இருக்கும். ஓராண்டுவரை பயன்படுத்த உகந்த அந்தக் கூழைத் தேவைக்கேற்ப வாங்கி, அதிலிருந்து எளிமையான முறையில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்யலாம்.

மாம்பழக்கூழுடன் தண்ணீர், சர்க்கரை மற்றும் இதர சில சேர்மானங்கள் சேர்த்து, இயந்திரத்தின் உதவியுடன் வெப்பப்படுத்தித் தயாரிக்கப்படும் ஜூஸ் கலவையானது, 82 - 83 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பெட் பாட்டில் களில் நிரப்பப்படும். பிறகு, அந்த பாட்டில்கள் நீரால் குளிர்விக்கப்படும்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

ஆறு மாதங்களுக்குக் கெடாது...

நீரும் ஆக்ஸிஜனும் இணைந்த உணவுப் பொருள்கள் விரைவில் கெட்டுவிடும் என்பதால், மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழக் கூழானது காற்று புகாதவாறு டப்பாக்கள் மற்றும் பெட் பாட்டில்களின் மேற்பரப்பு வரை முழுமையாக நிரப்பப்பட்டு மூடப்பட வேண்டும்.

மாம்பழக்கூழ் தயாரிப்பு முடிந்ததும் 48 மணி நேரத்துக்குப் பிறகு, சில பாட்டில்களிலுள்ள (ஒவ்வொரு பேட்ஜ் தயாரிப் பிலும்) ஜூஸின் சுவை மற்றும் தரத்தைச் சோதித்துப் பார்த்த பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இந்த ஜூஸ் ஆறு மாதங்கள் வரை கெடாது. ஆனால், மூடியைத் திறந்து விட்டால் ஓரிரு தினங்களுக்குள் ஜூஸைப் பயன்படுத்திவிட வேண்டும்.

தித்திப்பான வருமானம் தரும்
மாம்பழ ஜூஸ் தயாரிப்பு!

விற்பனை வாய்ப்பு...

மாம்பழக்கூழானது ஆண்டு முழுக்கத் தடையின்றி கிடைக் கின்றன. ஆனால், கூழ் தயாரிப்பு ஆலையிலிருந்து நேரடியாகவோ, ஏஜென்சி மூலமாகவோ, சுவை மாறாத வகையில் ஒரே தரத்திலான மாம்பழக்கூழைச் சரியாகத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

கிராமம் முதல் நகரம் வரை எல்லா பகுதிகளிலும் ஜூஸ் தயாரிப்பு ஆலையை அமைக்கலாம். தண்ணீர் வளம் இருக்கும் பகுதிகள் ஏற்றவை. நிறுவனத்தை ஆரம்பித்த பிறகு, ‘FSSAI’ சான்றிதழ் பெற வேண்டும். தரமான மூடி கொண்டு பாட்டில்களை மூடுவதுடன், வாடிக்கையாளர் களைக் கவரும் வகையில் லேபிளை ஒட்டுவது அவசியம். அருகிலுள்ள மளிகைக்கடைகள், குளிர்பானக்கடைகள், டிப்பார்ட் மென்டல் ஸ்டோர் உட்பட உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங்களிலெல்லாம் விற்பனை செய்யலாம்.

தித்திப்பான வருமானம் தரும்
மாம்பழ ஜூஸ் தயாரிப்பு!

வங்கிக் கடனுதவி...

மாம்பழ ஜூஸ் தயாரிப்புக்கான ஆலை அமைக்க ரூ.15 லட்சம் முதலீடு தேவைப்படும். யு.ஒய்.இ.ஜி.பி திட்டத்தில் 25% மானியம் பெறலாம். பி.எம்.இ.ஜி.பி திட்டத் தில் நகரப்பகுதியினருக்கு 25% மற்றும் கிராமப்புறப் பகுதி யினருக்கு 35% மானியம் கிடைக்கும்.

தினசரி வருமானம் 36,000 ரூபாய்...

ரூ.15 லட்சம் முதலீட்டில் தொடங்கும் ஆலையில், 200 மில்லி லிட்டரில் 2,000 பாட்டில்கள் மற்றும் 500 மில்லி லிட்டரில் 1,000 பாட்டில்கள் வீதம் தினமும் விற்பனையை மேற்கொள்ளலாம். மாம்பழக்கூழ் ஒரு லிட்டர் ரூ.67 வீதம் கொள்முதல் செய்யலாம்.

ஒரு லிட்டர் கூழுடன் இதர சேர்மானங்கள் சேர்த்து 9 லிட்டர் ஜூஸ் தயாரிக்கலாம். 200 மில்லி லிட்டர் பாட்டிலைக் கடைகளுக்கு ரூ.9, 500 மில்லி லிட்டர் பாட்டிலை ரூ.18-க்கு விற்பனை செய்யலாம். அந்த வகையில் தினமும் ரூ.36,000 வருமானம் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

 லிங்கசாமி
லிங்கசாமி

வருமானம் கூட்டும் பல தயாரிப்புகள்..!

சென்னையிலுள்ள ‘எல்.வி.பி நியூட்ரிஷியன் ஃப்ரெஸ்’ நிறுவன உரிமையாளரான லிங்கசாமி, பழங்களிலிருந்து ஜூஸ் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். அவரிடம் பேசினோம். “ஃப்ளேவர் மில்க் விற்பனையில் எனக்குப் பல ஆண்டுகள் அனுபவம் உண்டு. என் மூத்த மகன் என்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கல்லூரிப் படிப்பை முடித்ததும் இளைய மகனும் இதே துறைக்குள் நுழைந்தார்.

ஃப்ளேவர் மில்க் விற்பனையுடன், புதிய முயற்சியாக மாம்பழ ஜூஸ் தயாரிப்புத் தொழிலை ஆரம்பித்தோம். அந்த யூனிட்டிலேயே புதிய தயாரிப்புகள் குறித்து யோசித்தபோது, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்கரன்ட் (Blackcurrant), கிரீன் ஆப்பிள் போன்ற பழங்களுடன், சப்ஜா விதைகள் சேர்த்து ஜூஸ் தயாரிக்க ஆரம்பித்தோம். தேவையின் அடிப்படையில் மேற்கூறிய நான்கு பழங்களிலிருந்து மட்டும் தினமும் 3,000 பாட்டில்கள் (250 மில்லி லிட்டர் அளவு பாட்டில்) ஜூஸ் தயாரித்து, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு விற்பனை செய்கிறோம். நிலையான மார்க்கெட்டிங் வட்டாரத்தை உறுதி செய்து மாம்பழம் உள்ளிட்ட மற்ற சில பழங்களிலிருந்தும் ஒரே யூனிட்டில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்து சிறப்பான லாபம் ஈட்டலாம்” என்றார்.