Published:Updated:

`ஊரடங்கால் முடங்கிய தொழிலை ஓரளவு மீட்டுட்டேன்!’- அசத்தும் மதுரை `மாத்தியோசி’ இளைஞர்

துரைராஜ்
துரைராஜ்

வியாபாரம் மட்டும் நோக்கம் இல்லாமல் சமூகச் சிந்தனையாகவும் இருக்க வேண்டும் என நல்ல பிரின்டிங் மாஸ்க்கை உருவாக்க ஆரம்பித்தோம்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் போடப்பட்ட ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழிலாளர்கள் வரை அனைவரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மாஸ்க்
மாஸ்க்

இந்நிலையில் சிரமத்தைச் சரி செய்யும் வகையில் தனது பணியைச் சற்று மாறுதலாகச் சிந்தித்து தனது தொழிலை மீட்டுவருகிறார் மதுரையைச் சேர்ந்த துரைராஜ். இதுகுறித்து நம்மிடம்,``மதுரை அண்ணா நகர் பகுதியில் எஸ்.போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு வீரர்கள் உடைகள் தயார் செய்யும் சிறிய நிறுவனம் நடத்திவருகிறேன். ஜெர்சி, டிராக் பேன்ட், பிரின்டிங் டிசைன் டி-ஷர்ட் உள்ளிட்ட பல்வேறு உடைகளை தயார் செய்து பல இடங்களுக்கு அனுப்பிவருகிறோம்.

10-க்கும் மேற்பட்ட நபர்கள் என்னிடம் வேலை செய்கின்றனர். ஓரளவு நல்ல வருமானம் பார்த்துவந்தோம். இந்நிலையில் நாங்கள் இருக்கும் அண்ணா நகரைச் சேர்ந்த நபர்தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்த முதல் நபர். இதனால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்த உடனேயே எங்கள் பகுதி முழுமையாக முடக்கப்பட்டது.

கார்ட்டூன் டிசைன் மாஸ்க்
கார்ட்டூன் டிசைன் மாஸ்க்

இதனால் வேலை செய்யும் ஆட்களும் யாரும் வரமுடியவில்லை. சுத்தமா தொழில் செய்ய முடியவில்லை. மேலும் ஊரடங்கு உத்தரவால் எல்லா இடங்களும் முடங்கியதால், கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். ஸ்போர்ட்ஸ் வியர்ஸ்க்கு ஆர்டர் கொடுக்க யாருமே வரவில்லை. சில வாரங்கள் கழித்து மாஸ்கிற்குத் தேவை இருப்பதை உணர்ந்தோம். வியாபாரம் மட்டும் நோக்கம் இல்லாமல் சமூகச் சிந்தனையாகவும் இருக்க வேண்டும் என நல்ல பிரின்டிங் மாஸ்கை உருவாக்க ஆரம்பித்தோம்.

உட்புறம் காட்டன், வெளிப்புறம் பாலியஸ்டர் இருக்கும்படி மாஸ்க் தயாரித்தோம். குழந்தைகள் மாஸ்க்குகளை அணிய விரும்புவதில்லை என அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை அதில் பொறிக்க ஆரம்பித்தோம். எங்களிடம் ஏற்கெனவே டி- ஷர்டில் பிரின்டிங் தயாரிக்கும் இயந்திரம் இருப்பதால் மாஸ்க் பிரின்டிங் எளிமையாக இருந்தது.

பிரின்டிங் மிஷின்
பிரின்டிங் மிஷின்

பொம்மை மற்றும் தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்கள் பொம்மை இருப்பதால் குழந்தைகள் அதை விரும்பி அணிந்தனர். இதைப்போல் பெரியவர்களுக்குப் பிடித்தது போன்ற டிசைன்களையும் மாஸ்கில் பதித்தோம். பெண்களுக்குப் பெரும்பாலும் பூ- டிசைன் மற்றும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த மாஸ்க் செய்கிறோம். சிறுவர்கள் பப்ஜி, உள்ளிட்ட கேம் படங்கள் கேட்கின்றனர். இளைஞர்கள் விஜய், அஜித் என்று சினிமா நடிகர்கள் புகைப்படம் பதித்த மாஸ்க் அதிகளவு கேட்கின்றனர். இப்படி எந்த டிசைன் கேட்டாலும் பரவாயில்லை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்வது நல்லது என்று ஆர்டர்களை தட்டிக்கழிக்காமல் இரவு, பகலாக வேலை செய்கிறோம்.

ஒரு நாளைக்கு 6,000 மாஸ்க்குகளுக்கு மேல வெளிய விற்பனைக்குப் போகுது. அதில் குழந்தைகள் மாஸ்க் பாதிக்குப் பாதி தயார் செய்றோம். எங்களுக்கு ஸ்போட்ஸ்வியரைப் போல விற்பனை இல்லை என்றாலும் சமாளிக்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கிறது. மதுரையில் பல கடைகளுக்கு நாங்கதான் ஸ்போர்ட்ஸ் வியர் தயார் செய்துகொடுப்போம்.

மாஸ்க்
மாஸ்க்

இப்ப மாஸ்க்தான் கொடுக்கிறோம். எங்களுடைய தொழில் முடங்கிவிட்டது என்று நாங்களும் முடங்கி இருந்தால், எங்க நிறுவனமும் முடங்கி இருக்கும். எங்களிடம் இருக்கும் வேலையைச் சற்று மாற்றியதால் தற்போது பிழைத்துக்கொண்டோம்’’ என்றார் நம்பிக்கையாக.

அடுத்த கட்டுரைக்கு