Published:Updated:

லாபத்தில் ஆட்டுப் பண்ணை பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!

அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்குமார்

இந்தத் தொழிலை உணர்வுபூர்வமாக நாம் அணுகினால்தான் வெற்றி கிடைக்கும்!

‘படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்கலை’ எனப் புலம்பிக் கிடக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ படித்துவிட்டு, ஆட்டுப் பண்ணை நடத்தி, இன்று ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதித்து ஆச்சர்யப்படுத்துகிறார் ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் அருகேயுள்ள தோப்புக்காடுதான் அருண்குமாரின் சொந்த ஊர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படித்திருக்கிறார். ‘ஏதாவது ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டால், குடும்பத்தின் நிலைமையே மாறிவிடும்’ என பெற்றோரும், உறவினர்களும் நம்பிக்கையில் இருந்திருக்கின்றனர். ஆனால் அருண்குமாரோ, ‘ஆட்டுப் பண்ணையை உருவாக்கி பிசினஸ் செய்யலாம் என்றிருக்கிறேன்’ என்று இறங்க, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. வழக்கம்போல குடும்பத்தார், உறவினர்களிடமிருந்து எக்கச்சக்கமான வசவுகள், எச்சரிக்கைகள். இவற்றில் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், 25 ஆடுகளுடன் ‘விநாயகர் கோட் ஃபார்ம்’ என்ற ஆட்டுப் பண்ணையை ஆரம்பித்தார் அருண்குமார். ஆடுகளை வளர்ப்பதில் பத்து வருடங்கள் கடுமையான உழைப்பைக் கொடுக்க, இன்றைக்கு அது பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறும் அளவுக்கு பெரும் வளர்ச்சிகண்டிருக்கிறது.

லாபத்தில் ஆட்டுப் பண்ணை 
பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!

அருண்குமாரைச் சந்திக்க தோப்புக்காட்டிலுள்ள அவரது ஆட்டுப் பண்ணைக்குச் சென்றோம். அந்திவேளையில் இடி, மழைக்கு இடையே ஒரு கப் டீயோடு நம்முடன் பேச ஆரம்பித்தார்.

“நல்ல பசுமையான, பெரும் இரைச்சலில்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு வெளியில் சென்று வேலை பார்க்க சுத்தமாக விருப்பமில்லை. படிச்சு முடிச்சதும் சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்யணும்னு முடிவு செஞ்சேன். எந்த பிசினஸ் செய்யறதுன்னு கொஞ்சம்கூட ஐடியா இல்லை. யதார்த்தமாக ஒருநாள், சாலையோரம் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த வயசானவங்களைப் பார்த்ததும் ‘இவங்க காலத்துக்குப் பிறகு இந்த வேலையை யார் செய்வாங்க!’னு மனசுல ஒரு கேள்வி `பளிச்’னு வந்துபோச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதேநேரம், இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகிட்டு வர்றதும், எதிர்காலத்தில் இதற்கான மார்க்கெட்டும் சிறப்பா இருக்கும்னும் புரிஞ்சுக்க முடிஞ்சுது. அந்தப் புள்ளியில், ஆட்டுப் பண்ணைதான் இனி நம்மளோட எதிர்காலம்னு முடிவு செஞ்சேன்” என்று உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் அருண்.

லாபத்தில் ஆட்டுப் பண்ணை 
பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!

தொடர்ந்து பேசியவர், “ `ஆட்டுப் பண்ணை வைக்கலாம்னு இருக்கேன்’னு மத்தவங்ககிட்ட நான் சொன்னதும், எதிர்பார்த்த ரியாக்‌ஷன்தான் கிடைச்சுது. ‘எம்.பி.ஏ படிச்சிட்டு ஆடு வளர்க்கிறேன்னு சொல்றியே, நீ என்ன முட்டாளா?’னு பலரும் கேட்டாங்க. நான் படிச்சு முடிச்ச 2009 சமயத்துல ஐ.டி ஃபீல்டு உச்சத்துல இருந்தது. பெரிய ஐ.டி கம்பெனியில, ஏ.சி-யில உட்கார்ந்துகிட்டு லட்சக்கணக்குல சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, `ஒரு தொழில்ல இறங்கி, முட்டி மோதி ஜெயிச்சு வர்றதுதான் திருப்தியா இருக்கும்’னு மனசு சொல்லிச்சு. நண்பர்கள்கிட்ட கடனை வாங்கி 6 லட்ச ரூபாய் முதலீட்டில் 20 தலச்சேரி ஆடுகளடு சொந்த நிலத்திலேயே ‘விநாயகர் ஆட்டுப் பண்ணை’ என்ற பெயரில் ஒரு சின்ன பண்ணையை ஆரம்பிச்சேன்.

விவசாய குடும்பத்தில் பிறந்து ஆடு, மாடு மேய்ச்சிருந்தாலும் ஆடுகளைப் பராமரிப்பது, நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதுனு ஒரு பண்ணையை நிர்வகிக்கிறது பெரும் சிரமமாக இருந்துச்சு. அடுத்தடுத்து ஆடுகளுக்கு வந்த நோய்களைப் பார்த்து, `என்ன செஞ்சு சமாளிக்கப் போறோமோ’னு தெரியாம குழம்பிப் போயிட்டேன். காரணம், குட்டிகளின் இறப்பு அதிகமாக இருந்துச்சு. நான் விற்பனை செய்த ஆடுகளைவிட, மண்ணுல புதைச்ச ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 120 ஆடுகளை அப்படி நான் இழந்தேன். கண்ணு முன்னாடியே ஒவ்வொரு ஆடும் சாகிறதைப் பார்த்துட்டு, நான் அடைஞ்ச வலியும் வேதனையும் என் வாழ்க்கையில மறக்க முடியாத துயரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு ஆட்டுக்குட்டியும் இறக்கிறப்போ, `அது எதனால இறந்துச்சு’னு ஆராய ஆரம்பிச்சேன். இதில் சுமார் 10 லட்ச ரூபாய்க்கு மேல நஷ்டம் ஏற்பட்டுச்சு. அந்தச் சமயத்துல பைக்குக்கு பெட்ரோல் போடக்கூட காசு இருக்காது. வாழ்க்கை வெறுத்துப்போற அளவுக்குப் பல பிரச்னைகளை அப்போ நான் சந்திச்சேன்.

ஒரு தொழிலைச் செஞ்சா எவ்வளவு லாபம் கிடைக்கும்கிறதுக்கு முன்னாடி அதில் என்னென்ன சிக்கல்கள், பிரச்னைகள் இருக்குங்கிறதைக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன். என்னோட ஒவ்வொரு செயலுக்கும் என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். ஆட்டுக்குட்டிகளைக் குழந்தை மாதிரி பராமரிக்க ஆரம்பிச்சேன். நான் பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படிச்சிருந்ததால, மருந்து சம்பந்தமாக டாக்டர்கள் சொல்றதைப் புரிஞ்சிக்க முடிஞ்சுது. கால் உடைஞ்சா எப்படிக் கட்டுபோடுறது, அடிபட்டா எப்படி முதலுதவி கொடுக்குறது, ஆட்டுக்கு மடிவீக்கம் வந்துட்டா என்ன செய்யறதுனு நோய்களை உடனே கண்டறிஞ்சு சிகிச்சை கொடுத்தேன்.

லாபத்தில் ஆட்டுப் பண்ணை 
பிசினஸ்..! - ஆச்சர்யப்படுத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!

இப்படி 2009-ல் ஆரம்பிச்சு 2012 வரையான மூணு வருஷத்துல ஓரளவுக்கு மேல வந்துட்டேன். பிறகுதான் எங்க வீட்லயே என்னை நம்ப ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு என்கிட்ட 200 தலச்சேரி ஆடுகள் இருக்கு. ‘விநாயகர் கோட் ஃபார்ம்’ என்றிருந்த சிறிய பண்ணையை, ‘விநாயகர் கோட் ஃபார்ம் பிரைவேட் லிமிடெட்’ என்ற அளவுக்கு பிரமாண்டமா, பெரிசா வளர்த்திருக்கேன்.

என்கிட்ட வந்தா நல்ல தரமான தலச்சேரி ஆடு கிடைக்கும்கிறதை மக்கள் நம்புறாங்க. இந்த வளர்ச்சிக்கு நான் கொடுத்தது 10 ஆண்டுக்கால கடுமையான உழைப்பு மட்டுமே. இன்னைக்கு மும்பை வரைக்கும் நான் ஆடு சப்ளை பண்றேன். கர்நாடகா, கேரளா, தமிழகம் முழுக்க இருந்தும் என்கிட்ட ஆடு கேக்குறாங்க.

ஒரு நாளைக்கு எனக்கு 100 போன் வருது. எடுத்துப் பேச நேரமில்லை. மாசம் 150 ஆடுகளை விற்பனை செய்யறேன். என்னோட மாத வருமானத்தை லட்சக்கணக்கா மாத்தியிருக்கேன். என்கிட்ட இருந்து ஆடுகளை வாங்கிட்டுப் போய் நிறைய பேர் சிறிய அளவில் பண்ணைகளை அமைச்சிருக்காங்க. இந்தப் பண்ணை தொழிலில் நான் பட்ட கஷ்டங்களை அவங்க படக் கூடாதுன்னு ஆடுகளை எப்படிப் பராமரிச்சு வளர்க்கணுங்கிற வழிமுறைகளைப் புத்தகமாக்கிக் கொடுக்கிறேன். எந்தவிதமான ஆலோசனையைக் கேட்டாலும் சொல்லித் தர்றேன். என்னை நம்பி கிட்டத்தட்ட 70 சிறிய பண்ணைகள் இருக்கு. கல்லூரி மாணவர்கள், அவங்களோட ஐ.டி கார்டைக் கொண்டு வந்தா எங்களோட பண்ணையைச் சுத்திப் பார்க்க அனுமதிக்கிறதோட, இலவசப் பயிற்சியும் தர்றேன்.

இன்றைக்கு கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் அடிபட்டுக் கிடக்கு. ஆனா, உணவு சார்ந்த பொருள்கள் குறிப்பாக, இறைச்சிக்கான தேவைகள் குறைந்தபாடில்லை. நாட்டுக்கோழிக்கு மாற்றா பிராய்லர் சிக்கன் இருக்கு. ஆனா, ஆட்டுக்கறிக்கு மாற்றா எதுவும் இல்லை. அதனாலதான் ஆட்டிறைச்சியோட தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு.

இன்றைய நிலவரப்படி, ஆட்டை உயிர் எடை ஒரு கிலோ 450-500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்கிறோம். ஆட்டுப் பால்ல சோப்பு தயாரிக்கிறோம். மாசம் கிட்டத்தட்ட 150 சோப் வரைக்கும் மக்கள் வாங்குறாங்க. விரும்பிக் கேக்குறவங்களுக்கு ஆட்டுப்பாலும் கொடுக்குறோம்.

‘நான் 50 ஆடு வாங்கி பண்ணை போட்டா, மாசம் எவ்வளவு லாபம் கிடைக்கும்’னு பலரும் கேக்குறாங்க. நல்ல கேள்விதான். வெறும் வருமானத்தை மட்டும் மனசுலவெச்சுக்கிட்டு இந்தத் தொழிலைச் செய்ய வராதீங்க, ப்ளீஸ். இந்தத் தொழிலை உணர்வுபூர்வமாக அணுகினாத்தான் வெற்றி கிடைக்கும். பணத்தைப் போட்டு பண்ணை அமைச்சா மட்டும் ஜெயிச்சிட முடியாது. தினமும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது பண்ணையில இருக்கணும். இந்தத் தொழில்ல இருக்கிற நெளிவுசுளிவுகளை மொதல்ல கத்துக்கணும். என்ன பிரச்னை, அதை எப்படிச் சமாளிக்கணும்கிறதைத் தெரிஞ்சுக்கணும்.

லாபம் சம்பாதிக்கக் குறைஞ்சது 4-5 வருஷமாவது காத்திருக்கணும். பொறுமையும் போராட்டக் குணமும் தேவை.

சிரமப்படாம எந்தத் தொழில்லயும் யாரும் ஜெயிக்க முடியாது’’ என்றவர், தனது ஆட்டுப் பண்ணையின் மேனேஜரை அழைத்துப் பேசத் தொடங்க, நாம் விடைபெற்றோம்.